அடியில் உறங்கும் அறச்சீற்றம் [சு. தமிழ்ச்செல்வியின் “கண்ணகி” நாவலை முன்வைத்து]

This entry is part 6 of 10 in the series 8 மே 2016

”மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்பது ஒரு சான்றோர் பாடியது. ஆனால் காலம் காலமாக மாதர்தம் நிலயை எண்ணிப் பார்த்தால், அதாவது ஆண்கள் அவர்களை இச்சமுதாயத்தில் நடத்தும் விதத்தைப் பார்த்தால், [சமுதாயத்தில் மட்டுமன்று வீட்டில் கூடத்தான்] அஃதொன்றும் மாதவம் செய்து பிறக்க வேண்டிய பிறப்பு என்று சொல்ல முடியவில்லை.

சகோதரர் மனைவியைத் துகிலுரிந்த கதை, மனைவியின் மேல் சந்தேகப்பட்டுத் தீக்குளிக்க வைத்த கதை, காட்டிலே குழந்தைகளுடன் தவிக்க விட்டுச் சென்ற கதை எல்லாம்தான் நமக்கு இங்கே பாடமாக உள்ளது. நேற்றைய [03-05-16] செய்தித்தாளில் கூட டெல்லி நிர்பயாவிற்கு நடந்ததைப் போல் பெங்களூரில் ஒரு பெண்ணுக்கு நடந்ததாகச் செய்தி வந்துள்ளது. “நாங்கள் ஆண்கள்; என்ன வேண்டுமானாலும் செய்வோம்” என்ற அடிப்படை எண்ணம்தான் இதற்குக் காரணம்.

ஆனாலும் பெண் மனத்தின் அடிஆழத்தில் நெருப்பானது எரிமலையின் அடியில் உறங்கிக் கொண்டிருப்பது போல் இருந்து கொண்டுதான் உள்ளது. அது ஒரு கணத்தில் திடீரென வெளிவரும்போது நாம் ஆச்சரியப்படுவதோடு அச்சமும் கொள்கிறோம்

இந்த முன்னுரையுடன்தான் சு.தமிழ்ச்செல்வியின் “கண்ணகி” நாவலைப் பற்றிச் சொல்ல வேண்டி உள்ளது. இது சாதாரண கிராமத்துக் கண்ணகியின் கதை. நாயகிக்கு ஆசிரியர் திட்டமிட்டே கண்ணகி என்று பெயர் வைத்திருப்பார் போலும். சிலம்பின் கண்ணகி தன் கணவன் கோவலன் மாதவி சென்றாலும் தன் ஒழுக்கம் மாறாதிருந்தாள். பரத்தையைர் வீடு சென்றுவிட்ட கணவனுக்கு நான் பூப்படைந்து விட்டேன் என்பதைத் தெரிவிக்கத் தன் தோழிக்குச் செவ்வரி ஆடை உடுத்தி பரத்தையர் வீதிக்கு அனுப்பும் வழக்கம் இருந்ததாம். ஆக அக்கால நடைமுறைப்படி அது அங்கீகரிக்கப்பட்டிருந்தது. ”அசோகவனத்தில் நீ இத்தனை நாள் மாற்றான் வசம் இருந்தாயே” என்று இராமன் சந்தேகப்பட்டது போல சீதையும், “நீயும்தானே என்னைப் பிரிந்து இத்தனை நாள் தனியாக இருந்தாய்; நான் சந்தேகப்படலாமா” என்று கேட்கவில்லை. அது இதிகாச காலச் சட்டம். அப்பொழுது கூட சீதை இராமனை “உத்தம” என்றுதான் விளிக்கிறாள்.

ஆனால் இப்புதினத்தின் கண்ணகியின் நிலை மாறுபடுகிறது. இவன் அந்தக் கோவலன் போல இல்லை. அவனுக்காவது மாதவி மட்டுமே! இவனுக்கோ ஊரெல்லாம். அதுவும் அண்னி முறையில் இருப்பவளோடு, அத்துடன் சூடாமணியும், அவள் தங்கையும் வேறு; இத்தனைக்கும் கண்ணகியை ஆசையுடன் காதலித்துத்தான் அவள் கணவன் ஆசைத்தம்பி திருமணம் செய்து கொண்டான். பெற்றோர் சம்மதமின்றித்தான் கண்ணகி ஆசைத்தம்பியிடன் ‘உடன்போக்கு” சென்றாள். கிராமத்து வழக்கப்படி “ஓடிப்போனாள்”. அவனும்தான் அவளை அழைத்துக் கொண்டு போய்விடுகிறான். ஆனால் அவன் ஓடிப் போனவனில்லை.

ஒரு கட்டத்தில் ஆசைத்தம்பியின் மீது அவளுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. அவனை எப்படியாவது அழவைக்க வேண்டும் என்றெண்ணுகிறாள். ஆனால் அவனை அவளால் வீழ்த்த முடியவில்லை. அப்போது கண்ணகி, “இனியும் இவனுடன் இந்தக் கேவலமான வாழ்க்கையை வாழக் கூடாது” என்று முடிவெடுக்கிறாள். பிறந்தவீடு வெறுத்துச் சேர்க்க மறுக்க பாண்டிச்சேரி போகிறாள். அங்கே மீன் ஏலமெடுக்கும் மரியபுஷ்பத்தின் தம்பி திவ்யநாதன் இவளைக் காப்பாற்றுவதாக வாக்களித்துத் தன் அக்காவிடம் அடைக்கலம் அளிக்கிறான். ஆனால் திவ்யநாதன் தொடர்பால் கண்ணகி கருவுருகிறாள். பாதுகாப்பற்ற நிலை, அடைக்கலம் தந்தவனின் ஆதரவை நாட வேண்டிய நிர்பந்தம், மனத்தின் ஆசை, ஆகியவை அவளை இந்நிலைக்கு ஆளாக்குகின்றன.

இது தெரிந்தால் அக்கா மரியபுஷ்பம் என்னசெய்வாளோ எனக் கவலை. பக்கத்து வீட்டு ராணி மூலம் உதவி வருகிறது. குழந்தையைப் பிறக்க வைத்து அதை அநாதை ஆசிரமத்தில் சேர்க்க ராணி உதவுகிறாள். அத்துடன் அன்சார் என்பவன் சிங்கப்பூருக்கு வீட்டு வேலைக்காக கண்ணகியை அழைத்துச் செல்லவும் ராணியே உதவுகிறாள். சிங்கப்பூர் சென்ற பிறகுதான் அன்சார் திருமணம் செய்துகொள்ளாத ஓர் இல்லறத் துணைக்காகக் கண்ணகியை அழைத்து வந்தது தெரிகிறது. முதலில் முரண்டு பிடித்த கண்ணகி பிறகு அவனை அனுசரித்துப் போகிறாள்.

அன்சார் கண்ணகியைத் திருமணம் செதுகொண்ட மனைவியைப் போலவே நடத்துகிறான். கண்ணகி தனக்குச் சேரும் பனத்தை தாய்க்கு அனுப்பி அநாதை ஆசிரமத்திலிருந்து தன் பிள்ளையை எடுத்து வளர்க்கும்படிச் சொல்கிறாள். பிள்ளை வளர்ந்து பெரியவாகிறான். கண்ணகியிடம் பணம் சேர்ந்து விட்டதை அறிந்த ஆசைத்தம்பி அவளுடன் இணைந்து வாழ விரும்புகிறான். அவன் குறி பணத்தின் மீதே இருக்கிறது. கண்ணகியின் பிள்ளை அவளுடன் ஒட்டவில்லை. அன்சாரிடம் இருந்ததால் அவனுக்குக் கண்ணகி மீது வெறுப்பு ஏற்படுகிறது.

கண்ணகியின் மகன் பாரதிக்குத் திருமணத்தினை ஆசைத்தம்பியும் கண்ணகியும் சேர்ந்து நடத்தி வைக்கிறார்கள். ஆசைத்தம்பி நோய்வாய்ப்பட அனைவரும் கைவிட கண்ணகி மிகவும் செலவு செய்தும் அவன் இறக்கிறான். கண்ணகியின் பேரப்பிள்ளைகளுக்குக் காதுகுத்தும் அதே நாளில் அன்சார் தான் திருச்சி வருவதாகவும் தன்னுடன் கண்ணகி மூன்று நாள்கள் தங்கவேண்டும் என்றும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறான். பெரிய மனப்போராட்டத்திற்குப் பிறகு கண்ணகி திருச்சி செல்ல முடிவெடுக்கிறாள்.

கண்ணகியிடம் அவளுடைய மகன் பாரதி கண்ணகியைப் பற்றித் தப்பாக நினைக்க மாட்டானா என்று கேட்கிறாள் எல்லாம் தெரிந்த மல்லிகா. அதற்குக் கண்ணகி சொல்லும் பதிலை அப்படியே தந்தால்தான் நாவலின் மையம் புரியும்.

“அவன் அவ பொண்டாட்டி புள்ளிவொளோட சந்தோஷமா இருக்குறான். அவனுக்கு என்ன கொற? அவன் எம்மேல கோவப்பட என்ன இருக்கு? என்னத் தப்பா நெனச்சா நெனச்சிட்டுப் போறானே; என்ன அவனுக்குப் புடிச்சான்ன புடிக்காம போனாத்தான் என்ன. பதினாலு வருசம் கூட இருந்த மனுசன். இந்த ஒடம்பு கறிக்காகத்தான்னாலும் கடிஞ்சி ஒரு வார்த்தை பேசுனதில்ல; அவரு மொகத்த பாக்கணும்னு நான் ஆசப்பட மாட்டானா? நான் பதிமூணு வயசில அறியாபுள்ளயா அவம் பின்னாடி வந்தப்ப கூட என்ன பாவமேன்னு நெனச்சிப்பாக்காம ஏகப்பட்ட துரோகம் பண்ணின எம்புருசன் அவன் செத்த பிறகும் நான் பத்தினியாய் இருந்து அவம்பேர காப்பத்துணுமுன்னு சாவக்குள்ள சத்தியம் வாங்கிட்டு சாவுறான். நான் எதுக்காக அவம்பேர காப்பாத்துணும்? தாலி கட்டாத பொண்டாட்டியா இருந்தப்பவும் காசுக்கு முந்தானை விரிச்ச வேசியா இருந்தப்பவும், என்ன ஒரு பொட்டச்சியா நெனச்சி புரிஞ்சி நடந்துக்கிட்ட நல்ல மனுசன் அவரு; அவரு மொகத்த நான் இப்பகூட பாக்காம விட்டனா வேற எப்ப பாக்குறது” என்றாள் ஆவேசமாக.

அது மட்டுமன்று; தான் சிங்கப்பூர் முதலாளியைப் பார்க்கவே திருச்சி சென்றிருப்பதாக அனைவரிடம் உண்மையைச் சொல் என்று கண்ணகி துணிந்து கூறுகிறாள். இத்தனை நாள்கள் கண்ணகியின் அடிமனத்து ஆழத்திலிருந்த நெருப்பு அரச்சிற்றமாக இங்கேதான் வெளிப்படுகிறது.

ஒரு பெண்ணைத் தெய்வமாக்க வேண்டாம்; அவள் மனத்திற்கும் மதிப்பளித்து அவளை ஒரு பெண்ணாகவே புரிந்து கொண்டால் போதும் என்று நாவல் தெளிவாகக் கூறுகிறது. நாவலின் நடை அப்பட்டமான கிராமத்து நடை. படிக்கப் படிக்க, சுவாரசியமாக இனிக்கிறது. கிராமத்துச் சொலவடைகள் ஆங்காங்கே தேவை கருதி வருகின்றன.

“பரந்து கெடுக உலகியற்றியான்” என்று பாரதியார் பாடியது போல “இந்தப் பாழாப்போன சாதிகள கடவுள் என்ன மயிருக்காகப் படைச்சித் தொலைச்சான்” என்று கண்ணகி கேட்பது முகத்தில் அறைவது போல இருக்கிறது.

“பொட்டச்சின்னா என்னான்னு நெனச்சிட்டான் ஒம்புருசன். ஏதோ மரியாதக்கிக் கட்டுப்பட்டு மண்ணள்ளித் தின்னுக்கிட்டு கெடக்கிறோமேத் தவிர நமக்குன்னு ஒரு ஞாயம் இல்லாமயா இருக்கு. அதெல்லாம் என்னான்னுன்னு தெரிஞ்சா தாங்குவானுங்களா இவனுங்கல்லாம்” என்ற கேள்வி வழிதவறும் ஆண்களின் மேல் ஒரு சாட்டையடியாக விழுகிறது.

நாவல் கண்ணகியை ஒரு முதலாளியாகக் காட்டி அவளிடம் நான்கு பெண்கள் மீன் அரிந்து போடும் வேலைக்கு இருப்பதாகக் காட்டித் தொடங்குகிறது. வியாபாரத்தில் கண்ணகியின் திறமை வெளிப்படுகிறது. கூடவே, ”இந்தப் பேச்சும் சாதுர்யமும் அவளுடைய பதிமூன்று வயதில் அவளுக்குக் கல்யாணம் ஆன போது இருந்திருந்தால் இன்று அவள் இப்படி மீன் விற்றுக் கொண்டு உட்கார்ந்திருக்கமாட்டாள்” என்று முதல் அத்தியாயம் முடியும் போதே நம் ஆவல் தூண்டப்படுகிறது. அதன் பிறகு நாவல் முழுதும் பின்னோக்கு உத்தியில் சொல்லப்படுகிறது.

கண்ணகி சிங்கப்பூர் சென்றதும் நாவல் இறக்கை கட்டிக் கொண்டு பறப்பதுபோல் இருக்கிறது. ஆமாம்; மிகவும் வேகம்தான்.

மொத்தத்தில் பெண்ணியத்தை ஒரு நவீன முறையில், நவீன இலக்கியத்தில் பேசும் நல்ல நாவல் இது என்று துணிந்து கூறலாம்.

 

[கண்ணகி—நாவல்—சு. தமிழ்ச்செல்வி—வெளியீடு: உயிர்மை பதிப்பகம்—11/29, சுப்ரமணியம் தெரு; அபிராமபுரம்; சென்னை 600 018; தொலைபேசி 91-44-24993448—பக்: 208; விலை: ரூ 120]

 

===============================================================================

Series Navigationஇலக்கிய சிந்தனை 2015 ம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள்உன்னை நினைவூட்டல்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *