அஞ்சலிக்குறிப்பு: விடைபெற்ற தோழர் தா. பாண்டியன் ( 1932 – 2021 )

author
1
0 minutes, 1 second Read
This entry is part 9 of 12 in the series 28 பெப்ருவரி 2021

 

ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும்  –  அடக்குமுறைக்கு எதிராகவும்  ஒலித்த குரல் ஓய்ந்தது !

                                                                          முருகபூபதி

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நேற்று 26 ஆம் திகதி உடல்நலக்குறைவால் மறைந்துவிட்ட தோழர் தா. பாண்டியன் அவர்கள், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் – அதாவது 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதியே இறந்திருக்கவேண்டியவர் !

இதனை வாசிக்கும் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா..?

அந்தத் திகதியை எவரும், ஏன் முழு உலகமுமே மறந்திருக்காது.

அந்தநாள் எத்தகையது என்பதை தா. பாண்டியனின் வாக்குமூலத்திலிருந்தே இங்கே தருகின்றேன். அந்த வாக்குமூலத்தை அவர் தமது 69 வயதில்தான் பதிவுசெய்துள்ளார்.

 “ பிறந்த நாளைப் பலர் மறக்காமல் கொண்டாடிவருகிறார்கள். நான் என் பிறந்த நாளை,  நான் கடந்துவிட்ட 69 ஆண்டுகளில் ஒரே ஒரு முறைதான் கொண்டாட நேரிட்டது. பிறந்தநாளையே நினைக்காதிருந்த எனக்கு அதை 1992 இல் கொண்டாடவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் என் மனைவி , குழந்தைகளிடமிருந்து வந்தது.

1991 மே, 21 ம் நாளன்று சென்னையை அடுத்துள்ள திருப்பெரும்புதூரில், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக வந்த ரஜீவ்காந்தி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். அன்று அந்த இடத்தில் அவர் அருகில் இருந்தவன் நான். மூன்றடி தூரத்திற்குள் நின்று இருந்த நானும், குண்டுகள் பட்டுக் காயமடைந்தேன். வெடித்த வேகத்தில் தூக்கி எறியப்பட்டேன். இறந்துபோனதாகவே அறிவிக்கப்பட்டேன். சில பத்திரிகைகளில் இறந்தோர் பட்டியலில் என் பெயரும் இருந்தது. அன்று இரவு முழுவதும் என் குடும்பத்தார்க்கும் நான் கொல்லப்பட்ட ஒருவன்தான். ஏனெனில் அதுதான் அவர்களுக்கு தரப்பட்ட செய்தி.

இருந்தும் உயிர்தப்பி வாழ்கிறேன்… எப்படித் தப்பினேன்..? என்பதை இன்றும் என்னால் தெளிவாகக் கூற முடியவில்லை. ஏனெனில், எனக்கு வலதுபுறம் இருந்தவரும் கொல்லப்பட்டார்… இடதுபுறம் நின்றவரும் வீழ்ந்தார். எனக்குப்பின்னிருந்த ஏழெட்டுப்பேர் ரத்த வெள்ளத்தில் துண்டிக்கப்பட்டுக்கிடந்ததையும் கண்டேன். என்னைச்சுற்றிலும் குண்டு விபத்துக்குப்பலியாகி மடிந்தவர்கள் பதினெட்டுப்பேர். ராஜீவ்காந்தியுடன் பத்தொன்பது பேர். ஒரு நொடியில், ஒரே இடத்தில் களப்பலியாயினர்.

இவர்கள் மத்தியில் நின்ற நான், அதுவும் ராஜீவ்காந்தியின் அருகில் நின்று மொழிபெயர்த்துக்கொண்டிருந்த நான் குண்டின் குறிக்கு எப்படித் தப்பினேன் ?…. இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது.

ஆனால், பதிந்த குண்டுகள், இரும்புத் துகள்கள், ஆணிகள் என் உடம்பில் இன்றும் இருந்து அந்த  நாளை நினவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன.

வலதுகை விரல்கள் சிகிச்சைக்குப்பிறகும் சரியாகவில்லை. அதனால் உணவருந்தும்போதும், எழுதும்போதும், தலைவாரும்போதும், வலது கையை  பார்க்குந்தோறும், அந்தச் சோக நிகழ்ச்சியை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன.

எனவே, அதை நான் மறுபிறவி எடுத்த நாளாக என் குடும்பத்தினர் கருதியதில் வியப்பில்லை.

எனவேதான், 1992 மே 18 ம் நாள் மட்டும் 60 வது பிறந்தநாளை யாருக்கும் தெரிவிக்காமல் எங்கள் ஊரிலுள்ள தோட்டத்தில் இருக்கப்போனோம். பிறந்த நாள் மே 18. – மறுபிறவிகொண்ட நாள் மே 21. இப்போது மே 21- தான் நினைவில் நிற்கிறது.  “

மேற்கண்ட  வாக்குமூலத்திற்கு தோழர் பாண்டியன்  “ இரத்த சாட்சி  “ என்று தலைப்பிட்டிருந்தார்.  இந்த அத்தியாயத்துடன் அவர் தொடங்கி எழுதிய நூல்தான்: ராஜீவ் காந்தியின் கடைசி மணித்துளிகள். 2005 ஆம் ஆண்டு வெளியானது.

அதாவது, 2002  ஆம் ஆண்டு ஏப்ரில் 10 ஆம் திகதி கிளிநொச்சியில் இலங்கை – இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் பத்திரிகையாளர்களை விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் சந்தித்தபோது,  “ ராஜீவ் காந்தியின் கொலை என்றோ நடந்த ஒரு துன்பியல் நிகழ்ச்சி . “  என்று வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியான நூல்.

ராஜீவ் காந்தியுடன் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் போயிருக்கவேண்டியவர்,  பாரதி சொன்னதுபோன்று,                          “ வீழ்வேனென்று நினைத்தாயோ…  “ என்ற ஓர்மத்துடன், குண்டுத்துகள்களை சுமந்தவாறு,  மூன்று தசாப்தகாலம் அரசியல் பணிகளையும் எழுத்துப்பணியையும்  அயராமல் தொடர்ந்து மேற்கொண்டு,  இறுதியில் சக்கரநாற்காலியிலும் வலம் வந்து சிம்மக்குரலோடு ஒலித்தவர்,  நேற்று ராஜீவ் காந்தி மருத்துவமனையிலே  தமது இறுதி மூச்சை விட்டுள்ளார்.

இலங்கையோடு நெருக்கமான தொடர்பிலிருந்த தமிழக இடதுசாரித்தலைவர்களில் ஒருவர்தான் தோழர் தா. பாண்டியன்.  இலங்கையில்  இந்திய வம்சாவளி மக்களுக்காக குறிப்பாக மலையக மக்களுக்காக தொழிலாளர் காங்கிரஸ் உருவாவதற்கு அன்றைய பாரதப்பிரதமர் ஜவகர்லால் நேரு பிரதானியாக இருந்தமைபோன்று, இலங்கையில் முற்போக்கு சிந்தனை மிக்க தமிழர்கள்,  இடசாரி கருத்தியல்களை உள்வாங்கிக்கொள்வதற்கு தமிழ்நாட்டிலிருந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்வதற்கு வந்த தோழர் ஜீவானந்தமும் காரணமாக இருந்தார்.

அவரது தோழமையின் ஆதர்சம்தான், டொமினிக் என்ற பெயருடன் நடமாடியவரை டொமினிக்ஜீவா எனப்புகழ்பெறவைத்தது.

தோழர் ஜீவாவைத்தொடர்ந்து,  பின்னாளில் இலங்கைக்கு வந்தவர்கள் தோழர்கள் எம். கல்யாணசுந்தரம், தா. பாண்டியன், மகேந்திரன்.  இவர்கள் மூவரும் 1978 ஆம் ஆண்டிற்குப்பின்னர் அடுத்தடுத்து இலங்கை வந்தனர்.

இவர்கள் மூவரும் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோக பூர்வஏடு ஜனசக்தியில் காலத்துக்கு காலம் ஆசிரியர்களாகவும் பணியாற்றினர்.

1982 ஆம் ஆண்டு பாரதி நூற்றாண்டுகாலத்தில் இலங்கை வந்திருந்த தோழர் தா. பாண்டியன்,  கொழும்பில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடந்த பாரதி விழாவிலும் உரையாற்றினார்.  எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இலக்கிய ஆர்வலர் ரங்கநாதன் இல்லத்தில் நடைபெற்ற தேனீர் விருந்துபசார இலக்கிய சந்திப்பிலும் கலந்துகொண்டார்.

அச்சந்திப்பில் சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன், சங்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர்கள் மல்லிகைஜீவா, சோமகாந்தன், மற்றும் எழுத்தாளர்கள் சி.வி. வேலுப்பிள்ளை, மு. கனகராஜன், அந்தனிஜீவா, ராஜஶ்ரீகாந்தன்,  மேமன்கவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பேராசிரியர் கைலாசபதி சற்று தாமதமாக வந்தார். அவரைக்கண்டதும் பாண்டியன் எழுந்து சென்று அவரது கரம்பற்றிக்குலுக்கி , அரவணைத்து அழைத்துவந்து தமக்கருகில் அமரச்செய்தார்.  இத்தனைக்கும் இடதுசாரி கருத்தியலில் பாண்டியனுடன் முரண்பட்டவர்தான் கைலாசபதி.

