பொ.மனோ
பகுதி 1 : பரிணாமத்தின் பல பரிமாணங்கள்
உயிர்வாழ்வதற்கு ஏற்ற சூழலைக்கொண்ட ஒரே ஒரு கிரகமாக தற்போதுவரை ஏகோபித்த உரிமையை கொண்டாடிவரும் நாம் வாழும் பூமியானது தன்னகத்தே பல மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரினங்களைக் கொண்டு காத்துவருகிறது. நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரு கலத்தைக்கொண்ட அங்கியாக தோற்றம் பெற்ற உயிரின ஆட்சியானது இன்று பல சிக்கலான கட்டமைப்புகளையுடைய தாவரங்கள், விலங்குகளாக பரிணாம வளர்ச்சியடைந்து அவற்றின் உச்சமாக ஆற்றிவு படைத்த மனிதனை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு யுகத்திலும் ஏதாவது ஒரு உயிரினம் கூர்ப்பில் தான் பெற்ற சாதகமான இயல்புகளை கொண்டு ஏனைய இனங்களை விட தன்னை மேன்நிலைப்படுத்தி பூமியின் ஆட்சியான உயிரினமாக இருப்பதும் பின்னர் அவ்வினம் பூமியில் ஏற்பட்ட பாரிய எரிகற்களின் மோதுகை, எரிமலைக்குமுறல்கள், நிலநடுக்கங்கள், வெள்ளப்பெருக்குகள் போன்ற இயற்கை அனர்த்தங்களாலும் அவற்றை தொடர்ந்து ஏற்பட்ட காலநிலை மாற்றங்களாலும் முற்றாக அழிவடைவதும் அவ்வெற்றிடத்தை இன்னுமொரு ஆட்சியான உயிரினம் இட்டு நிரப்புவதுமாக இருந்துவந்துள்ளது.
அந்தவகையில் இரண்டு லட்சம் வருடங்களுக்கு முன் தோற்றம் பெற்றதாக நம்பப்படும் மனித இனமானது (Homo sapiens) இன்றுவரை தனது ஆட்சியை பூமியில் நிலைநிறுத்தியுள்ளது. விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மூலம் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ள இந்நவீன மனிதன் ஏனைய உயிரினங்களைவிட பூமியின் இயற்கைச் சமநிலையில் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம். இம்மனிதன் எதிர்காலத்தில் கூர்ப்பில் எத்திசையில் பயணிப்பான் என்பதும் அப்போது அவன் தனது இனத்தின் மீதும் பூமியின் மீதும் எவ்வகையான தாக்கங்களை ஏற்படுத்துவான் என்பதும் தொடர்பான கருத்துக்கள் பல ஆய்வாளர்களின் கணிசமான கவனத்தை ஈர்த்துள்ளது.
உயிரினங்களின் தோற்றம் அவற்றின் பல்வகைத்தன்மை தொடர்பாக அதுவரை காலமும் இருந்துவந்த – அதாவது பூமியிலுள்ள ஒவ்வொரு இனமும் தனித்தனியாக தோற்றம்பெற்றன என்றும் அவை நிலையானவை – என்றதுமான தவறான கொள்கைகளை சாள்ஸ் டாவினின் (Charles Darwin) ‘இயற்கைத் தேர்வு’ (Natural Selection) தொடர்பான கூர்ப்புக்கொள்கையானது தலைகீழாக மாற்றிவைத்தது. அவர் 1859 ம் ஆண்டில் தனது ‘உயிரினங்களின் தோற்றம்’ (The Origin of Species) என்ற ஆய்வுநூலில் உயிரினங்கள் அனைத்தும் ஒரு பொதுவான ஆரம்பத்திலிருந்து தோற்றம் பெற்றே இயற்கைத்தேர்வினூடாக பல்வகைத்தன்மை பெற்றன என்றும் இச்செயன்முறையானது ஒரு தொடர்ச்சியான நிகழ்வென்றும் தனது முடிவினை முன்வைத்தார். அவரது இயற்கைத்தேர்வு கொள்கையானது பின்வருமாறு அமைகிறது.
- ஒரு குடித்தொகையிலுள்ள ஒவ்வொரு தனியனும் (individual) ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டது. அந்த வேற்றுமை (variation) ஆனது மரபுவழியாக அதன் எச்சங்களுக்கு கடத்தப்படக்கூடியது.
- சூழலுடன் ஒத்துவாழ முடியாத தனியனுக்கு சூழலில் அது எதிர்கொள்ளும் சவால்களிலிருந்து தப்பி உயிர்பிழைத்து இனப்பெருக்கத்திலீடுபடும் வாய்ப்பு மிகக் குறைவு. சூழலுடன் ஒத்து வாழும் தனியன் தப்பிப்பிழைத்து இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு தனது மரபுவழியாக பெறத்தக்க பண்புகளை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லும். இச்செயன்முறையே இயற்கைத்தேர்வு முறையை உருவாக்குகிறது.
- இவ்வாறு மெதுவாக நடைபெறும் இயற்கைத்தேர்வு முறையானது குடித்தொகைகளில் சுற்றுச்சூழலுடன் ஒத்துவாழ்வதற்கான இசைவாக்கத்தை ஏற்படுத்துகிறது. இறுதியில் அக்குடித்தொகையில் சிறிது சிறிதாக தோற்றம்பெற்ற வேற்றுமைகளானது புதிய இனத்தோற்றத்திற்கு வழிவகுக்கிறது.
இந்த வகையில் மனிதன் அவனது மூதாதையர்களான மனிதக் குரங்கிடம் இருந்தே கூர்ப்படைந்தான் என்ற கருத்து, டாவினின் கொள்கையின் பின் முன்வைக்கப்பட்டது. இதற்கு தோமஸ் ஹக்ஸ்லி (Thomas Huxly) என்ற ஆய்வாளரின் கருத்தும் வலுச்சேர்த்தது. ஆனால் டாவினின் கோட்பாடானது ஒரு உயிரினம் தனது பண்புகளை எப்பொறிமுறையினால் அதனது எச்சங்களுக்கு கடத்துகிறது என்பதையும் விலங்குகளில் காணப்படும் சிக்கலான கட்டமைப்பையுடைய அங்கங்கள் (organs) எவ்வாறு மெதுவாக நடைபெறும் இயற்கைத்தேர்வு முறையினால் உருவாக்கம் பெற்றன என்பதையும் விளக்க தவறிவிட்டது. டாவினின் கொள்கையை ஆதரித்த பலரில், முக்கியமாக அல்ஃரட் ரசல் வலஸ் (Alfred Russel Wallace) உம் சாள்ஸ் லயல் (Charles Lyell) உம் மனிதனின் தனித்துவமான பண்புகளான மனவாற்றலையும் தார்மீக பண்புகளையும் இயற்கை தேர்வு முறையால் விளக்கப்படுத்த முடியாது என்ற வாதத்தை முன்வைத்தார்கள்.
இதற்கு சரியான பதில் கிடைக்கப்பெறாவிட்டாலும் இதன்பின்னர் 1936 – 1947 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பல உயிரியலாளர்களின் உதவியுடன் டாவினின் இயற்கைத்தேர்வு கொள்கையானது மரபியல் (genetics), தொல்லுயிரியல் ஆய்வு (paleontology), உயிரியல் ஒழுங்குமுறைகள் (biological systematics) என்பவற்றுடன் இணைக்கப்பட்டு நவீன டாவினின் கோட்பாடு/ நவீன பரிணாமத் தொகுப்பு (Neo-Darwinism/ The Modern evolutionary synthesis) உருவாக்கப்பட்டது. இக்கோட்பாட்டின்படி ஒரு தனியனுடைய பண்புகள் அதன் எச்சங்களுக்கு மரபணுமாற்றுமுறை (genetic transfer) மூலம் கடத்தப்படுவதினாலேயே கூர்ப்பு நடைபெறுவதாகவும் இம்மரபணு மாற்றுமுறையானது இயற்கைத் தேர்வு, மரபணுவின் நகர்வு (genetic drift), பிறழ்வு (mutation), பரம்பரைஅலகின் ஓட்டம் (gene flow) என்ற காரணிகளாலேயே தீர்மானிக்கப்படுவதாகவும் கொள்ளப்பட்டது.
