அன்னம் நடராஜனும் ,இலக்கியா நடராஜனும் அவரின் நாகராஜன்கள் கதைகளும்

Spread the love

 

சுப்ரபாரதிமணியன்

 

தமிழ் இலக்கியத்திற்கு நவீன முகம் தந்த பதிப்பகங்களில் ஒன்றான அன்னம், சிவகங்கையின் மேலாளராகவும் அமரர் மீராவின்  உதவியாளராகவும் விளங்கிய நடராஜன் பல எழுத்தாளர்களின் படைப்பூக்கத்திற்கு ஏணியாக இருந்து செயல்பட்டவர்,

அவர் பின்னால் இலக்கியா நடராஜனாக உருமாறி எழுத்தாளராக விளங்கி வருவதைத் தாமதமாகத்தான் அறிந்து கொண்டேன். இடையிலான பத்திரிக்கையாளர் பணியையும் அறியவைல்லை.எழுத்து இலக்கிய அமைப்பின் செயல்பாட்டின் மூலம் இன்னும் நன்கு அறிந்தவரானார். அவரின் இந்தக்கதைகளை அவ்வப்போது படித்த போது இலக்கிய இதழ்களில் படித்த போது மகிழ்ச்சியடைந்தேன்.

 இந்தக்கதைகளின் ஆரம்ப அனுபவங்களில் அவர்  மாற்றம் சார்ந்த  மனிதர்களைப் பற்றி அதிகம் சிந்தித்திருப்பது தெரிந்தது, மனநோயாளி மீதான கருத்தும் அபிப்ராயமும் மாறியிருப்பதையும்,  மீனவர் வழியே  சோர்விலிருந்து மீண்டு மாற்றம் பெறுவதும், சந்தோச கீதங்களாய் இருக்கும் விலைமாதர் பெண்கள் திருந்துவது, வெளிநாட்டில் வசிப்பவன் தாய்மண் சிறந்தது என்று வெளி நாடு போகாமல் மாற்றம் பெறுவது என்று ஆரம்பத்தில் உள்ளக்கதைகள் பட்டன.  அவை மாற்றம் சார்ந்த  மனிதர்களைப் பற்றி அமிந்திருக்கின்றன. பைத்யம் என்று திரும்பத் திரும்பசொல்வதற்கு பதில் மன நோயாளி என்றுக்குறிப்பிட்டிருக்கலாம்.

மன நோயாளி இயல்பை மீறி அறத்தைக்காப்பாற்ற அவர்கள் வாள் எடுக்கிறார்கள் . நாட்டார் தெய்வங்களாகிறார்கள். மன நோயாளி போல் தோற்றம் அளித்தாலும் பிச்சை எடுத்தாவது முஸ்லீம் பண்டிகை நோன்பு திறப்புக்கு உதவும் மனிதர்களும் இருக்கிறார்கள்

எல்லா நேரங்களிலும் எல்லோரும் மனிதர்களே என்று நிரூபிக்கிற     பல கதைகள் இதிலுள்ளன. மனிதம் சார்ந்த யோசிப்பில் இவ்வகை மனிதர்கள் இருக்கிறார்கள் நடராஜனின் பார்வையில்    

கடல் பற்றிய அபாரமான வர்ணனையோடு கடல் மனிதர்கள் தரும் பாடமும் இப்படித்தான். விலைமாதர் மனதில் எழும் சிந்தனை மாற்றமும் ஒரு பாடம்தான்.தாய் மண்ணை மதிக்கிறவனின் கதையில் வரும் நாதஸ்வர  கோவில்மணி ஓசைக்குப் பதிலாக மின்கருவியின் வருகை நான் திரைக்கதை எழுதிய “ ஓம் ஒபாமா” படத்தை ஞாபகமூட்டியது. அந்த திரைப்பட பெண்இயக்குனர் செய்த துரோகம் போலத்தான் அந்தக் கோவில் நிர்வாகம் செய்யும் செயலும் துரோகமாகவே உள்ளது .

இவற்றில் பெரும்பாலும் கதாநாயகர்கள் பெயர் நாகராஜன். இவை பெரும்பாலும் நாகராஜன்களின் கதைகள். நாகராஜன்களின் அனுபவக்குவியலாக லவுகீகம் முதல் ஆன்மீகம் வரை நீள்கிறது.

வாழ்க்கை மீதான அலுப்பு ஏதாவதொரு வகையில் ஆறுதல் தேடி ஆன்மீகம் பக்கம் பலரை இக்கதைகளில் போகச் செய்கிறது. அப்படியானத் தேடலில் குரு என்பதை அப்பா என்று கண்டு கொல்கிறார்கள். அம்மாவின் இழப்பிற்குப்பின் அதே நியாயம் வந்து சேர்கிறது. இது ஒரு வகைத் தேடலாய் ஆறுதலாய் பலருக்கு ஏற்பட்டு விடுகிறது. சாமியார்கள் நாகராஜன்களை ரொம்பவுதான் அலைய விடுகிறார்கள். அதுவும் சதுரகிரிக்கு அடிக்கடி சுற்றுலா செல்ல நேர்கிறது.

சாவு செய்திகளை முன் வைத்து பலரைத் தேடிப்போகிற பல கதாபாத்திரங்களைச் சந்திக்கிறோம். தனக்குப் பிடித்தமான பெண்ணோ, காதலியோ சாகிற போது மட்டுமல்ல,  தான் மனதில் நேசித்த பல மனிதர்கள் பற்றிய எண்ணங்களும் சாவுச்செய்திகளுடன் அலைகின்றன .சாவுச்செய்தி சொல்கிற ரிக்‌ஷா ஒரு படிமமாகிறது.அதை ஓட்டுகிறவன் செத்துப்போக அந்தச் செய்தி சொல்ல முடியாமல் அது நிர்கதியாகி ஒரு நிரந்தரப்படிமமாகிறது. வாழ்ந்து கெட்டு செத்துப்போனவர்களின் அஞ்சலிப்போஸ்டர்களைத் தேடும் மனிதர்களும் இதில் இருக்கிறார்கள்.

இதில் வரும் பெண்கள் உழைக்கத் தயங்காதவர்கள். பிரியமானவர்கள்,  காதலிகள் என்று வருகிற லூகோடர்மா பெண்ணோ , தன் சின்ன இச்சையை நிறைவேற்றிக்காணாமல் போகிற இசக்கியோ மனதை நெகிழ வைக்கிறார்கள்

இக்கதைகள் நவீனத்துவ நோக்கிலோ, போக்கிலோ எழுதப்பட்டவை அல்ல. ஆனால் வாழ்க்கையின் நவீனத்துவ அம்சங்களாய் நிறைந்தவை. சொல்லும் முறையில் பழைய மரபான விவரிப்பு இருக்கலாம்,நவீனத்துவத்தின் ஒரு பகுதியாகவே அவற்றையும் கொள்ளலாம். மீரா அவர்கள் பதிப்பகம் மூலம் அறிமுகப்படுத்திய நவீனத்துவம் தாண்டி சாதாரண மக்களின் வாழ்வியலைக்கூர்ந்து கவித்து மரபின் தொடர்ச்சியாய்  எழுதப்பட்டவை இக்கதைகள் என்பதில் வாசகன் நீண்ட பாரம்பரியத்துடன் இணைத்து இக்கதைகளை அறிந்து கொள்வான்.

 

( மயானக்கரை

kavitha publications , Chennai rs 160 )

சுப்ரபாரதிமணியன்,, திருப்பூர் 9486101003

Series Navigationகபுக்கி என்றோர் நாடகக்கலைகனா கண்டேன்!