அரியாசனங்கள்!

மனைகளாய் விரிந்து கிடக்கிறது
பயிர் விளைந்த பூமியின் மிச்சங்கள்!
பாரம் ஏற்றப்படும் கற்களில் உடைந்துக்
கிடக்கிறது மலையொன்றின் தொன்மங்கள்!
வாகன நெருக்கத்தில் சதை பிளந்து
காட்சியளிக்கும் சாலைகளினிடையே
மண்டையோட்டின் ஓவியங்கள்!
குடி நீர் இல்லாத போதும் வெட்டுருவிற்கு
பாலூற்றும் அடிமைகளின் அணிவகுப்பில்
எத்தனையோ நடிகர்களின் அரியாசனங்கள்!
போதை வருமானமும் செரிமானிக்காத
ஊழல் உணவிலும் வேதாந்தம் பேசும்
அரசியல் வியாதிகளாய் உலக வங்கியின்
கடன் சுமைகள்!
எலும்புக்கூடுகளில் விலைவாசியின்
கல்வெட்டுக்களை செதுக்கிக் கொண்டிருக்கும்
உழவர்குல நடை பிணங்கள்!
நாட்டின் சாபக்கேடாய் முதுகெலும்பொடிந்த
எழுத்தாணிகளின் படிமக்கூறுகள்!

மணவை அமீன்

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 6 துயரம் போதும் எனக்குமெங்பெய்யிலிருந்து வந்த பெண்