அச்சம்(La Peur)

This entry is part 5 of 17 in the series 9 அக்டோபர் 2022

 

                      

             (மூல மொழியில் வெளியான ஆண்டு 23 அக்டோபர் 1882)

                     கி தெ மொப்பசான்

                      தமிழில் நா கிருஷ்ணா

ரவு உணவுக்குப் பிறகு கப்பலின் மேல்தளத்திற்குத் திரும்ப வந்தோம். எங்களுக்கு முன்பாக நிலவொளியில் மின்னும் மத்திய தரைக்கடலின் அமைதியானத் தோற்றம். பெரியதொரு அரவத்தைப்போல கரிய புகை,  நட்சத்திரங்கள் நிறைந்த வானை நோக்கி சுருண்டெழ, எங்கள் பெரிய பயணிகள் கப்பல் நீரில் சறுக்கி விரைந்துகொண்டிருந்தது. எங்களுக்குப் பின்புரம், கப்பலின் சுக்கானில் அடிபட்டு  வளைந்தும் நெளிந்தும்  நுரைத்துக்கொண்டும்,வெள்ளைவெளேரென, சலசலத்துப் பிரிந்தோடும் நீரைப்பார்க்க நிலவொளி பொங்குவதுபோன்றதொரு தோற்றம்.

அங்கு கூடியிருந்த எங்கள் எண்ணிக்கை ஆறிலிருந்து எட்டுக்குள் இருக்கலாம். எங்கள் கண்கள்  தொலைதூரத்தில் தெரிந்த ஆப்ரிக்க பிரதேசத்தை அமைதியாக இரசித்தவண்ணம் இருந்தன. நாங்கள் அங்குதான் சென்றுகொண்டிருந்தோம். எங்கள் நடுவே சுருட்டுப் புகைத்துக் கொண்டிருந்த, கப்பல் மாலுமிகளின் தலைவர் உணவின்போது கூறிக்கொண்டிருந்த விஷயத்தைத் முடிக்க நினைத்தவர்போல:

       « அன்றைக்கு நான் உண்மையில் பயந்தேன். கடற்சீற்றத்தின் காரணமாக  எங்கள் கப்பல் பாறையொன்றில் முட்டி, கிட்டத்தட்ட ஆறுமணி நேரம் தவிக்கத்தோம். நல்லவேளை, அந்திசாயும் நேரத்தில் அவ்வழியாக வந்த நிலக்கரி ஏற்றிய ஆங்கிலேயர் கப்பலொன்றின் கண்ணிற்பட காப்பாற்றப்பட்டோம் »- என்றார்.   

எங்கள் கூட்டத்தில் நெட்டையாகவும்  தேசாந்திரியாக அலைந்ததில் முகம் கறுத்தும், கடுமையானத் தோற்றத்துடனும் ஒருவர் இருந்தார், அவர் பல அபாயங்களுக்கிடையில் புதிய புதிய தேசங்களைக் கண்ட அனுபவசாலியாகவும்  இருக்கவேண்டும், விழிகளில் அமைதி, ஆனால் அவற்றின் ஆழ்பகுதியில் தான கண்ணுற்ற விநோத காட்சிகளில் சிலவற்றைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவராகத் தெரிந்தார். அதுவன்றி, காண்பதற்கு தைரியசாலிபோலவும் இருந்த அம்மனிதர் முதன்முறையாக பேச முற்பட்டார்:

“கேப்டன், நீங்கள் பயந்துவிட்டதாகச் சொல்கிறீர்கள்; இருந்தும் என்னால் அதை  நம்பமுடியவில்லை. மாறாக அந்த அனுபவத்தை விவரிக்க உங்களுக்குச் சரியான வார்த்தைக் கிடைக்கவில்லையென நினைக்கிறேன். ஆற்றல் மிக்க ஒருவன் ஆபத்தை எதிர்கொள்ள ஒருபோதும் பயப்படுவதில்லை. அத்தகைய மனிதன் உணர்ச்சிவசப்படுவான், கிளர்ச்சி,  பதற்றமென்று எல்லாம் அவனுக்குண்டு, ஆனால் பயம்  என்பது வேறு விஷயம், அது அவனை அத்தனைச் சுலபமாக  நெருங்காது ».

