அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின.?

This entry is part 11 of 33 in the series 3 மார்ச் 2013

534807_4908099378073_482775559_n
நாம் சின்னப் பிள்ளையில் அம்புலிமாமா, கோகுலம், பாப்பா மலர், பாலமித்ரா,அணில், முயல்  போன்ற புத்தகங்கள் படித்திருக்கிறோம்.   அழ. வள்ளியப்பாவின் குழந்தைக் கவிதைகளும், வாண்டுமாமாவின் கதைகளும் என்றால் நேரம் காலம் தெரியாமல்  படித்து ரசித்திருக்கிறோம்.

இதுபோக தாத்தா பாட்டி போன்றோரும் அம்மா, அப்பாவும் கதை சொல்லி ஊட்டி வளர்த்திருப்பார்கள். இன்று நகரங்களில் வாழும் ஏன் கிராமங்களில் வாழும் குழந்தைகளுக்குக் கூட கல்வியைத் தாண்டி ஏதும் சிந்திக்க முடியவில்லை.

கதை சொல்லும் தாத்தா பாட்டிகளும் அம்மா அப்பாக்களும் அருகி விட்டார்கள். எல்லாரும் புத்தக வாசிப்பை விட்டு தொலைக்காட்சிப் பெட்டிக்குள் தொலைந்து போனார்கள். இவர்களை எல்லாம் மீண்டும் புத்தக வாசிப்புக்குள் கொண்டு வருவது கடினமான சூழலில் இந்த குழந்தைகளுக்கான புத்தகம் வந்துள்ளது.

மிகப் பெரும்  விருதுகளெல்லாம் கிடைத்துள்ள இந்த நூலில் பதின்மூன்று கதைகள் இடம் பெற்றுள்ளன. எல்லாம் காட்டுக்குள்ளே உள்ள விலங்குகளை நாயகர்களாகக் கொண்டு எழுதப்பட்ட கதைகள். ஒவ்வொரு கதைக்கும் பொறுத்தமான ஓவியங்களை வரைந்தவர்களும் பதின் பருவத்தைத் தாண்டாத சுட்டிகளே.  அட்டைப் படத்தை வரைந்த ஓவியர் ஜி. ஜி. ஹரீஷ் ஆதித்யாவுக்கு நாலரை வயதுதான். மரங்கள் கால் முளைத்து ஓடும் காட்சியும் மேகங்கள் விக்கித்து நிற்கும் முகத்தோடும், சூரியன் கோப முகத்தோடும் மிக அழகான அட்டைப் படம்..

பாட்டுப் போட்டியில் முதல் பரிசு பெற தவளையார் செய்யும் தந்திரம், தாடியில்லாத சிங்கம், ஓசோன் கிழிசலைத் தைக்கச் செல்லும் பாபு, நாட்டு மக்களுக்காக கால்வாய் வெட்டும் காட்டு ராஜா, வேப்பமரம் வெட்டுப் படக் கூடாதென்று தேனை வழங்கிய ராணித் தேனீ, சுற்றுச் சூழலைக் கெடுக்கும் பாக்டரியை அகற்றுதல், அணை கட்டுவதற்காக மரங்களை வெட்ட அவை அனைத்தும்  இடம் பெயர்ந்ததும் உருவான இடம் சஹாரா பாலைவனமாகவும் அவை சேர்ந்து இருக்கும் இடம் அமேசான் காடுகளாகவும் உருப்பெற்றது என அழகான சித்தரிப்புக்கள் அதிகம்.

சிங்கராஜாவாக ஓநாய் நடிப்பது, துப்பாக்கியை வைத்து நரி மிருகங்களை மிரட்டி உணவாக்கிக் கொள்வது,உப்பு வியாபாரிக்கு பாடம் போதித்த கழுதை, இவை மூன்றும் பஞ்சதந்திரக் கதைகள் போல இருந்தன.

காட்டில் நடக்கும் அழகுப் போட்டியும் அதில் இயல்பாய் இருப்பதுதான் அழகு என்றும், அதில் நமது தனி அடையாளத்தைப் பாதுகாத்து அவற்றை மேலும் மேம்படுத்துவதுதான் அழகு என்றும் சொல்லியது மிக அழகு.

உணவு வழங்கும் தாயை அழிக்கலாமா சிந்திக்க வைத்த கதை. வயல்வெளிகள் எல்லாம் கட்டிடங்களாக மாறும் நேரம் இந்தக் கதை அதன் இன்னொரு பக்கதைச் சொன்னது.

கரடியாரின் புரட்சித் தீர்ப்பு கொஞ்சம் வித்யாசமான ஒன்று. அனைத்து மிருகங்களுக்கும் ஒரே மாதிரி உடையில்லாமல் உலவக் கொடுக்கும் தீர்ப்பு. படித்து சிரிப்பு ஏற்பட்டது.

புதிய தலைமுறையில் பணியாற்றும் பெ. கருணாகரனின் இந்த முயற்சிக்கு முன்னுரை கொடுத்தவர் எஸ். ஆர். எம். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஆர். பி. சத்யநாராயணன். தன்னை உருவாக்கிய விகடன்.எஸ். பாலசுப்பிரமணியனுக்கு இந்த நூலை நன்றியுடன் சமர்ப்பித்து இருக்கிறார்.
விகடன் பாசறையில் வந்த எழுத்தாளர் அல்லவா.. அதுதான் அனைத்தும் நிரம்பி இருக்கிறது. இது ஒவ்வொரு நூலகத்திலும் இருக்க வேண்டிய புத்தகம். வாங்கியும் பரிசளிக்கலாம்.

நூல்:- அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின.?

ஆசிரியர்:- பெ. கருணாகரன்.

பதிப்பகம்:- எஸ். ஆர். எம். பதிப்பகம்.

விலை – ரூ. 100.

Series Navigationவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -8இருள் தின்னும் வெளவால்கள்
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *