அப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார்

வே.ம.அருச்சுணன் – கிள்ளான்

இந்த நூற்றாண்டில்
மக்கள் அதிகம்
உச்சரித்த பெயர் அப்துல் கலாம்
ஏழையாப் பிறந்தாலும்
உழைப்பால் உயர்ந்து காட்டிய
புனித ஆத்மா……….!

வெட்டியாய்த் திரியாமல்
கனவு காணுங்கள் என்றே
போதிமர புத்தனாய்
இளைஞர் பட்டாளத்து
தளபதியானாய்…….!

அக்கினி பூக்களாய்க்
கருத்துக் கருவூலங்கள்
நாடி நரம்புகளில் பிரளயம் செய்தாய்
நாட்டின் தலைமகன்
தமிழ் உள்ளங்களின் தவப்புதல்வன்
ஆணவம் காணா அறிஞன்
மனிதரில் மாமனிதர்
மனுக்குலத்தின் பிதாமகன்
முத்தானக் கருத்துக்கு மட்டுமே
முகம் காட்டும்
முகமூடி அணியா நெறியாளன்….!

உனது விஞ்ஞானம்
இந்திய மண்ணை உயர்த்தியது
உனது தமிழ் உணர்வு உலகில்
வாழும் தமிழ் இனத்தின் மாண்பை
இமையத்தில் வைத்தது……!

உன்னை நினைத்தால்
நெஞ்சம் புடைக்கிறது
நிறைவாகும் கனவால் உள்ளம்
குதியிட்டு துள்ளுகிறது
யாதும் ஊரே; யாவரும் கேளிர்
ஐ.நா.சபையில் உனது குரல்
தமிழனின் கம்பீரம் தெரிந்தது
தேமதுர தமிழோசை

உலகெங்கும் கேட்டது
தமிழருக்கு மகுடம் நிலையானது
உனது பிறப்பின் பயன் நிறைவானது…………..!

உலகத் தமிழருக்கு
நீ தலைவன்
அடுத்த தலைமுறையும் உன்னை
மறவாமல் வணங்கும்
மதத்தால் வேறுபட்டாலும்
மொழியால் ஒன்றுபட்டே
உணர்வால் உயர்ந்து நிற்பவன்……….!

வாழும் வரைப் போராடியவன்
கணப்பொழுதும் சுணங்காதவன்
அன்பையும் அறிவையும்
குறைவின்றி விதைத்தவன்
தர்மத்தையும் தாய்மையும்
நிலைபெறச் செய்தவன்
இறுதி மூச்சும் மக்களுக்கே
உன் பதிவை உலகம் ஏற்கும்
தமிழர்களின் ஜீவன் நீ அன்றோ………..!

Series Navigationவிலங்குகள் பற்றிய நினைவுகளோடு குழந்தை மனம் கொண்டவர்களும் பூனார்த்தி – இறையன்புவின் சிறுகதைத் தொகுப்புவாராது வந்த மாமணி – எங்கள் அப்துல்கலாம்