அம்மா இல்லாத நாட்கள் !

Spread the love

 

அம்மா !
உன் எழுபது வயது
பிள்ளையைப் பார்த்தாயா ?

என் இரண்டு கைகளையும்
உன் இடது கையால் பிடித்துக்கொண்டு
என் இரண்டு கால்களையும்
உன் ஒரு காலால் அமுக்கிக்கொண்டு
அழகான வெண்கலப் பாலாடையில்
பாலில் மிதக்கும் விளக்கெண்ணையைப்
” முழுங்கு … முழுங்கு …’ என அதட்டிப்
புகட்டினாயே அதே பிள்ளை
இப்போது
தாடி – மீசை நரைத்துத்
தலைமுடி கொட்டி
முதுமையின்
கரடுமுரடான பாதையில்
போய்க்கொண்டிருக்கிறேன்

என் இளமைக்கால வறுமையை
அடித்து விரட்டினேன்
பாதி தூரம் சென்ற அது
அவ்வப்போது என்னைத்
திரும்பிப் பார்க்கிறது

இப்போதெல்லாம்
சாப்பாட்டோடு காய்கறி
சேர்த்துக்கொள்ள முடிகிறது

வீட்டிற்கு
ஆறாயிரம் ரூபா
வாடகை கொடுக்க முடிகிறது

உனக்கு
வாங்கித்தர முடியாமல் போன
மூக்குக்கண்ணாடி
இப்போது என் முகத்தில்…

உன் பேரன் ராஜேஷ்
நாற்பது வயதைத் தாண்டிவிட்டான்
என் பேரனைப் பார்க்க
நான் காத்துக்கொண்டிருக்கிறேன்

நீ போய் முப்பது ஆண்டுகள்
கழிந்தாலும்
இப்போதும்
உன் குரல் என் காதில்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது அம்மா

Series Navigationமழைக்கூடு நெய்தல்பூதக்கோள் வியாழன், வெள்ளிக்கோள் இடையே உள்ள ஈர்ப்பால், பூமியின் சுற்றுப்பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேர்கிறது