மக்கள் சீனம்-காட்சியும் கருத்தும் ( 1979 ) என்ற நூலை கைலாசபதி தமது மனைவி சர்வமங்களத்துடன் இணைந்து எழுதியிருந்தார்.

ஈழத்து இலக்கியவாதிகளுடன் நேசம்பாராட்டியவர்தான் தோழர் பாண்டியன்.  1983 ஆம் ஆண்டு இலங்கை கலவரத்தின் பின்னர் தமிழகம் சென்று தஞ்சமடைந்த சில எழுத்தாளர்களின் தேவைகளையும் கவனித்தார்.

பாண்டியன் கொழும்பில் அன்று பாரதி விழாவில் பேசுகையில், நாம் அறியாத பாரதியின் சில பக்கங்களையும் சுட்டிக்காண்பித்தார்.

பிரிட்டிஷாரின்  ஆளுகைக்குள்  இந்தியா  இருந்தபோது  தமிழ்நாட்டில்   திருநெல்வேலி   மாவட்ட  ஆட்சித்தலைவராக           ( கலெக்டர் ) இருந்த ரொபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் ஆஷ் 1911 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் திகதி வாஞ்சிநாதனால் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியின் பின்னணியில் பாரதிக்கு இருந்த தொடர்புபற்றியும் பாண்டியன் சொன்னார்.

அப்பொழுது 29 வயதிலிருந்தவர் பாரதி.  வாஞ்சிநாதனுக்கு 25 வயது. ஆஷ் கொல்லப்பட்டு சில நிமிடங்களிலேயே வாஞ்சிநாதனும் தனக்குத்தானே சுட்டு அதே நாளில் தற்கொலை செய்துகொண்டார்.

அந்தத் துப்பாக்கி ஒரு மரத்தால் செய்யப்பட்ட அம்பாள் சிலைக்குள் வைத்து எடுத்துச்செல்லப்பட்ட செய்தி பாரதிக்கு தெரியும் என்ற தொனியில் பாண்டியனின் உரை அன்று அமைந்திருந்தது.

அவருடன் பேசும்போது,  அந்தச்செய்தியின் பின்னணி குறித்து விரிவாக எழுதுங்கள் என்று அன்றே அவரிடம் கேட்டிருந்தேன். அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மட்டுமல்ல,  வடசென்னை தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கும் தெரிவானவர்.  அத்துடன் சில நூல்களையும் எழுதியவர்.

பாண்டியன் இலங்கை வந்திருந்த காலப்பகுதியில் இயங்கிய இடதுசாரிக்கட்சிகளின் பிரசுரங்கள், பத்திரிகைகளையும் ஒரு பொதியில் சேகரித்து வைத்துக்கொடுத்தேன்.

இனங்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பாக அச்சமயத்தில் இலங்கையில் இடது – வலது கம்யூனிஸ்ட் கட்சிகளும் சமசமாஜக்கட்சியும்,  விக்கிரமபாகுவின் நவசமசமாஜக்கட்சியும் ரோகண விஜேவீராவின் மக்கள் விடுதலை முன்னணியும் வேறுபட்ட கருத்தியல்களை கொண்டிருந்தன.

அக்கருத்தியல்கள் பதிவான ஏடுகளையே அவரது வாசிப்பிற்காக சேகரித்துக்கொடுத்திருந்தேன்.

அவர் அன்று கொழும்பில் நடந்த பாரதி நூற்றாண்டு மேடையில் சொன்னது பற்றி, பின்னாளில் பாரதியும் புரட்சி இயக்கமும் என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவு உரையை நிகழ்த்தி,  அதனை தனி நூலாகவும் வெளியிட்ட பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு. சி. ரகுநாதனிடத்திலும் விசாரித்தேன். 

கலெக்டர் ஆஷ் கொலை பற்றி பல்வேறு செய்திகள் இருப்பதாகவே அவர் சொன்னார்.

தோழர் பாண்டியனை மீண்டும் 1984 ஆம் ஆண்டு சென்னை தி. நகரில் அமைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்காரியாலயமான பாலன் இல்லத்தில் சந்தித்தேன். அச்சமயம் அவரது கதை, வசனம் தயாரிப்பில் சங்கநாதம் என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது.

இத்திரைப்படத்தை ஜி. ராமிநீடு என்பவர் இயக்கியிருந்தார். நடிகர்கள் ராஜேஷ், ராஜலட்சுமி நடித்த படம். இதுதான் நடிகர் செந்திலுக்கும் முதலாவது திரைப்படம்.

தனியாருக்குச்சொந்தமான முகாமைத்துவ பாடசாலைகளில் நடைபெறும் மோசடிகளையும்,  அதற்கு எதிராக முற்போக்கு எண்ணம்கொண்ட இளம் ஆசிரியர் நடத்தும் தர்மயுத்தமும் பற்றிய கதை. 

தோழர் பாண்டியன் இறுதிவரையில் எழுதிக்கொண்டிருந்தவர்.  அவர் இளம்வயதில் படிக்கின்ற காலத்திலேயே தோழர் ஜீவானந்தம் அவர்களின் கருத்துக்களினால் ஈர்க்கப்பட்டு பொதுவுடமை கொள்கை நிலைப்பாட்டினை எடுத்து, பின்னாளில் கம்யூனிஸ்ட்கட்சியின் முழுநேரத்தொண்டராகி, பல பதவிகளும் வகித்து, தலைவராக உயர்ந்தவர்.

கட்சிப்பணிகளுக்கு மத்தியிலும் வாசிப்பதிலும் எழுதுவதிலும் தனது கவனத்தை குவித்துவந்தவர்.  ஜீவானந்தம் பற்றியும்  நூல் எழுதியிருக்கும் பாண்டியன் அவர்கள்  கடந்த ஓராண்டு  காலத்திற்கும் மேலாக உலகை அச்சுறுத்திவரும் கொரொனோ தொற்று நெருக்கடி குறித்தும்,  அண்மையில் கொரோனாவா முதலாளித்துவமா ? என்ற நூலையும் இந்தியாவில் மதங்கள் என்ற மற்றும் ஒரு நூலையும் எழுதி முடித்திருக்கிறார்.

சிறந்த மேடைப்பேச்சாளரான பாண்டியன் அங்கதச்சுவையுடனும் பேசவல்லவர்.

ஒரு தடவை இவரது கட்சி வேட்பாளர் நின்ற தொகுதியில் அவரை எதிர்த்து பிரசாரம் செய்வதற்காக  அனைத்திந்திய அண்ணா தி. மு. க. சார்பில் ஜெயலலிதா  சில கவர்ச்சி நடிகைகளை இறக்கியதை அறிந்த பாண்டியன்,                                           “ தம்மைப்போன்ற வயதால் மூத்தவர்களை அவமானப்படுத்தவேண்டும் என்பதற்காகவே அந்த நடிகைகளை அவர் மேடைகளில் இறக்கியிருக்கிறார் !  “  என்று சொன்னார்.

இந்தியத் தொன்மங்கள் குறித்தும் பேசிவந்திருக்கும் பாண்டியன், கம்போடியாவின்  அங்கோர்வாட்டின் சிறப்புக்குறித்து பேசியிருக்கும் காணொளிக்காட்சி ஆவணம் இலக்கியப்பயணிகளுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் உசாத்துணையாகும்.

முன்னாள் பாரதப்பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் தமிழகம் வந்து பேசும்வேளைகளில் அவர்களின் உரைகளை அழகிய தமிழில் மொழிபெயர்த்து பேசுபவராகவும் விளங்கியவர்தான் பாண்டியன்.

அவ்வாறு அவர் ராஜீவ் காந்தியுடன் கலந்துகொண்ட அந்த  திருப்பெரும்புதூர் மேடை த்திடலில்  பேசியதினத்தன்று விதிவசத்தால் தப்பினார்.

இலங்கையில் இனப்பிரச்சினை கூர்மையடைந்து,  இனவிடுதலைப்போராட்டம் வெடித்த காலம் முதல் ஈழத்தின் நேசராகவே விளங்கிய தோழர் பாண்டியன், இறுதி யுத்தத்தின் பேரழிவுகளையடுத்தும்  ஈழத் தமிழ் மக்களுக்காக    இந்தியாவில் குரல்கொடுத்துவந்தார்.

அவரை அய்ரோப்பிய நாடுகளில் வாழும் புலம்பெயர் ஈழத்தமிழர்களும்  அழைத்து பேசவைத்திருக்கின்றனர்.

தமது 89 வயதில் மறைந்திருக்கும் தோழர் பாண்டியனுக்கு எமது இதய அஞ்சலி.

letchumananm@gmail.com

 

 

 

 

 

 

 

Series Navigationவடக்கிருந்த காதல் – இரண்டாம் பாகம்கதை சொல்லல் -சுருக்கமான வரலாறு
author

Similar Posts

Comments

  1. Avatar
    jananesan says:

    தோழர்.தா.பா. மறைவு குறித்து தமிழகத்தில் உள்ள பலருக்கும் தெரியாத குறிப்புகளை பதிவு செய்து உருக்கமான புகழஞ்சலியை திண்ணை இதழ் சார்பாக செலுத்தியுள்ளது நெஞ்சை நெகிழச்செயகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *