அப்பாவிக் குழந்தைகளின் அன்பான வேண்டுகோள்…

Spread the love

        இரா.முத்துசாமி

 

 

பயிறு செழிக்கணு முன்னு

நீங்க அமைச்ச

குழாய் கிணறுஎங்க

உயிரைப் பறிக்கு முன்னு

கொஞ்சம் கூட நினைக்கலையே

 

விளையாட போறமுன்னு

வீசி வீசி நடந்து வந்தோம்

கண்மூடி திறக்குமுன்னே

காணாமப்போனதென்ன

 

அடி பாவி மக்கா!

தண்ணியில்லாக் குழாய் கிணற

மண் அணைச்சு வச்சுருந்தா

நெஞ்சணைச்சு வளர்த்த பிள்ளைங்க

நெலம இங்கே மாறியிருக்கும்

 

கள்ளமில்லா பிள்ளை நாங்க

கதறி நின்னு அழுத மொழி

கடவுளுக்கும் கேட்கலையோ

கண்ணு கொண்டு பாக்கலயே

 

மரண குழி வாசலில

மன்றாடி நிக்கையில

எம் மதக் கடவுளுக்கும்

எங்க குரல் கேட்கலையே

 

அடி பாவி மக்கா..!

காது கேளா கடவுளிடம்

முறையிட்டும் பயனில்ல..

கவனமா நீ இருந்தா

காலனுக்கும் பயமில்ல

அழுது புலம்பி

நாங்க வுரைக்கும்

அவல மொழி

எங்களோடு போவட்டும்

பயனில்லாக் குழி இருந்தா

பத்தரமா மூடிடுங்க

யாருக்கும் எங்க நிலம

வந்திராம காத்திடுங்க.

 

இரா.முத்துசாமி எம்..பி.எட்   தமிழாசிரியர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கடையநல்லூர்.

Series Navigationஇரு குறுங்கதைகள்இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளின் சமுதாயப் பணிகள்