” அட! உண்மையிலேயே அன்று பயந்திருந்தேன், »! எனக் குறுக்கிட்டு, கேப்டன் அவரை மறுத்துப் பேசினார். ஆனால் தேசாந்திரி விடுவதாக இல்லை, கேப்டனுக்குப் பதில் சொல்ல நினைத்தவர் போல தொடர்ந்தார்:

                    * * *

நான் சொல்லவந்ததை முடிச்சுடறேன்!  துணிச்சலான ஆசாமிகளுக்கும் பயம் வரலாம் இல்லைன்னு சொல்லமாட்டேன். ஆனால் அவ்வனுபவம் உண்மையில் மிகவும் பயங்கரமான ஒன்று, அது ஆத்மாவை சிதைக்கிற விஷயம். சிந்தனையை முடக்கி, இதயத்தை உறையவைக்கும் அனுபவம், அதைப்பற்றி யோசிக்கிறபோதே சஞ்சலத்தில் நம்முடைய உடல் நடுங்க ஆரம்பித்துவிடும்.  ஆனால் நாம் தைரியசாலியாக இருப்பின்  எதிபாராத தாக்குதல்கள், தவிர்க்கமுடியாத மரணம் அல்லது அழிவினைத் தரவல்ல அபாயங்கள் எதுவென்றாலும் நாம் அஞ்ச  வாய்ப்பில்லை.  இருந்தும் ஒரு சில அசாதாரண சூழ்நிலைகளில் இன்னதென்று விளங்கிக் கொள்ளமுடியாத ஆபத்தை  எதிர்கொள்கிறபோது புதிரான சிலவற்றின் செல்வாக்கு காரணமாக நம்மிடத்தில் அச்சம் பிறக்கலாம். உண்மையான பயம் என்பது ஒருவகையில் கடந்தகாலத்தில் சந்தித்த அசாதாரண பயங்கரங்கரச் சம்பவங்களின் எச்சம். பேய்ப் பிசாசுகளை நம்புவதோடு,  இரவில் ஆவிகள் நடமாட்டத்தை கற்பனை செய்யும் ஒருவன், எப்போதெல்லாம் திகிலூட்டும் அனுபவங்களுக்கு ஆளாக நேருமோ அப்போதெல்லாம் அச்சத்தை நிச்சயம் உணர்வான்.

சரி என் விஷயத்திற்கு வருகிறேன். அச்சத்தை நான் அறியவந்தது, சற்றேரக்குறைய பத்துவருடங்களுக்கு முன்பு அதுவும் பட்டப்பகலில்.  அதன் பிறகு கடந்த குளிர்காலத்தில், டிசம்பர் மாத இரவொன்றில் எனக்குத் திரும்ப அவ்வனுபவம் ஏற்பட்டது.

இவ்வளவிற்கும் இவ்விரண்டு சம்பவங்களுக்குமிடையில் பல அபாயங்களைக் கடக்கவேண்டியிருந்தது, உயிருக்கு ஆபத்துநேரக்கூடிய சாகசங்களில் ஈடுபட்டதுண்டு. யுத்தங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். திருடர்களிடம் அடிபட்டு மூச்சுபேச்சின்றி கிடந்திருக்கிறேன்; ஒரு கிளர்ச்சிக்காரனாக, அமெரிக்காவில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறேன்; சீனக் கடலோரம் கப்பலொன்றின்  மேல்தளத்தில் இருந்து கடலில் வீசப்பட்டிருக்கிறேன். இதுபோன்ற சம்பவங்களுக்குப் பலியாகிறபோதெல்லாம், என் கதை இத்துடன் முடிந்ததென்று நினைப்பேன். ஆனால் மறுநொடி எவ்வித  சங்கடமோ சோர்வோ இன்றி அடுத்து செய்யவேண்டியவற்றை முடிவெடுத்துக் காரியத்தில் இறங்குவேன்.

அச்சத்தை உணர்வு பூர்வமாக நான் புரிந்துகொண்டது ஆப்பிரிக்காவில். இன்றைக்கும் பயம் என்பது பூமிப்பந்தின் வடபகுதி மகள்; சூரியன் இங்கே அதை ஒரு மூடுபனியாக விரட்டிக்கொண்டிருக்கிறது. ஒன்றை நாம் மனதிற் கொள்ளவேண்டும் நண்பர்களே!  கீழைத்தேசத்தவர்கள் நம்மைப்போல வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களில்லை. ஒதுங்கிக்கொள்ளும்  மனோபாவம். இரவுகள் அவர்களுக்குத் தெளிவானவை,  கட்டுகதைகளுக்கு அங்கு இடமில்லை. நம்முடைய குளிர்ப் பிரதேசங்களைப்போல, மனித மூளைகளை வேட்டையாடும் மனச்சஞ்சலங்களும் அவர்களுக்கில்லை. அவர்கள் அகராதியில் அச்சமென்பதில்லை, ஆனால் பீதியை நன்கறிந்தவர்கள்.

       நல்லது, ஆப்பிரிக்க மண்ணில் எனக்கென்ன நடந்தது என்கிற விஷயத்திற்கு வருகிறேன்:

       மணல்மேடுகளும் மணற்குன்றுகளும் நிறைந்த உகாலா (Ouargla)வின் தென்பகுதி ஊடாக அப்போது நான் செல்லவேண்டியிருந்தது. உலகின் விசித்திரமான நாடுகளில் அதுவும் ஒன்று. 

சமுத்திர கரையோரங்களில் மணல் மூடிய நெடியவெளியை அனேகமாக  நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள் இல்லையா ? அதுபோன்றதொரு பூமி.  அட, சூராவளிக்கிடையில் பெருங்கடலொன்று மணலாக உருமாற்றம் அடைந்தது போல அப்பகுதி இருந்ததெனில் பார்த்துக் கொள்ளுங்களேன்! பொன்னிற மணற்தூசிகள் நிரம்பிய கடுங்காற்று, இயக்கமற்ற அலைகளாக, அமைதி காக்குமெனில் எப்படியிருக்கும், அக்காட்சியை ஒரு முறை கற்பனை செய்துபாருங்கள், புரியும். அப்பாலை நில மணல்மேடுகள் பெருங்குன்றுகள் போல நல்ல உயரம், சீரற்றும், சற்று வித்தியாசமாகவும் கட்டுபாடற்று சீறி எழும் அலைகள் எனவும் வர்ணிக்கலாம், அதேவேளை மேகவண்ண பட்டுபோல அடுக்கடுக்கான நெளிவுகளோடும், பரந்தகன்றும் அம்மணல் சமுதிரம் இருந்தது.  அப்பெருங்கடலின் சீற்றத்தில், மௌனத்தில், சலனமற்ற நிலையில், அனைத்தையும் உண்டுபசியாற எண்ணியதுபோல வெப்பமண்டல் சூரியனின் கதிர்கள் இரக்கமின்றி நேரடித் தாக்குதலில் இறங்கியிருந்தன. இந்நிலையில் சாம்பல் மூடியத் தீக்கங்குகளாக அலைஅலையாக எதிர்ப்படும் மணல் மேடுகளை; ஓய்வின்றி, ஒதுங்க நிழலின்றி தொடர்ந்து கடந்தாக வேண்டும். விந்தையான அக்குன்றுகளின் ஒருபக்கம் குதிரைகள் கனைத்தபடி, மூட்டுவரை அழுந்த ஊன்றி ஏறி, மறுபக்கம் சரிவில் வழுக்கி இறங்கும்.  

நாங்கள் இரண்டு நண்பர்கள், எங்களைத் தொடர்ந்து எட்டு ஸ்பையீக்கள் (spahis) என்கிற வட ஆப்ரிக்க குதிரை வீரர்கள், பிறகு நான்கு ஒட்டகங்களோடு அவற்றின் ஓட்டுனர்களும் வந்தனர். கடுமையான வெப்பம், சோர்வு, போதாதற்கு கொதிக்கின்ற அப் பாலைவனத்தைப்போல தாகத்தால் நா வறண்டிருந்தோம், எனவே எங்களிடையே மௌனம் குடிகொண்டிருந்தது. திடீரென்று எங்களுடன் வந்த மனிதர்களில் ஒருவர் கூச்சலிட்டார். அனைவரும் நின்றோம்;  கண்காணாத அந்தப் பிரதேசத்தில் பயணிக்கும் மனிதர்களுக்கு மட்டுமே பரிச்சயமான ஒரு திடீர் தோற்றப்பாடு தந்த அதிர்ச்சியில் நாங்கள் உறைந்து நகராமல் நின்றோம்.

எங்களுக்கு வெகு அருகில், எத்திசையில் எனச்சொல்ல முடியாத ஓர் இடத்திலிருந்து மணற் குன்றுகளின் புதிரான பறையொன்றை வாசிப்பது தெளிவாகக் கேட்டது. அந்த ஓசை சில சமயங்களில் அதிர்வதுபோலவும், சில சமயங்களில் பலவீனமடைந்தும், ஒலித்தது. தவிர தொடர்ந்தும் காதில் விழவில்லை, பதிலாக  அற்புதமான தாளகதியில் நின்று நின்று ஒலித்தது.

பீதியடைந்த அரேபியர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்;  அவர்களில் ஒருவர் தங்கள் மொழியில், ” மரணத்தின் கவனம் தற்போது நம்மீது ” என்றார். அவர் கூறி முடிக்கவில்லை, கிட்டத்தட்ட எனது சகோதரனாக வாழ்ந்த என் நண்பன், வெக்கையின் தாக்குதலுக்கு ஆளாகி தலைக்குப்புற அவனுடைய குதிரையிலிருந்து விழுந்தான்.

இரண்டு மணி நேரம், பலனற்ற வகையில் என் நண்பனைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருக்க, மாயமான அப்பறையோ விட்டு விட்டும், புரிந்துகொள்ள இயலாத  வகையிலும் அதன் சலிப்பூட்டும் ஒலியை என் செவிகளில்  நிரப்பிக்கொண்டிருந்தது. என்னுடைய எலும்புகளில் அச்சம் ஊடுறுவுவதை உணர்ந்தேன். அதாவது உண்மையான,  வெறுப்புக்குறிய பயம். எங்கே? எனது நேசத்திற்குரிய நண்பனின் இறந்த உடலுக்கு முன்பாக, நான்கு மணல் மலைகளுக்கு நடுவே, கொளுத்தும் சூரியனால் உருவான சவக்குழியில்; பறையின் ஓசை அதிகரித்திருக்க, திக்குதிசையின்றி ஒலித்த அதன் எதிரொலியில், பிரான்சு தேசத்தின் ஊர்களைவிட்டு இருநூறு லியெக்கள்(1Lieue=4 கி.மீ) தொலைவிலிருந்த ஓரிடத்தில், அப்பயத்தை நான் உணர்ந்தேன். 

பயமெனில் என்னவென்று நான் புரிந்துகொண்டது அன்றுதான். இன்னொரு முறையும் நன்றாக புரிந்துகொள்ளும் வாய்ப்பு பிறகு எனக்கு அமைந்தது….

பயம்பற்றிய தன் சொந்த அனுபவத்தைக் கூறிக்கொண்டிருந்தவரிடம் குறுக்கிட்டக் கப்பற் தளபதி:

“மன்னிக்கனும், எல்லாம் சரி, இந்த பறை விவகாரம் என்ன? அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.  எனக் கேட்க  தேசாந்திரி: எனக்கு அதைபற்றி எதுவும் தெரியாது. எனக்குமட்டுமில்லை, ஒருவருக்கும் அதுபற்றி  தெரியாது.  தனித்துவமான அச்சத்தத்தினை அடிக்கடிக் கேட்டு ஆச்சரியப்படும்  அதிகாரிகள் கடூரமாக, பல்கிப்பெருகி,  அளவிற்கொவ்வாத வகையில் பூதாகாரமாய் வெளிப்படும் அப்பெரும் எதிரொலிக்கு, மணல்மேடுகளின் ஏற்ற இறக்கங்களும், வீசும் காற்று சுமந்து செல்லும் மணலும் சிறுகற்களும் காய்ந்திருக்கும் திரளான  புல்பூண்டுகளில் நடத்தும் கல்மழைத் தாக்குதலும் காரணம் என்கிறார்கள். காரணம் இதுபோன்ற சம்பவம் எப்போதும் கடுமையான வெப்பத்தினால் புல்பூண்டுகள் காய்ந்தும், தடித்த தோல்போலுமிருக்கிற திட்டுகளுக்கு அருகில் நடக்கிறது.

எனவே இந்த பறைகூட  ஒலியின் ஒரு வகையான மாயத்தோற்றமென கருதமுடியும். இதற்கு மேல் எனக்குச் சொல்ல எதுவுமில்லை. தவிர இந்த உண்மைகளையெல்லாம் நான் அறியவந்தது பிற்காலத்தில்.

னது அந்த இரண்டாவது அனுபவத்திற்கு வருகிறேன்.

கடந்த குளிர்காலத்தில் பிரான்சின் வடகிழக்கில் உள்ள ஒரு காட்டில் நேர்ந்தது. இரவு பிறந்து இரண்டு மணி நேரமிருக்கும், அந்த அளவிற்கு இருள் சூழ்ந்திருந்தது. என்னருகில் வழிகாட்டியாக ஒரு விவசாயி, சிறுபாதை, சீற்றமுடன் காற்று ஊளையிட்டுக் கொண்டிருக்க, சூழ்ந்திருக்கும் ஊசியிலை மரங்களின் கீழ் நடந்துகொண்டிருக்கிறோம்.  மரங்களின் தலைக்குமேல்,  ஏதோ ஒரு பயங்கரத்தைக் கண்டதுபோல மேகங்கள் பீதியுடன் ஓட்டம் பிடிக்கின்றன. சிற்சில சமயங்களில், பலத்த காற்று வீசும், அப்போது காட்டிலுள்ள மரங்கள் அத்தனையும் ஒரே திசையில் சாயும், அப்போது அவைகளிடத்தில் வேதனையின் முனல் இருக்கும். இதற்கிடையில், நான் குளிரால் நடுங்கிக்கொண்டிருந்தேன், எனது தடித்த ஆடைகளோ, நாங்கள் வேகமாக நடப்பதோ, குளிரிலிருந்து எங்களைக் காப்பாற்றவில்லை.

இரவு உணவும் படுக்கையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வனக் காவலர் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தோம். அங்கிருந்துதான் வேட்டைக்கு சென்றுவந்தேன். என்னுடன்  வந்த வழிகாட்டியான விவசாயி கண்களை உயர்த்தி வானத்தைப் பார்ப்பதும் “மோசமான வானிலை” என முணுமுணுப்பதுமாக இருந்தார். பின்னர் நாங்கள் தங்கியிருக்கும் வீட்டைக் குறித்துப் பேசினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, குடும்பத்தின் தந்தையான வனக்காவலர், காட்டு விலங்குகளைக் கள்ளத்தனமாக வேட்டையாடும் ஒருவனைக் கொன்றதாகவும், அன்றிலிருந்து அதைப்பற்றிய நினைவு அவரை வாட்டிவதைப்பதாகவும், எனவே அவர் மனச் சஞ்சலத்தில் உழல்வதாகவும் தெர்வித்தார். மணமான அவரது இரு மகன்களும் அவருடன் வசித்து வந்தனர் என்பது கூடுதல் தகவல்.

அடர்ந்த இருட்டு. எனக்கெதிரே அல்லது  என்னைச் சுற்றி ஏதாவது இருக்கிறதா என சந்தேகிக்கும் அளவிற்கு இருட்டு. கொப்பும் கிளைகளுமாக மரங்கள் ஒன்றையொன்று உரசிக்கொண்டு இடைவிடாமல் எழுப்பும் முணுமுணுப்பு இரவை நிரப்பின. ஒருவழியாக விளக்கொளி கண்ணிற்பட்டது. என்னுடன் துணையாக வந்தவர் சென்று கதவைத் தட்டினார். பதிலாக கிடைத்தது பெண்களின் அலறும் குரல்கள், தொடர்ந்து ” யார் அங்கே?” என ஓர்  ஆணின் குரல், சற்று திணறலுடன் ஒலித்தது. எனது வழிகாட்டி தன்னுடையப் பெயரைத் தெரிவித்தார். உள்ளே நுழைந்தோம். அங்கேயொரு மறக்க முடியாத காட்சி, எங்களுக்கென காத்திருந்தது.

தலை நரைத்த, வெறிகொண்ட பார்வையுடன் சற்று வயதான ஆசாமி தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கியைக் கையில் ஏந்தியபடி சமயலறை நடுவில் எங்களுக்காக காத்திருந்தார். இரண்டு வாட்டசாட்டமான வாலிபர்கள் ஆளுக்கொரு கோடரியுடன் கதவருகே காவலிருப்பதுபோல நின்றிருந்தனர். இருண்டிருந்த மூலைகளில் இரண்டு பெண்கள் முகத்தை சுவரில் மறைத்து மண்டியிட்டிருந்தனர்.

நிலமை விளங்கியது. முதியவர் தனது துப்பாக்கியை மீண்டும் சுவரில் சாத்தியபின், என்னுடைய அறையை ஒழுங்கு செய்யும்படி அவர்களிடம் கட்டளையிட்டார்;  பெண்கள் இருந்த இடத்தைவிட்டு அசையாமல் இருக்க, என்னிடம் :

“நீங்கள் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  இதே இரவில் ஒரு மனிதனைக் கொன்றேன். மறு வருடம், என்னைத் தேடி அந்த ஆள் வந்தான். இன்றிரவும் அவன் வருவான் என்பதால் காத்திருக்கிறேன் » – என்றார்.

பின்னர் அவர் என்னிடம், சிரிக்க வைக்கும் தொனியில் :

” ஒரு வகையில் நம்முடைய நிம்மதியைத் தொலைத்துவிட்டோம்” என்றார்.

முடிந்தவரை அந்நபருக்கு தைரியமூட்டினேன். அன்றைக்கென்று பார்த்து அந்த வீட்டிற்கு வரநேர்ந்ததும், அப்படியொரு அமானுஷ்ய  பீதி சார்ந்த சம்பவத்தில் பங்கெடுக்க நேர்ந்ததும் உண்மையில் எனக்கு மகிழ்ச்சி. நானும் சில கதைகளைக் கூறினேன், கிட்டத் தட்ட அங்கிருந்த மொத்தபேரையும் அமைதிப்படுத்த என்னால் முடிந்தது.

கணப்பு அடுப்பருகில், ஏறக்குறைய கண்பார்வையை இழந்து, மீசையோடு ஒரு வயதான நாய் பாதங்களில் தலையை வைத்து உறக்கத்தில் இருந்தது, எனக்கு நன்கு அறிமுகமான மனிதர்களில் ஒருவர் என்கிற தோற்றத்தை அது தந்தது.

வெளியே  சூராவளிக் காற்று அச்சிறியவீட்டை தாக்கிக் கொண்டிருந்தது.  கதவருகே வெளியே பார்க்கவென்று அமைத்திருந்த கண்ணாடியிட்ட சாளரம் போல சிறு ஊடுபுழை. தென்பட, அதன் வழியாகப் பார்க்கிறேன், திடீரென மிகவும் பிரகாசமாய் பெரியதொரு மின்னல், அதன் வெளிச்சத்தில் மரங்கள் திரளாக காற்றின் வேகத்தில் சாய்வதைக் கண்டேன்.

 என்னதான் நான் முயற்சித்தபோதிலும் மிகக் கடுமையான பீதியில் அந்த வீட்டு மனிதர்கள் இருப்பதாக எனக்குப் பட்டது. காரணம் நான் எனது பேச்சினை நிறுத்தும் போதெல்லாம், அம்மனிதர்களின் செவிகள் வெகுதூரத்தில் எதையோ காதில் வாங்கிக்கொண்டு இருந்தன. பைத்தியக்காரத்தனமான அவர்களுடைய அச்சத்தில் எரிச்சலுற்று, எனது அறைக்குத் திரும்பி உறங்க நினைத்தேன். வயதானக் காவலர் திடீரென்று நாற்காலியில் இருந்து தாவிப் பாய்வதுபோல எழுந்து மீண்டும் துப்பாக்கியைக் கையிலெடுத்தார். பின்னர் நா குழற : “ அதோ…அதோ அந்த ஆள்! நம் வீட்டை நெருங்கி இருக்கிறான். காலடிசத்தத்தைக் கேட்கிறேன்!” எனக் கூச்சலிட்டார். பெண்களிருவரும் அவர்கள் எங்கிருந்தார்களோ அங்கு, மீண்டும் முழந்தாளிட்டு அமர்ந்து தங்கள்முகத்தைக் கைகளில் புதைத்தார்கள். மறுபக்கம் அவருடைய பிள்ளைகள் இருவரும் தங்கள் கோடரிகளை கையில் எடுத்திருந்தனர்.

அக்குடும்பத்தினரை மறுபடியும் அமைதிப்படுத்த முனைந்தேன். அச்சமயம் உறக்கத்திலிருந்த நாய் சட்டென்று விழித்ததுபோல, தலையை உயர்த்தி, கழுத்தை நீட்டி,  தனது மங்கியப் பார்வையை கணப்பு அடுப்பின் தீ மீது பதித்து சோகத்தில் தோய்ந்த குரலில் ஊளையிட்டது. இரவு நேரம்,காடும் கரம்பையுமாகவிருந்த அப்பகுதியை உபயோகிக்கும் வழிபோக்கர்கள் நிச்சயம் நாயின் ஊளையைக் கேட்டுக் குலைநடுங்கி இருக்கவேண்டும். அங்கிருந்த அனைவரின் கண்களும் வனக் காவலர் மீதிருந்தன. நின்ற இடத்திலிலிருந்து அவர் அசையவில்லை. ஏதோ ஒன்றைக் கண்டு அஞ்சிய அம்மனிதர் முன்பாதங்களை ஊன்றி, கண்ணுக்குத் தெரியாத, முன்பின் பார்த்திராத, ஐயத்திற்கிடமின்றி திகிலூட்டுகிற அந்த தோற்றத்தைக் கண்டு ரோமங்கள் சிலிர்க்க வெளிரிய முகத்துடன்: “இறந்தவனை முகர்ந்து பார்க்கிறான், மோப்பம் பிடிக்கிறான்! நான் கொல்லும்போது அவனும் இருந்தான்!” எனக் கத்தினார். பெண்கள் இருவரும் பீதியில் நாயுடன் சேர்ந்து பெருங்குரலில் சத்தமிட்டார்கள்.

என்னையும் மீறி, எனது தோள்களுக்கிடையில் நடுக்கத்தை உணர்ந்தேன். அந்த இடத்தில், அப்படியொரு நேரத்தில், பீதியில் நிலைகுலைந்திருந்த அம்மனிதர்கள்  மத்தியில், கண்ணுக்குப் புலனாகாத ஒரு மிருகத்தின் வருகையை எண்ணிப் பார்க்க பயமாக இருந்தது.

அதேவேளை,  ​​ஒரு மணி நேரத்திற்கு குறையாமல், நாய் தன் இடத்திலிருந்து நகராமல் ஊளையிட்டது; ஒரு கனவின் வேதனையில் ஊளையிடுவதுபோல தோன்றியது. இந்நிலையில் அச்சம், பயங்கரமானதொரு அச்சம் என்னுள் பரவியது. என்ன பயம்? என்று கேட்டால் உங்களுக்கு என்ன  பதிலைச் சொல்ல? அதொரு அச்சம், அவ்வளவுதான்.

எல்லோரும் உறைந்த மனிதர்களாக சவம்போல முகம் வெளுத்து காதுகளைத் தீட்டிக்கொண்டு, இதயம் வேகமாகத் துடிக்க, சின்னஞ்சிறு ஓசைக்கும் திடுக்கிட்டு, நிகழவிருக்கும் பயங்கரத்தை எதிர்பார்த்து காத்திருந்தோம். நாய் அவ்விடத்தில் திரும்பத் திரும்பச் சுற்றிச் சுற்றி வந்து  சுவர்களை முகர்ந்தவண்ணம் அவ்வப்போது உர்..உர் என ஓயாமல் சத்தமிட்டுக்கொண்டிருந்தது. வேட்டைக்கு என்னுடன் துணைக்குவந்த விவசாயி “இந்த நாயால் நாம் பைத்தியமாகிவோம்!”  எனக் கத்தினார், பின்னர்  வெறித்தனமான ஆவேசத்துடன் நாய்மீது பாய்ந்து, ஒரு சிறிய முற்றத்திற்குச் செல்லும் கதவைத் திறந்து, அதைத் தூக்கி வெளியில் எறிந்தார்.

அதன் பிறகு அங்கு அமைதி. நாங்களும் அப்பயங்கரமான அமைதியில் மூழ்கியிருந்தோம். திடீரென்று, அனைவரையும் அதிர்ச்சியில் வீழ்த்துவதுபோல அது நிகழ்ந்தது: மனிதனோ, மிருகமோ ஏதோ ஒன்று சுவரின் மறுபக்கம் காடு இருக்கும் திசையில் மெல்ல நழுவிச் செல்வதுபோல இருந்தது, பின்னர் கதவருகே வந்திருக்கவேண்டும், கதவைத் தயக்கத்துடன் மெல்லத் தொட்டுத் தடவியது. அதன்பிறகு இரண்டு நிமிடங்கள் எந்தச் சத்தமும் இல்லை. அத்தருணம் எங்களை பைத்தியமாக்கியதெனச் சொல்லவேண்டும். அதன்பின் சுவரை உராய்வதுபோல அந்த ஜீவன் நடக்கிறது, குழந்தையொன்று தனது விரல் நகத்தால் கீறுவது போல பிராண்டியது. திடீரென்று ஊடுபுழையில் வெள்ளைநிறத்தில் ஒரு தலை, காட்டுப்பூனையின் கண்களைப்போல ஒளிரும் கண்கள். அதன் வாயிலிருந்து இன்னதென்று புரியாதவகையில் வெளிப்பட்ட முணுமுணுப்பில் துயரம்.

சமையலறையில் பயங்கர சத்தம். வனக்காவலர் துப்பாக்கியால் சுட்டிருந்தார்.  அவருடைய பிள்ளைகள் இருவரும் விரைந்து வந்து, பெரிய மேசையோடு ஒரு பண்டப்பேழையையும் இணைத்து ஊடுபுழையை பலமாக அடைத்தனர்.

உணமையைச் சொல்லவேண்டுமெனில் நடந்து முடிந்த அத்துப்பாக்கிச் சூட்டை நான் எதிர்பார்க்கவே இல்லை. அச்சத்தில் மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. அத்துப்பாக்கிச் சூட்டினால் எனது இதயம், உயிர், உடல் மூன்றும் அப்படியொரு வேதனையை அனுபவித்தன.

விடியும் வரை அங்கேயே இருந்தோம், எங்களால் நகர முடிவில்லை, சுருங்கச் சொவதெனில் விவரிக்க முடியாத பீதியில் பதற்றத்தின் உச்சத்தில் நாங்கள் இருந்தோம்.

வீட்டின் பின்பக்கம் மெல்லிய கீற்றாக இருந்த ஓட்டையில் விடியலைக் கண்ட பின்பே முன்பக்க வழியிலிருந்த தடுப்பை அகற்றும் துணிச்சல் எங்களுக்கு வந்ததது.

சுவரின் அடிவாரத்தில், துப்பாக்கி குண்டு வாயைச் சிதைத்திருக்க, கிழநாய் கதவருகே செத்துக் கிடந்தது,

வேலிக்கு அடியில் சிறுபள்ளத்தைத் தோண்டி முற்றத்திலிருந்து நாய் வெளியேறி இருக்கவேண்டும்.

                           ***

பழுப்பு நிற முகம் கொண்ட  நம்முடைய தேசாந்திரி சில நொடிகள் அமைதிகாத்தார், பின்னர்:

“அன்றிரவு, எனக்கு எந்த ஆபத்துமில்லை; சிறு சாளரத்தில் கண்ட வெண்ணிற தலையை வனக் காவலர் சுட்ட அந்த ஒரே ஒரு நிமிடத்தைத் தவிர பிற நேரங்களில் எதிர்கொண்ட பயங்கரமான எல்லா அபாயங்களையும் விவரமாக, நீங்கள் கேட்க தயாரெனில் திரும்பச் சொல்ல நானும் தயார்  » – என்றார்.

                           —

Series Navigation    வைதீஸ்வரனின் ஆவணப்படம்….தில்லிகையின் அக்டோபர் மாத கூடுகை அழைப்பிதழ்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *