அம்முவின் தூக்கம்

ஷான்
பறித்துப் போன
பாவி மனங்களை
கடை மூடிக் கணக்கிடும்
குறும்பாடும் கண்கள்

மறுநாள் புன்னகைகள்
பதியனிட்டுக் கொண்டு
சிரிப்பாடும் சிறு
குமிழ் இதழ்கள்

தொடுகை முடிந்து
மூடிக் கிடக்கும்
நகம் பூத்த
விரல் தாமரைகள்

தாவிக் குதித்து
ஓடிக் களித்து
ஓரிடம் நின்ற
களைப்பில்லாக் கால்கள்

ஏறி இறங்கும்
சுவாச அசைவில்
உலகம் தாலாட்டும்
இலை வயிறு

இதழின் ஓர் கோடியில்
எப்போதாவது பூக்கும்
இளக்காரப் புன்னகை
புரியாத புதிராய்

அம்மு தூங்கவில்லை

அவள் புரிவது
எங்கள் நாளைய
சந்தோஷங்களுக்கான
இன்றைய தவம்

– ஷான்

Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூர்வ காலத்துப் பூமத்திய ரேகை ஒரு சமயம் வடதுருவத்துக்கு அருகில் இருந்ததைக் காட்ட பூர்வப் படிவுகள் [Fossils] ஆதாரம்மகாலட்சுமி சுவாமிநாதன்