நவீன டாவினின் கோட்பாட்டினைக்கொண்டு ஆய்வாளர்கள் பூமியில் ஒருகல அங்கியின் தோற்றத்திலிருந்து சிக்கலான கட்டமைப்பைக் கொண்ட மனிதன் வரை எவ்வாறு பரிணாமவளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்பதை பல்வேறு யுகங்களாகப் பிரித்து ஆராய்ந்து ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளார்கள். அந்த வகையில் எவ்வாறு மனிதக்குரங்கிலிருந்து பலபடிநிலை மாற்றங்களினூடாக நவீன மனிதன் உருவானான் என்பதை சற்று நோக்கினால்,
Homo sapiens sapiens எனும் இனமே இப்போது Homo என்ற சாதியில் (genus) எஞ்சியுள்ள ஒரே ஒரு இனமாகும். ஆதாரங்களின்படி மனிதனின் ஆதி மூதாதையரான Homo habilis எனும் இனம் 2.4 – 1.4 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியில் தெற்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் தோற்றம்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து H.rudolfensis (1.9-1.6Ma), H.erectus (1.8 Ma- 70000 வருடங்களுக்கு முன்), H.antecessor (1.2Ma – 500ka), H.rhodesiensis (300ka- 125ka) H.neanderthalensis (40000 – 30000 வருடங்களுக்கு முன்) என பலபடிநிலைகளினூடாக பரிணாமமடைந்து நவீன மனிதன் உருவாகியுள்ளான். இவற்றிலே H.erectus உம் H.neanderthalensis உம் குறிப்பிட்ட காலப்பகுதியில் H.sapiens உடன் சமகாலத்தில் வாழ்ந்ததற்கான தொல்லுயிரியல் ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இதில் H.neanderthalensis ஆபிரிக்காவுக்கு வெளியே முக்கியமாக ஐரோப்பா மற்றும் ஆசியாவிலேயே தோற்றம் பெற்றதாகவும் ஆபரிக்காவை விட்டு வெளியேறிய நவீன மனிதன் இவ்வினத்துடனும் இனக்கலப்பில் ஈடுபட்டதாகவும் தற்போதைய ஆய்வாளர்கள் நம்புகின்றனர். பின்னர் இவ்வினங்கள் நவீன மனிதனுடன் ஏற்பட்ட போட்டியின் காரணமாக அழிவடைந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. நவீன மனிதனுக்கும் அவனது மூதாதையினருக்கும் இடையேயுள்ள பிரதான வேற்றுமைகள் என்னவென்றால் அவை மனித மூதாதையர் கொண்டிராததும் நவீன மனிதன் கொண்டுள்ளதுமான நிமிர்ந்த தோற்றமும் அதீத நுண்ணறிவுமேயாகும். நுண்ணறிவு வளர வளர மனிதன் கருவிகளை பயன்படுத்த ஆரம்பித்ததோடு நாகரீகமாகவும் வாழப்பழகிக் கொண்டான். இன்று விஞ்ஞான அறிவோடு விஸ்வரூபம் எடுத்து நிற்கிறான்.
நுண்ணறிவினது வளர்ச்சிப்போக்கு பற்றிய ஆராய்ச்சிகள் தற்போது விஞ்ஞானிகள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. நுண்ணறிவின் வளர்ச்சிப்போக்கானது கூர்ப்பில் மனித மூளையின் கனவளவு அதிகரிப்போடு நேரடியான தொடர்பைக்காட்டுவதாக உள்ளது. Homo habilis இனத்தின் மண்டைஓட்டை ஆராய்ந்தபோது அவற்றில் மூளையின் கனவளவு வெறும் 500 – 600cm3 அளவே இருந்துள்ளது. ஆனால் மூளையின் பருமன் பரிணாம வளர்ச்சிப்போக்கில் ஏனைய மனித மூதாதையர்களில் படிப்படியாக அதிகரித்து இன்றைய நவீன மனிதனில் அதன் கனவளவானது 1200 – 1850cm3 ஆக காணப்படுகின்றது. இது மூளையின் பருமனில் மூன்று மடங்கு அதிகரிப்பைக் காட்டுகின்றது. அந்தவகையில் மூளையின் பருமன் அதிகரிப்பு நுண்ணறிவின் வளர்ச்சியில் பாரிய பங்களிப்பை செய்துள்ளது.
ஆனால் சில ஆய்வாளர்களின் கருத்துப்படி நுண்ணறிவானது கூர்பினூடாக படிப்படியாக அதிகரித்திருந்தாலும் அண்மைக்காலம் வரை மனிதன் தற்போது கொண்டுள்ள பாரிய நுண்ணறிவு வளர்ச்சியைப் பெற்றிருக்கவில்லை எனவும் சில ஆயிரம் வருடங்களினுள்ளே மூளையின் பருமனிலே பாரிய மாற்றமெதுவும் ஏற்படாதபோதும் நுண்ணறிவு பல மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான காரணத்தை அறிய பல விஞ்ஞானிகள் முற்பட்டுக் கொண்டிருக்கையில் ‘புராதன விண்வெளி கோட்பாட்டாளர்கள்’ (Ancient Astronaut Theorists – AAT) என்று தம்மை அடையாளப்படுத்தும் ஆய்வாளர்கள் சிலர் பின்வருமாறு அதற்கு விளக்கமளித்துள்ளனர். எவ்வாறெனில் குறுகிய காலப்பகுதியில் மனிதன் அடைந்த இப்பாரிய நுண்ணறிவு வளர்ச்சியானது இயற்கையான பரிணாமவளர்ச்சியினூடாக ஏற்பட்ட ஒரு மாற்றம் அல்லவெனவும் அது மனிதனைவிட நுண்ணறிவில் அதீத வளர்ச்சியடைந்த வேற்றுக் கிரகவாசிகளின் (extraterrestrials) தலையீட்டின் காரணமாக ஏற்பட்டதெனவும் கூறுகின்றனர்.
மனிதர்களை இவ்வேற்றுக்கிரக வாசிகளால் உருவாக்கப்பட்ட அல்லது அவர்கள் வழி வந்த இனமாக கருதும் இவர்கள், நமது மூதாதையர்கள் வேற்றுக்கிரக வாசிகளையும் அவர்களது அதிநவீன தொழிநுட்பங்களையுமே அளப்பரிய சக்தி கொண்ட கடவுளாகவும் தெய்வத் தூதுவர்களாகவும் பிழையாக கற்பிதம் கொண்டதாக வாதாடுகின்றனர். மனித வரலாற்றை பின்னோக்கிப் பார்க்கும்போது பல முக்கியமான வரலாற்று மாற்றங்களின்போதும் இவ்வேற்றுக்கிரகவாசிகளின் பிரசன்னம் பூமியில் இருந்துள்ளது எனவும் இவர்களே மனிதனின் பரிணாம வளர்ச்சியையும் வரலாற்றினையும் நெறிப்படுத்தினார்கள் எனவும் நம்புகின்றனர். அந்தவகையில் இவ்வேற்று கிரகத்தவர்கள் பண்டைய மனிதனில் பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு மனிதனின் உடல் ஆற்றலையும் நுண்ணறிவினையும் அதிகரிக்க முயன்றிருப்பதாக பல ஆதாரங்களையும் முன்வைக்கின்றார்கள்.
இக்கொள்கையை தீவிரமாக சார்ந்து நிற்கும் எரிக் வொன் டெனிக்கன் (Erich Von Daniken) எனும் ஆய்வாளர் Chariots of the Gods எனும் இது தொடர்பான தனது ஆய்வு நூலில் இங்கிலாந்தில் அமைந்துள்ள ஸ்ரோன்ஹென்ஞ் (Stonehenge), பொலிவியாவின் திவானாகு (Tiwanaku) பகுதியிலுள்ள புமாபுங்கு (Pumapunku), ஈஸ்டர் தீவின் மொய் (Moa of Ester Island), கிசாவின் உயர்ந்த பிரமிட் (Great Pyramid of Giza) போன்ற பல புரதான நினைவுச்சின்னங்களின் கட்டுமானத்தில் நவீன சிக்கலான தொழிநுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அத்தொழிநுட்பத்தை வேற்று கிரகத்துவாசிகளிடம் இருந்து நமது மூதாதையர்கள் பெற்றுக்கொண்டு அவற்றை கட்டியிருக்கலாம் அல்லது வேற்றுக்கிரகத்து வாசிகளே அவற்றை கட்டியிருக்கலாம் எனவும் குறிப்பிடுகிறார்.
கிழக்கத்தைய மற்றும் மேற்கத்தைய புராணங்களில் வர்ணிக்கப்படும் மிருக-மனித கலப்பு உருவங்களும் எகிப்தில் அமைந்துள்ள பிரமிட்டில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களிலும் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களிலும் காணப்படும் மிருகத்தலையுடன் கூடிய உருவங்களும் மேலும் அங்கே கண்டெடுக்கப்பட்ட சில எலும்புக்கூடுகளும் மனிதனது மரபணுக்களை விலங்குகளின் மரபணுக்களுடன் கலந்து மரபணுப்பொறியியல் முறை மூலம் புதிய இனங்களை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாக ஆதாரம் காட்டுகின்றனர். இவை பண்டைய மனிதர்களின் புனைக்கதைகளின் கதாபாத்திரங்களாக இருக்க வாய்ப்பிலை ஏனன்றால் அவர்கள் எப்போதும் தாம் பார்ப்பவற்றையே ஓவியங்களாக அல்லது சிற்பங்களாக வடிக்கும் வழக்கத்தை கொண்டிருந்தவர்கள். இந்தவகையில் தமது மரபணுக்களை மனிதர்களின் மரபணுக்களுடன் கலந்து இன்றைய அதீத நுண்ணறிவுள்ள நவீன மனிதனை வேற்றுக்கிரக வாசிகள் உருவாக்கியிருக்கலாம் எனக்கூறி, மிகக்குறுகிய காலப்பகுதியிலே மனிதன் அடைந்த பாரிய நுண்ணறிவு வளர்ச்சிக்கு தமது புதிய கருத்தியலை காரணமாக முன்வைக்கின்றனர்.
புராதன விண்வெளி கோட்பாளர்களின் இக்கருத்தியல் தற்போதுள்ள சமயங்களையும் கடவுள் வழிபாட்டு முறைகளையும் கேள்விக்குள்ளாக்கியதோடு விஞ்ஞானிகளிடையே பல வாதப் பிரதிவாதங்களையும் தோற்றுவித்தது. இதற்கு முக்கிய காரணம் இதுவரை இப்பிரபஞ்ஞத்தில் உயிர்வாழ்வதற்கேற்ற வகையிலுள்ள இன்னுமொரு கிரகத்தை விண்வெளி ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்பதேயாகும். ஆனால் அவ்வாறான பல கிரகங்கள் இருப்பதற்கும் அவற்றில் நம்மைவிட தொழிநுட்பத்தில் பாரிய வளர்ச்சியடைந்த இனங்கள் இருப்பதற்குமான வாய்புகளை மறுப்பதற்கில்லை.
கூர்ப்பினூடக மனித இனம் நுண்ணறிவிலே ஏனைய இனங்களைவிட இமாலய வளர்ச்சியடைந்திருந்தாலும் ஒரு சில முக்கியமான பண்புகளை முற்றாக இழந்துள்ளதென்றே எண்ணத்தோன்றுகிறது. அவற்றில் முக்கியமானது நிலநடுக்கங்கள், எரிமலைக் குமுறல்கள், சுனாமிகள் போன்ற இயற்கை அழிவுகளை முன்கூட்டியே உணர்ந்தறியும் அறிவாற்றலாகும். சாதாரண சிற்றெறும்பிலிருந்து பாம்புகள், டொல்பின் மீன்கள், பறவைகள், நாய்கள், குரங்குகள் என பொதுவாக அனைத்து உயிரினங்களும் இவ்வழிவுகளை பல மணி நேரங்களுக்கு முன்கூட்டியே உணர்ந்தறிந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்வதையும் விநோத சத்தங்களை எழுப்புவதையும் பல ஆய்வாளர்கள் விலங்குகளின் நடத்தையினை ஆய்வு செய்ததன் மூலம் கண்டுள்ளனர். அந்தவகையில் ஏனைய உயிரினங்கள் அவ்வாற்றலைக் கொண்டுள்ளபோது அவற்றைவிட கூடிய நுண்ணறிவுடைய மனிதனுக்கு ஏன் இவ்வறிவு மேலும் சிறப்பாக விருத்தியடையாமல் முற்றாக அற்றுப்போனதென்று தெரியவில்லை. இவ்வறிவானது மனிதனது பரிணாம வளர்ச்சியில் திட்டமிட்டு மரபணுப் பொறியியல் முறையால் அழிக்கப்பட்டுள்ளதா? இதற்கும் புராதன விண்வெளிக் கோட்பாட்டாளர்கள் கருதுவது போன்று வேற்றுக்கிரக வாசிகளுக்கும் ஏதேனும் தொடர்புண்டா?
பூமியிலே மனித சாம்ராஜ்யத்தை சத்தமில்லாமல் இடையிடையே ஆட்டம் காணவைப்பவை தான் வெற்றுக்கண்ணால் காணமுடியாத நுண்ணுயிர் கூட்டங்கள். இவற்றில் மிக முக்கியமானவை பல மில்லியனுக்கும் மேற்பட்ட இனங்களாக பெருகிக்கிடக்கும் வைரஸ், பக்ட்டீரியா போன்ற தொற்றுக் கிருமிகள். இவை உலகின் மூலை முடுக்கெங்கும் பரவி உயிர்வாழ்வதற்கரிய இடங்களிலும் தமது இருப்பை நிறுவியுள்ளன. மனித வரலாற்றிலே இக்கிருமிகளால் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பல மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. இதற்கு உதாரணங்களாக 14ம் நூற்றாண்டில் 75 மில்லயனுக்கும் மேற்பட்ட மக்களை காவுகொண்டு ஐரோப்பாவின் சனத்தொகையினை 30% ஆல் குறைத்த பிளேக் (plague) எனும் கொள்ளை நோயினையும் 18ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஐரோப்பாவில் மட்டும் ஆண்டுதோறும் 400,000 மக்கள் கொல்லப்படக் காரணமான சின்னம்மை (small pox) நோயினையும் குறிப்படலாம்.
வேகமாக பிறழ்வுக்கு உட்படக்கூடிய இந்நோய்க்கிருமிகள் குறிப்பாக வைரஸ் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் புதுப்புது வடிவெமெடுத்து பல ஆட்கொல்லி தொற்று நோய்களை பரப்பிவருகின்றன. இந்நோய்தொற்றுக்கு உட்படும் மனிதர்கள் நோய்க்கிருமிக்கெதிரான பிறபொருள் எதிரிகளை (antibodies) தமது நிர்ப்பீடனத் தொகுதியில் (immune system) தோற்றுவிக்கும் வரை அத்தொற்றிலிருந்து முற்றாக குணமடைய முடியாது. பிறபொருள் எதிரிகளை தோற்றுவிக்கும் மனிதர்கள் அந்நோய்கெதிரான எதிர்ப்புசக்தியைப் பெற்று அதிலிருந்து மீள்வதுடன் அந்நோய் தாக்கம் மீண்டும் ஏற்படாமலும் பாதுகாக்கப்படுகிறார்கள். இந்தவகையில் இந்நோய்க்கிருமிகள் மனிதனின் நிர்ப்பீடனத்தொகுதியை வலுவடைய செய்துள்ளதுடன் டாவினின் இயற்கைத் தேர்வு முறையினால் மனித பரிணாம வளர்ச்சியை நெறிப்படுத்தியுமுள்ளது. தற்போது மருத்துவ வளர்ச்சியின் உதவியுடன் இத்தொற்றுக்கள் வேகமாக பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டாலும் எதிர்காலத்தில் இவற்றைவிட மிக உக்கிரமான நோய்க்கிருமிகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் நிறையவே உண்டு. புராதன விண்வெளி கோட்பாடாளர்கள் பூமியில் புதிதாக தோன்றும் நோய்க்கிருமிகளுக்கு காரணம் வேற்றுக்கிரக வாசிகளே என்றும் இது மனிதனது பரிணாம வளர்ச்சியை நெறிபடுத்துவதற்கான ஒரு முயற்சியாக இருக்கலாம் அல்லது பூமியானது அவர்களால் புதிய நோய்க்கிருமிகளை பரிசோதித்து பார்ப்பதற்கான களமாக பயன்படுத்தப்படுவதாக இருக்கலாம் என அனுமானிக்கிறார்கள்.
பகுதி 2 : கூர்ப்பினது எதிர்காலப் போக்கு
அந்தவகையில் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோற்றம்பெற்ற மனித இனம் இன்றுவரை உடற்கூற்றியல்ரீதியாக பாரிய மாற்றங்கள் எதனையும் எட்டவில்லை. மனித இனத்தின் எதிர்கால பரிணாமவளர்ச்சி தொடர்பாக கருத்து தெரிவிக்கும் ஆய்வாளர்களில், தொல்லுயிரியலாளரான இயன் டெரெர்சோல் (Ian Tattersall) மனித இனமானது சிறிய சிறிய குழுக்களாக பிரிந்து தனிமைப்படுத்தப்படாமல் ஒன்றாக இருப்பதோடு அதற்குள் உள்ள வேறுபட்ட மனித வர்க்கங்கள் தொடர்ச்சியாக தங்களுக்குள் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டுவருதால் மனித இனத்தினது மரபணுத் தொகுதியில் குறிப்பிடத்தக்க பிறழ்வுகள் ஏற்பட்டு அது நிலைத்தன்மை அடைந்து அதனூடாக மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அரிதென கூறுகின்றார். மேலும் நவீன மருத்துவ தொழிநுட்ப உதவிகளால் சூழலுடன் ஒத்துவாழ முடியாத பலவீனமான மனிதர்களும் தமது ஆயுட்காலத்தை அதிகரித்து இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதால் டாவினின் இயற்கைத்தேர்வு முறையானது நவீன மனித இனத்தினால் ஓரங்கட்டப்பட்ட ஒரு விடயமாகவேயுள்ளது. இதனால் மனிதன் மேலும் கூர்ப்படைவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவென வாதிடுகிறார்.
நவீன டாவின் கோட்பாட்டின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்த ஜுலியன் ஹக்ஸ்லி (Julian Huxly) எனும் உயிரியலாளர் மனிதனானவன் தற்போது உடற்கூற்றியல்ரீதியாக பரிணாமவளர்ச்சியின் உச்சத்திலிருப்பதாகவும் இனிமேல் ஏற்படும் பரிணாம வளர்ச்சியானது மனம் சார்ந்ததாகவே இருக்குமெனவும் அது அடுத்தகட்ட பாய்ச்சலுக்கான வாசல்படியில் உள்ளதெனவும் கூறியுள்ளார். அந்தவகையில் மனிதன் இன்னும் சிறிதுகாலத்தில் பேர்மனம் படைத்தவனாக பரிணாம வளர்ச்சியடைய வாய்புண்டு. மனவளர்ச்சி ஏற்படவேண்டுமெனில் அதற்கு மூளையும் வளர்ச்சியடைய வேண்டுமென கருதும் சில விஞ்ஞானிகள் கூர்ப்பில் மூளையின் பருமன் மும்மடங்காக அதிகரித்திருப்பதை ஆதாரம் காட்டி மேலும் மூளையின் பருமன் கூர்ப்பினூடாக அதிகரிக்கும் என எதிர்வு கூறியுள்ளனர்.
ஆனால் சில விஞ்ஞானிகள் அதற்கு எதிரான கருத்தை முன்வைக்கின்றார்கள். எவ்வாறெனில் நமது மூளையானது ஏற்கனவே உடலில் பிறப்பிக்கப்படும் சக்தியின் 20% தினை தனது பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்வதாகவும் இது தனி ஒரு அங்கத்திற்கு தற்போதுள்ள மனித உடலால் வளங்கப்படக்கூடிய சக்தியின் உச்ச அளவென்பதாலும் மூளையின் பருமன் கூர்ப்பிலே மேலும் அதிகரிக்கும்போது அதன் அதிகரித்த சக்திப்பயன்பாட்டை பூர்த்திசெய்ய அதிகளவு குருதி மிக வேகமாக இருதயத்தினால் கூடிய விசையுடன் குருதிக்கலன்களினுள் வெளித்தள்ளப்படவேண்டி வருவதால் இருதயத்தின் பருமனும் அதற்கேற்றால்போல் ஏனைய உடல் அங்கங்களினது பருமனும் விருத்தியடைய வேண்டுமென்கிறார்கள். அதனால் மூளையின் பருமன் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு.
அத்தோடு நரம்புக்கூற்றியலாளர்கள் (neurologists) மனித மூளையின் பருமனுக்கும் அது கொண்டுள்ள நுண்ணறிவுக்கும் சம்பந்தமில்லையெனவும் அது மூளை எவ்வளவு வினைத்திறனாக தனது ஏனைய பகுதிகளுடன் நரம்பு கணத்தாக்கு தொடர்புகளை கொண்டுள்ளது என்பதினாலும் பெற்றுக்கொண்ட அநுபவத்தினாலுமே தீர்மானிக்கப்படுவதாக கூறுகின்றனர். இருபதாம் நூற்றாண்டின் மேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் (Albert Einstein) மூளையை ஆராய்ந்த பேராசிரியர் சாண்ட்ரா விட்டில்சன் (Prof. Sandra Witelson) அவரது மூளையானது சாதாரண நுண்ணறிவுடைய மனிதன் ஒருவனின் மூளையின் பருமனை ஒத்ததாகவே இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளார். அந்தவகையில் நவீன மனிதனில் மூளையின் பருமனுக்கும் அதன் நுண்ணறிவுக்குமுள்ள தொடர்பை நிராகரித்த விஞ்ஞானிகள் கூடிய நுண்ணறிவுடைய மனிதர்களின் மூளையானது அதனது ஏனைய பகுதிகளுடன் மிக வினைத்திறனாக தொடர்புபட்டிருப்பதாகவும் அவர்கள் மூளையின் அதிகளவு சதவீதத்தினைப் பாவிப்பதாகவும் கூறுகின்றனர். சராசரி மனிதன் மூளையின் 10% தினையே பாவிக்கிறான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே பரிணாமவளர்ச்சியில் மூளையின் 100% தினையும் பாவிக்குமாற்றல் வரப்பெற்றவனாக மனிதன் தோற்றம்பெற வாய்ப்புண்டு. அம்மனிதன் பேர்மன ஆற்றல் படைத்தவனாக இருப்பான்.
இவ்வாறு பேர்மன ஆற்றல் பெற்ற மனிதன் தனது மனவாற்றலால் இருந்த இடத்திலிருந்து கொண்டே பல செயல்களை செய்து முடிக்கும் ஆற்றலை பெறுவதோடு புதிய புலனறிவுகளையும் கைவரப்பெறுவான். அவற்றில் முக்கியமானவையாக ரெலிபதி (telepathy), ரெலிகைனெசிஸ் (telekinesis), ரெலிரான்ஸ்போடேசன் (teletransportation) என்பவற்றைக் கொள்ளலாம். இவ்வாற்றல்களை இன்று சில மனிதர்கள் கொண்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அது ஆரம்ப நிலையில் இருப்பதாகவே விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவை முழுமையாக விருத்தியடையின், ரெலிபதி மூலம் மனிதன் உலகின் எம்மூலையிலிருந்தாலும் தனக்கு வேண்டியவருடன் மனவாற்றல் மூலம் தொடர்பை ஏற்படுத்தமுடியும். இதனால் உலக தொலைபேசி தொடர்பாடல் முறைமை முற்றாக அழிந்துபோகலாம். எண்ணங்கள் மூலம் மனிதன் உரையாட ஆரம்பிப்பதால் மொழிக்கான தேவையும் அற்றுப்போக வாய்ப்புண்டு. இவ்வாற்றலை அதிகளவு கைவரப்பெற்றவர்கள் தமது எண்ணங்களை மற்றையவர்களின் மூளைக்குள் பலவந்தமாக புகுத்தி அவர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் இடமுண்டு.
ரெலிகைனெசிஸ் மூலம் தூர இருந்துகொண்டே பொருட்களை தனது மனவாற்றலால் இயக்கும் ஆற்றல் படைத்தவனாக இருப்பான். ரெலிரான்ஸ்போடேசன் உதவியுடன் மனிதன் ஒரு சூட்சும வடிவில் தான் நினைத்த மாத்திரத்தில் விரும்பிய இடத்தில் தோன்றுவதற்கான சக்தியைப் பெறுவான். அவனது மனவாற்றலைப் பொறுத்து அவன் பயணிக்கும் தூரம் வேறுபடக்கூடியாக இருக்கும். இப்புலனறிவுகளைக் கொண்டு மனிதன் தனது முப்பரிமாண எல்லைகளை உடைத்து வேறு பரிமாணங்களில் தனது இருப்பை நிறுவுவான். அதன்போது அவன் கால-வெளி எல்லைகளைக் கடந்தவனாகவும் இருப்பான். மேலும் மனிதன் தனது பேர்மனத்தின் உதவியுடன் அட்டமா சித்திகள் அனைத்தையும் கைவரப்பெற்று அதனை அநாயசமாக பாவிக்கும் ஆற்றல் கொண்டவனாக தோற்றம்பெறும் சாத்தியப்பாடுகளும் நிறையவேயுண்டு.
இயற்கைத்தேர்வினூடாக மெதுவாக நடைபெறும் கூர்ப்புச் செயன்முறையானது பல்வேறுபட்ட தொழிநுட்பங்களுடன் கூடிய மனித தலையீடுகள் காரணமாக எதிர்காலத்தில் எவ்வாறு, எத்திசையில் பயணிக்கும் என்பதை யாராலும் அறுதியிட்டுக் கூறமுடியாதுள்ளது. ஆனால் அப்பயணம் தொழிநுட்ப உதவியோடு `செயற்கைதேர்வினூடாக` மிக விரைவாக, அதீத நுண்ணறிவையும் அமரத்துவத்தையும் அடையும் திசையை நோக்கி பயணிப்பதற்கு நிறைய வாய்ப்புக்கள் உண்டு. இந்தவகையில் பரிணாமவளர்ச்சியின் போக்கை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்ட தொழிநுட்பங்களாக மரபணுப் பொறியியல் (genetic engineering), செயற்கை நுண்ணறிவு (artificial intelligence), படியாக்கம் (cloning), நனோ தொழிநுட்பம் (nonotechnoly), எந்திர அறிவியல் (robotics) போன்றன கருதப்படுகின்றன.
இருபது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற மனித மரபணு கருத்திட்டம் (Human Genome Project) மூலம் மனிதனது 23 நிறமூர்த்த சோடிகளிலும் உள்ள DNA களில் காணப்படும் மரபணுக்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டன. இதன் மூலம் ஒவ்வொரு மரபணுவும் உடலின் எத்தகைய தொழிற்பாட்டில் பங்குபற்றுகின்றது என அறியப்பட்டது. இதில் முக்கியமானது பரம்பரையாக கடத்தப்படும் நோய்களுக்கு காரணமான மரபணுக்களையும் கல வயதாதலை (cell aging) கட்டுப்படுத்தும் மரபணுக்களையும் கண்டறிந்ததே. இம்மரபணுக்களை மரபணுப்பொறியியல் முறை மூலம் அகற்றிவிட்டு ஒரு மனிதனை உருவாக்கும்போது அவன் பல பரம்பரைநோய்கள் அற்றவனாகவும் ஆயிரம் வருடங்களுக்கு மேல் உயிர் வாழ்பவனாகவும் இருப்பான். மேலும் இம்முறையால் நுண்ணறிவையும் அதிகரித்துக்கொள்ளலாம் என கருதப்பட்டது. அனால் ஒப்பீட்டளவில் இது ஒரு மெதுவான செயன்முறையாகும். இதனை விட விரைவானதும் வினைத்திறனுமான வளர்ச்சியை நோக்கியதாயுள்ளது நைக் போஸ்ட்ரம் (Nick Bostrom) என்ற தத்துவவாதியால் முன்வைக்கப்படும் மாற்று மனிதத்துவம் (Transhumanism) எனப்படும் மெய்யியல் சார்ந்த நிலைப்பாடு. இது எவ்வாறு தொழிநுட்ப உதவிகளோடு மனிதனது அறிவு, உடல், உளசார்ந்த திறன்களை அதிகரித்து இறுதியில் அமரத்துவத்தை அடையாலாம் எனபது பற்றிய கருத்தை முன்வைக்கிறது. இந்தவகையில் நுண்ணறிவை அதிகரிக்க முயலும் மனிதன் இலத்திரனியல், நனோ தொழிநுட்பம் போன்றவற்றின் உதவியுடன் சிலிக்கானால் ஆக்கப்பட்ட மூளை மேம்பாடுகளை (silicon made brain enhancements) மூளையில் பொருத்தி பாவிக்க தொடங்கும்போது அவன் Homo cyberneticus என்ற புதிய இனமாக தோற்றம் பெறுவான். இத் தொழிநுட்பம் வெற்றியடைகையில் மனிதன் தனது முழு மூளையினையும் கணனிமயப்படுத்த முனையும்போது Homo hybridus என்ற இனமாக மாற்றமடைவான். இவ்வினம் அதனது மூளையைத் தவிர ஏனைய உடலமைப்பில் சாதாரண மனிதனை ஒத்ததாகவே இருக்கும். இவ்வினம் மனிதனைவிட பாரிய நுண்ணறிவு பாய்ச்சலைக் கண்டிருந்தாலும் சாதாரண மனித உடற்கட்டமைப்பு அதனது வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதாக அமையும். இதனால் இறுதியில் முழு மனித உடற்கட்டமைப்பும் இயந்திரமயமாக்கப்பட்டு Homo machinus என்ற இனம் உருவாகலாம். இதன் மூலம் மனிதன் இலத்திரனியலூடான அமரத்துவத்தை (electronic immortality) அடைவான். இவ்வினம் தன்னைப்போன்று பல பிரதிகளை உருவாக்கி மிக வேகமாக பல்கிப்பெருகும். அதன்போது சூழலுடன் ஒத்துவாழமுடியாத நிலையை அடையும் Homo sapiens sapiens முற்றாக Homo machinus இனால் பிரதியீடுசெய்யப்படும். இவ்வினம் தமது மூளையிலுள்ள தகவல்கள் அனைத்தினையும் ஒரு இயந்திர உடலில் இருந்து தரவேற்றி (upload) இன்னுமொரு இயந்திர உடலில், அது வேறொரு கிரகத்தில் இருந்தால்கூட தரவிறக்கம் (download) செய்வதன் மூலம் விரும்பிய வடிவத்தை பெறுவதுடன் ஒளியின் வேகத்துடன் பயணிக்கும் ஆற்றலையும் பெற்றதாக இருக்கும். தமக்குள் ஏற்றதாழ்வுகள் ஏதுமற்ற இவ்வினம் மிகவிரைவாக வளர்சியடைந்து தம்மினப்பரம்பலை மேற்கொள்ள ஏனைய உடுமண்டலங்களை (galaxy) நோக்கிய பயணங்களை மேற்கொள்ளும்.
இவ்வாறு மனிதன் தொழிநுட்ப உதவியால் கணனிமயப்படுத்தப்பட்ட பிரக்ஞையுடன் கூடிய ஒரு இயந்திரமாக மாறி அமரத்துவத்தை அடைந்தாலும் அதன்போது மனிதன் மனிதனாக இருப்பானா என்பது கோள்விக்குரியது. அத்தோடு மனிதன் இயந்திரமாக மாறும் காலகட்டத்தில் ஏற்படும் சில தவறுகள் மனிதகுலத்தை அடியோடு அழிப்பதற்கும் வழிவகுக்கும்.
பாரிய மாற்றங்களை எதிர்நோக்கி நிற்கின்ற இக்காலகட்டத்தில் இனம், மதம், சாதி என பல பிரிவுகளாக பிளவுபட்டிருக்கும் நமது மனித இனமானது இக்குறுகிய நோக்குடைய சிந்தனைகளை உடைந்தெறிந்து ஒரு ஆரோக்கியமான முன்னோக்கிய பாய்ச்சலுக்கு தன்னை தயார்படுத்துமா? அல்லது இப்பிளவுகள் காரணமாக தன்னையே மாய்த்துக்கொள்ளுமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
பகுதி 3 : கூர்ப்படையும் மனிதன் தொடர்பான கேள்வி – பதில்
- 1. சாள்ஸ் டாவினின் (Charles Darwin) இயற்கை தீர்வின் இரண்டாம் அலகு இனிவரும் காலங்களுக்கு பொருந்தாது. இதை இரண்டு மட்டங்களில் ஆராயலாம் ஒன்று இனங்களுக்கான கூர்ப்பு மற்றது தனியன்களுகான கூர்ப்பு. சூழலை தம் தேவைக்காக வளைக்க தெரிந்த இனங்கள் பிழைக்கும். அறிவு ஆற்றலால் சூழலை ஆட்சி படுத்தும் வல்லமை மனிதனின் குறிப்பிடத்தக்க பண்பு. இது கூர்ப்பின் வரலாறில் புதிது, இதுவரை கூர்ப்பில் வல்லாதிக்கத்தை காட்டிய ஏனைய இனங்களான டைனோசர் போன்றவை இயற்கை அழிவில் காணமல் போன போதும் மனித குலம் இந்த வரைவுகள் வராது என்பது என் எண்ணம். தனியன்களுக்கான கூர்ப்பு விதி தனியன் வல்லியனா மெல்லியனா என்பதை பொருத்திருக்கும். இது அரசியல் பொருளாதார மட்டத்தில் ஆராய வேண்டிய விதி. இது குழுக்களுக்கும் பொருந்தும்.
கூர்ப்பு என்பது ஒரு குறிப்பிட்ட கால பகுதியில் சூழலுடன் ஒத்து வாழும் ஒரு குடித்தொகையில் ஏற்படும் மரபுவழியாக கடத்தப்படக்கூடிய மாற்றங்களாகும். சூழலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை இசைவாக்கிக் கொள்ளும் ஒரு தனியன் பெறுகின்ற எல்லா இயல்புகளும் அத்தனியனின் மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தும் வரை மரபுவழியாக கடத்தப்படாது. உ+ம்: இரும்பு வேலை செய்யும் ஒரு மனிதனின் புயத்தசைகள் நாளடைவில் அத்தொழிலுக்கு இசைவாக்கமடைந்து வலுவடைந்து பருமனில் அதிகரிக்கும். ஆனால் அதன் காரணமாக அவனுக்கு பிறக்கும் பிள்ளையும் அவ்வியல்பை கொண்டிருக்குமென்பதில்லை.
கூர்பினை ஒரு தனியனுக்கான கூர்ப்பு, ஒரு இனத்திற்கான கூர்ப்பு என பிரித்து பார்க்கமுடியாது. ஏனெனில் ஒவ்வொரு தனியனுக்குமுள்ள இயல்புகளின் தேறிய பெறுமானமே அத்தனியன் குறித்து நிற்கும் இனத்தின் இயல்புகளை தீர்மானிக்கின்றது. ஆனால் குறித்த அவ்வினத்திலே உள்ள ஒரு குடித்தொகையானது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு தனிமைப்படுத்தப்பட்டு வேறு ஒரு சூழல்காரணிகளுக்கு முகம் கொடுக்கப்படுமாயின் அது நாளடைவில் வேறு ஒரு இனமாக தோற்றம் பெறலாம். ஆனால் அது மிகவும் மெதுவான செயன்முறை.
மனிதனைப் பொறுத்தவரையில் சூழலுக்காக தன்னை மாற்றிய காலம் மாறி சூழலை தனக்கேற்றவாறு மாற்றி முடிந்தவரை அதன் சமநிலையை குழப்பி வாழப்பழகிக்கொண்டுள்ளான். அதுவே மனிதன் தனக்கு அமைத்துக்கொண்ட புதுச்சூழல் ஆகும். இச்சூழலில் நலியன்கள் அழிவடைந்து வலியன்கள் தக்கெனப் பிழைப்பது பிரதானமாக அரசியல் பொருளாதார காரணிகளாலேயே தீர்மானிக்கப்படும். இங்கே நலியன்கள், வலியன்கள் என்பன உடல் வலிமையைவிட அவை கொண்டுள்ள அரசியல் பொருளாதார பின்னணியினாலேயெ தீர்மானிக்கப்படும். இச்சூழலை எதிர்கொண்டு வெற்றிபெறும் தனியனே அடுத்த தலைமுறைக்கு தனது பண்புகளை விட்டுச்செல்லும்.
- 2. மனிதனின் கூர்ப்பு பாதையை பௌதீக மாற்றங்களை காட்டிலும் (like in x-men & famous 4) தொழில்நுட்பம் அறிவு வழியான மாற்றங்களே வகுத்து செல்லும். பௌதீக மாற்றங்கள் கூட அறிவு மற்றும் அதன் வழி வந்த தொழில்நுட்பம் என்பவற்றினால் உருவாக்கப்படும் அன்றி இயல்பாக இராது. ஆனால் இது அமரத்துவம் வரை அழைத்து செல்லுமா என்பது கேள்வியே. குறிப்பாக அதுக்கு கலங்களின் வயதாக்கம் என்பது பெரும் சவாலாக இருக்கும். அப்படியே அமரத்துவம் அடைந்தாலும் அதை கையாளும் முதிர்ச்சி மற்றும் அனுபவம் மனிதனுக்கிலாதது அழிவை நோக்கி இட்டு செல்லும் வாய்ப்பு அதிகம்.
ஆமாம், தொழிநுட்ப உதவியுடனான பெளதீக மாற்றங்களூடாக அமரத்துவத்தை அடைவது மிக்க் கடினமே. மரபணு பொறியியல் முறைமூலம் கலவயதாதலைக் கட்டுப்படுத்தி மனிதன் ஆயுளைப் பெருக்கிக் கொண்டாலும் மூப்படைவதை தடுக்க முடியவில்லை என்பதே உண்மை. ஆனால் இயற்கையாக ஏற்படக்கூடியதாக கருத்தப்படும் பேர்மன பரிணாம வளர்ச்சி மூலம் உடல் மூப்படைவதை தடுக்கும் ஆற்றலைப் பெற மனிதனுக்கு வாய்ப்புள்ளது. அதன்போது அதனைக் கையாளும் முதிர்ச்சியும் அவனுக்கு இருக்கும்.
- 3. பெருமளவில் மாறிவரும் உணவு உற்பத்தியும் பழக்கவழக்கமும் கூர்ப்பில் அல்லது கூர்ப்பால் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
தற்போதைய உணவுப் பழக்கவழக்கங்கள் முக்கியமாக துரித உணவு (fast food) வகைகள் மனிதனது மரபணுக்களில் அதிகளவில் பிறழ்வுகளை ஏற்படுத்துவதாகவும் அதனால் பல வகையான புற்றுநோய்த்தாக்கங்களுக்கு மனிதன் ஆளாகி வருவதாகவும் பல வைத்திய நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இது கூர்ப்பிலே ஒரு ஆரோக்கியமான விடயமில்லை ஏனன்றால் இப்புற்று நோய்கள் முக்கியமாக குடற்புற்றுநோய்கள் மரபுவழியாக கடத்தப்படக்கூடியவை. எனவே மனிதன் தனது உணவுவகைகளிலே உள்ள புற்றுநோய்க்கு காரணமான கூறுகளை (carcinogens) கண்டறிந்து அவற்றை அகற்றுவது தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்வது முக்கியமானது.
- 4. தத்துவத்தளங்களில் ஏற்ப்படும் மாற்றங்கள் கூர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்துமா? அரசியல் பொருளாதார காரணிகள் கூர்ப்பில் எந்தளவு செல்வாக்கை ஏற்படுத்தும்?
ஏலவே குறிப்பிட்ட மாற்று மனிதத்துவம் என்ற தத்துவம் சார்ந்த நிலைப்பாட்டை அதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். தற்போதைய அரசியல் பொருளாதாரக் காரணிகள் மனிதனது பரிணாம வளர்ச்சியில் சில எதிர்மறையான தாக்கங்களையும் ஏற்படுத்தும் என பல ஆய்வாளர்கள் நம்புகின்றார்கள். எவ்வாறெனில் அரசியல் பொருளாதார சிக்கல்களால் பல வாழ்வாதாரப் பிரச்சனைகளை முக்கியமாக உணவு பிரச்சனைகளை எதிர்நோக்கும் நாடுகளிலுள்ள மக்கள் தொடர்ந்து குறைந்த கலோரி உணவுகளை உட்கொண்டுவரும்போது அவர்களின் மூளை குறைந்த கலோரிப் பயன்பாட்டிற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும்போது அம்மக்கள் மந்த புத்தி படைத்தவர்களாக மாற்றம்பெற வாய்ப்புண்டு. மேலும் அவர்கள் உடல் வளர்ச்சி குன்றிய அழகற்ற குள்ளர்களாகவும் நாளடைவில் மாற்றம் பெறுவார்கள். ஆனால் வசதிபடைத்த நாட்டு மக்கள் இதற்கு எதிர்மறையாக நுண்ணறிவு கூடியவர்களாகவும் உயரம் கூடியவர்களாகவும் தோற்றம் பெறுவார்கள்.
- 5. கூர்ப்பு தத்துவங்கள் இயற்கை சமனிலை சுழற்சிக்குள் பொருந்தும் ஆனால் அவை சமநிலையை எதிர்வுகூறவோ உள்ளடக்கவோ முயலவில்லையா? கற்பனைக் கெட்டாத பேரழிவு போன்ற சமனிலை சுழற்சியையும் உள்ளடக்கி ஆராயும் கூர்ப்பு தத்துவங்களுண்டா?
பொதுவாக நான் அறிந்தவரை கூர்ப்பு தத்துவங்கள் இயற்கை அழிவுகளினூடாக ஏற்பட்ட சுற்றுச்சூழல், காலநிலைமாற்றங்கள் எவ்வாறு புது உயிரினங்களின் தோற்றத்துக்கு வழிவகுத்தன என்பது தொடர்பாகவே அதிகம் ஆராய்ந்துள்ளன. எதிர்காலத்தில் ஏற்படும் அழிவகள் தொடர்பானதும் அதனால் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பானதுமான எதிர்வுகூறல்கள் கூர்ப்பியலில் ஆராயப்படவில்லை.
ஆனால் கூர்ப்புக் கொள்கைக்கு எதிரான மாற்றுக் கருத்தாளர்களால் முன்வைக்கப்படும் கருத்தியல் என்னைப் பெரிதும் கவர்ந்துள்ளது. அவர்கள் கருத்துப்படி பூமியானது மனிதனைவிட அதீத நுண்ணறிவுடைய வேற்றுக்கிரக வாசிகளால் ஒரு பரிசோதனைச்சாலையாக பாவிக்கப்படுகின்றது. அந்த வகையில் பூமியிலே உயிரின தோற்றத்திற்கு காரணமாக இருந்த வேற்றுக்கிரகவாசிகள் குறிப்பிட்ட காலப்பகுதியிலே குறிப்பிட்ட இனங்கள் தோற்றம் பெறுவதையும் அவை ஆட்சியான உயிரினமாக மாற்றம் பெறுவதையும் உறுதிசெய்ய யுகந்தோறும் பாரிய இயற்கை அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். அந்த வகையில் மனித தோற்றத்திற்கு முன்னர் மனித இருப்புக்கு ஊறு விளைவிக்கும் அனைத்து பாரிய விலங்குகளும் குறிப்பாக டைனோசர் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு மனிதன் தோற்றம் பெற்ற காலத்தில் இவ்வுயிரினங்கள் அனைத்தும் அற்றுப்போயின என்ற கேள்விக்கு தர்க்கரீதியாக எந்த கூர்ப்பியலாளரும் பதில் கூறவில்லை. மேலும் கூர்ப்பினூடாக மனிதன் தன்னை விலங்குகளிலிருந்து வேறுபடுத்தும் `மனம்` என்ற ஆற்றலை அடையவில்லை அதுவும் வேற்றுக்கிரகவாசிகள் அளித்த கொடை எனவும் கருதப்படுகிறது. எனவே எதிர்காலத்தில் மனிதனைவிட முன்னேற்றகரமான உயிரினங்களை தோற்றுவிக்க இயற்கை அழிவுகளை ஏற்படுத்தி அவர்கள் மனிதர்களை அழிக்கலாம் எனவும் மாற்றுக் கருத்தாளர்கள் நம்புகின்றார்கள்.
- 6. இலத்திரனியல் அமரத்துவம் Homo machinus என்பது matrix திரைப்படத்தில் வருவது போன்றா?
- 7. அப்போ Homo machinus இக்கு இன்பம் துன்பம் எனும் உணர்வுகள் எப்படி நுகரப்படும்? நான் மாயை எனும் பிரக்ஞை மேலோங்காதா? அது விரக்தி அல்லது செயல்படும் விருப்ப்ற நிலைக்கு தள்ளாதா?
6, 7) இப்பகுதிகளுக்கான பதில்கள் எவ்வாறும் அமையலாம். அது வாசகன் அல்லது தரிசகனின் கற்பனா சக்தியைப் பொறுத்தது. இதற்கான பதிலை நான் அளிப்பதைவிட வேறு யாராவது வேறு கோணத்தில் அல்லது தளத்தில் சிந்தித்து அதற்கான பதிலை அளிப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். இது உங்களுக்கான பகுதி……
- 8. புல்லாகிப் பூண்டாகிப் புழுவாய் …..கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய் முனிவராய் தேவராய் …. ஏதும் இது பற்றி கருத்து சொல்ல அவா உண்டா?
என்னைப் பொறுத்தவரையில் சிவபுராணத்தில் கூறப்படும் அவ்வரிகள், சமயரீதியாக சிலரால் ஒரு ஆத்மா ஆனது எவ்வாறு பல பிறப்புகளினூடாக பக்குவப்பட்ட நிலையை அடைகிறது என்பதை கருதுவதாக கொள்ளப்பட்டாலும், அது கூர்ப்பு த்த்துவத்தை விளக்குவதாகவே படுகிறது. புல்லில் தொடங்கும் பரிணாமவளர்ச்சி பல படிநிலைகளினூடாக மனிதனாகமாறி பின்னர் பேயாய் > கணங்களாய் > வல்லசுரராகி முனிவராய் > தேவராய் என்று செல்கிறது. பேய்கள், கணங்கள் என்பன பெளதீக உடல் அற்றதும் சூக்கும உடலை கொண்டதுமான ஒரு நிலையாகும். அதாவது மனிதவுடல் அற்றதும் முப்பரிமாண எல்லைகளை கடந்த்துமான ஒரு படிநிலை.. அவ்வாறு மனிதன் கூர்ப்பில் முன்னேற்றமடைவானா என்று தெரியவில்லை. அது தொடர்பாக யாரும் எதுவும் கூறவும் இல்லை. அடுத்த முக்கியமான விடயமாக நான் கருதுவது தேவர்கள் என்ற நிலையை, நமது இதிகாசப்படி அவர்கள் பாற்கடலைக் கடைந்து பெற்ற அமிர்தத்தை உண்டு அமரத்துவத்தை அடைந்தவர்கள் எனவே மனிதனும் தேவர்களைப் போன்று அமரத்துவத்தை அடைவான் என்று எண்ணத்தோன்றுகின்றது.
- 9. குரங்கிலிருந்து மனிதன் கூர்ப்படைந்தான் என்றால், இன்றைய குரங்குகள் இன்னும் 3000000 வருடங்களில் மனிதனாக கூர்ப்படயுமா?
நவீன டாவினின் கோட்பாட்டின்படி இவ்வுலகிலுள்ள அனைத்து இனங்களும் ஒரேயொரு ஆதிப்பொது மூதைய இனத்திலிருந்தே உருவாகியுள்ளது. பின்னர் படிப்படியாக தோற்றம்பெற்ற ஒவ்வொரு இனத்திலிருந்தும் மற்றைய இனங்கள், ஒரு மரத்திலிருந்து கிளைகள், பின்னர் கிளைகளிலிருந்து கிளைகள் உருவாகுவதுபோன்று பலவகை இனங்களாக பல்கிப்பெருகியுள்ளது. கூர்ப்பு என்பது தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு செயன்முறை. அது தற்போதும் ஒவ்வொரு அங்கியிலும் இனத்திலும் மெதுவாக நடைபெற்ற வண்ணமேயுள்ளது. இரண்டு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பொதுவான ஒரு மூதாதையரிடமிருந்தே நமது மூதாதையரும் மனிதக்குரங்குகளும் தோன்றம் பெற்றன. இம்மனிதக்குரங்குகள் எதிகாலத்தில் தீவிர சுற்றுச்சுழல் மாற்றங்களுக்கு முகங்கொடுக்குமெனின் அது வேறு ஒரு இனமாகக் கூர்ப்படையலாம். அது மனிதனாக கூர்ப்படையுமா என்பது அது சூழலில் எதிர்கொள்ளும் சவால்களைப் பொறுத்தது. இவற்றை பரிசோதனை செய்து பார்க்கமுடியாது ஏனன்றால் ஒரு புதிய இனமொன்று உருவாக பல மில்லியன் வருடங்களும் எடுக்கலாம்..
- 10. ஹோமோ ஹபிளிஸ் (Homo habilis ) என்ற இனம் தோற்றமடைந்தது என்றால், எதிலிருந்து?
நான்கு மில்லியன் வருடங்களிற்கு முன்னர் ஆபிரிக்காவில் தோற்றம்பெற்ற மனிதனை ஒத்த இனமாகக் காணப்பட்ட Australopithecus என்னும் இனத்திலிருந்தே Homo habilis தோற்றம்பெற்றுள்ளது என்று தொல்லுயிரியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Australopithecus இரண்டு மில்லியன் வருடங்களிற்கு முன்னர் முற்றாக அழிவடைந்துள்ளது.
- 11. இந்த எல்லா மனித கூர்ப்பும் வெப்ப மண்டல பிரதேசங்களில் நடைபெற காரணம் என்ன?
ஒன்று வெப்ப மண்டல பிரதேசங்களே இனங்கள் உருவாகி பல்வகைத்தன்மை பெறக்கூடிய சூழலியல் காரணிகளைக் கொண்டிருந்திருக்கலாம். மற்றையது ஏனைய பிரதேசங்களில் தொல்லுயிரியல் சுவடுகள் அதிகளவில் கண்டுபிடிக்கப்படவில்லை அதனாலேயே விஞ்ஞானிகள் கூர்ப்பின் தாய் வீடாக பரந்த பல சூழலியல் பண்புகளைக்கொண்டதும் பல தொல்லுயிரியல் சுவடுகளைக் கொண்டதுமான ஆபிரிக்கவை கருதுகின்றனர்.
- 12. ஏன் நவீன மனிதன் மட்டும் ஆபிரிக்காவை விட்டு வெளியேறினான்? சமகால மனிதர்களிலே, வெத்தா என்னும் இலங்கையின் பூர்வீக குடிகளுக்கும், ஆஸ்திரேலிய பழங்குடி மக்களுக்கும் பிரதேசத்திலிருந்து பிரதேசத்திற்கு போகும் குணம் இல்லை என்று அறிய கிடக்கிறது.
நவீன மனிதன் ஆபிரிக்காவை விட்டு வெளியேறக் காரணம் புதிய மேம்பட்ட வாழ்விடங்களை நோக்கிய இடப்பெயர்வும் எதையும் புதிதாக கண்டறியும் ஒரு தேடலுமேயாகும். இது அவனது அதிகரித்த நுண்ணறிவினால் ஏற்பட்ட ஒரு மாற்றமாகும். அவுஸ்ரேலிய இலங்கை பழங்குடியினருக்கும் நவீன மனிதனுக்கும் இடையில் பாரிய வேறுபாடு ஒன்றுமில்லை. அவர்கள் தமது வசதிகேற்ற வாழ்விடங்களை அமைத்தபின் அங்கேயே பலகாலம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து பழகியிருப்பார்கள். மேலும் அவர்களது போக்கிற்கேற்ற புது வாழ்விடங்களை தேடுதல் இன்றைய காலகட்டத்தில் அசாத்தியம் என்பதால் அவர்கள் ஒரே இடத்திலேயே தொடர்ந்து இருக்கலாம்.
- 2.4 – 1.4 முன் தோன்றிய Homo என்ற சாதி கடைசி 50000 வருடங்களில் மாத்திரம் சடுதியாக மாற்றம் அடையவும் விருத்தி அடைந்த மர்மம் என்ன.
- மனித கூர்ப்பு பற்றி ஆராயும் வல்லுனர்கள், அவன் உடற்கூற்றியல்ரீதியாக பரிணாமவளர்ச்சியின் உச்சத்திலிருப்பதாகவும் இனிமேல் ஏற்படும் பரிணாம வளர்ச்சியானது மனம் சார்ந்ததாகவே இருக்குமெனவும் கூறின், அதற்க்கு மாறாக, மனிதன் தன் அறிவை பயன்படுத்தி இயந்திரங்களை உருவாக்க பழகிவிட்டான். வரும் காலத்தில் மனிதன் உருவாக்கும் செயற்கை மூளை கொண்ட இயந்திர மனிதன், ரத்தமும் சதையும் கொண்ட மனித குலத்தை அழிக்க முயலலாம். ஏன் இப்போ உள்ள மனிதன் உருவாக்க முயலும் இயந்திர மனிதன் போல, நவீன மனிதனுக்கு முற்ப்பட்ட pre human x என்ற ஒரு இனம் மிகவும் சிந்தனை ஆற்றல் உடைய நவீன மனிதனை உருவாக்கி, அவர்கள் உருவாக்கிய நவீன மனிதனே அவர்களை அளித்திருக்க கூடாது.
- நான் நினைப்பது என்னவென்றால், மனித குலம் கடந்த 50000 ஆண்டுகளில் அடைந்த சடுதியான மாற்றம் இயற்கையாக இல்லாமல், ஒரு வலிந்த பாய்ச்சலாக ஏன் இருக்க கூடாது (a massive leap through some external forces or development by prehuman x)
13, 14, 15) இதே சந்தேகமே பல ஆய்வாளர்களுக்கும் தொடர்ந்து இருந்துவருகின்றதும் கூர்ப்பியலாளர்களால் மழுப்பப்படுகின்றதுமான ஒரு விடயமாகும். மனித இனமானது இந்த 50000 வருடங்களில் அடைந்த மாற்றங்கள் மிக அதிகம். முக்கியமாக நுண்ணறிவு சடுதியான அதிகரிப்பைக் காட்டுகின்றது. இம்மாற்றம் இயற்கையாக நடைபெறும் மெதுவான கூர்ப்பு செயன்முறையினூடாக இடம்பெறுமெனின் அதற்கு மேலும் பல மில்லியன் வருடங்கள் தேவைப்பட்டிருக்கும். எனவே மனிதனின் கூர்ப்பு வேறு ஒரு வெளிக்காரணியால் நெறிப்படுத்தப்பட்டு விரைவாக்கப்பட்டுள்ளது. அது என்ன?? அது நவீன மனிதனுக்கு முன் வாழ்ந்த pre human X ஆகவும் இருக்கலாம். ஆனால் அவ்வாறான மனித இனங்கள் வாழ்ந்து அழிந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. அல்லாவிடில் அந்த மனித இனமே இன்று முற்றாக நவீன மனிதனாக மாறியிருக்கலாம். ஆனால் ஏன் அவர்களது தொழிநுட்பம் நமக்கு கிடைக்கப்பெறவில்லை? இதற்கு காரணம் வேற்றுக்கிரக வாசிகள்தான் என அடித்துக்கூறுகிறார்கள் புரதான விண்வெளிக்கோட்பாட்டாளர்கள். இது பற்றி ஏலவே நான் குறிப்பிட்டுள்ளேன்.
- காணாமல் போன உள்ளாடை
- யானையைச் சுமந்த எறும்புகள்
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 21
- காணாமல் போன ஒட்டகம்
- எங்கே போக விருப்பம்?
- விசித்திரம்
- நினைவுகளின் சுவட்டில் – (82)
- மலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 3
- கு.ப.ரா. சிறுகதைகள் – ஒரு பார்வை
- நானும் ஜெயகாந்தனும்
- பழமொழிகளில் தொழிற்சொற்கள்
- டிசம்பர் 11 பாரதி பிறந்த நாள் சிறுகதை: வாடாமல்லிகை
- பெயரிடாத நட்சத்திரங்கள்
- புதிதாய்ப் பிறத்தல்!
- கனவுகளின் பாதைகள்
- சொக்கப்பனை
- இரண்டு வகை வெளவால்கள்
- பொருத்தியும் பொருத்தாமலும்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம் முடிவு) அங்கம் -2 பாகம் – 18
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இறைவன் திருநாம உச்சரிப்பு (Zikr) (கவிதை -53 பாகம் -1)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -2)
- ஞானப்புகழ்ச்சி இறைவேதத்திற்கு ஒப்பாகுமா
- பஞ்சதந்திரம் தொடர் 20 குருவிக்கும் யானைக்கும் சண்டை
- குரங்கை விழுங்கிய கோழி மனத்தை மயக்கும் சிசுநாள ஷரீஃப் பாடல்கள்
- வாழ்வியலின் கவன சிதறல்
- நனைந்த பூனைக்குட்டி
- சமுத்திரக்கனியின் போராளி
- சரதல்பம்
- “ சில்லறைகள் ”
- வலையில்லை உனக்கு !
- கூர்ப்படையும் மனிதன்…
- எமதுலகில் சூரியனும் இல்லை
- சூர்ப்பனையும் மாதவியும்
- கரிகாலம்
- சில நேரங்களில் சில நியாபகங்கள்.
- அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் கட்டுரை -3
- முன்னணியின் பின்னணிகள் – 16 சாமர்செட் மாம்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 51
- மாதிரிகள்