முனுசாமி பாலசுப்ரமணியனின் ஐந்து நூல்கள்.. ஒரு பார்வை .

This entry is part 37 of 40 in the series 1 ஏப்ரல் 2012

புதுவையைச் சேர்ந்த பொறியாளர் பாலசுப்ரமணியம் 5 நூல்கள் வெளியிட்டுள்ளார். தன் பிள்ளைகள் இளம்பரிதி, அன்பன் ஆகியோரின் பெயரை இணைத்து பரிதியன்பன் என்ற புனைபெயரில் எழுதியுள்ளார். புதுவை அரசால் இவரது புத்தகங்கள் விருதுகள் பெற்றுள்ளன. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவிற்குப் பிறகு நான் இவரின் சிறுவர் பாடல்கள் புத்தகம் படித்து மகிழ்ந்தேன். சிறுவர் பாடல்கள் ”சிட்டுக் குருவி, நடைவண்டி” என இரண்டு புத்தகங்களும். ”அரைக்கீரை விற்கிறான் அம்பானி” என்ற ஒரு துளிப்பா புத்தகமும்., வாழப்பிறந்தோம் மற்றும் வெள்ளைத்திமிர் என்ற இரு சமுதாயக் கவிதைப் புத்தகங்களும் வெளிவந்துள்ளன.

இதில் சிறுவர் பாடல்கள் அரசு நூலகங்களிலும் அனைத்துப் பள்ளிகளிலும் வைக்கப்படும் அளவு எளிமையும் அழகும் மிளிர்ந்து காணப்படுகிறது.

”சிட்டுக் குருவி”யில் நாம் இயற்கையை சீரழிப்பதும் அது பொங்கி நம்மை அழிப்பதும் குழந்தைகளுக்குப் புரியும் மொழியில் ஒரு பாடலில் சொல்லப்பட்டுள்ளது.

“நீர் தேங்கும் இடங்களை மனையாக்கிவிட்டு
நித்தமும் புலம்பித் திரிகின்றார் வீணே
நில அமைப்பு முறையை வீணாக்கமலே
நிம்மதியான வாழ்வைப் பெறுவீரே.”

மேலும் பாம்புகளும் ஒரு உயிரினம்தான் அதுவும் வாழ்ந்தால்தான் படைப்புச் சுழற்சி முழுமை பெறும். எல்லா உயிரினமும் வாழ வழிவிடுங்கள் என மழலையர்க்கு பயம் நீக்கிப் புரிய வைக்கும் பாடலும் அழகு. மேலும் காகத்திடம் ஒற்றுமை கற்பது. எரி சக்தி தேவையில்லா மிதிவண்டி உபயோகிக்க அறிவுறுத்தல், புதுவை பாரதி பூங்கா, ஆயி மண்டபம், தமிழர் நிலம், கானல் நீர், நிலநடுக்கம், ஆழிப் பேரலை, ஓசோன் படலம், அமில மழை, கருந்துளை பற்றிய பாடல்களோடுமகள் யாழினி பற்றிய பாடல் அற்புதம்.

பெரியார் ,அம்பேத்கார், ஜீவா, நேரு அப்துல் கலாம், திருமுருகன், ம. லெ. தங்கப்பா, அரிமதியார் இலக்கியன் போன்றோர் பற்றிய கவிதைகளும் உண்டு.

“நடைவண்டி”யில் மழை நீர் சேகரிப்பு, கூடா நட்பு, நாயின் நன்றி, பூனை, அகராதி, அடுத்தவர்க்கு உதவி செய்தல், பாரதிதாசன், அண்ணா, வ. சுப்பையா, பாரதி, தமிழ் ஒளி, மற்றும் தாஜ்மகால், நடைவண்டி, மரப்பாச்சி பொம்மை, விமானம். பட்டம் தேசியக்கொடி, தொடர்வண்டி போன்ற கவிதைகள் அருமை.

சிரிப்பு பற்றிய பாடலில்
“சிந்தை தெளியும் சிரிப்பதால்
சினமும் மறையும் சிரிப்பதால்
கந்தை கட்டி வாழ்ந்தாலும்
கவலை மறையும் சிரிப்பதால்”

இன்றைய காலகட்டத்துக்கு மனிதனுக்கு சிரிப்பு என்பது மறந்து போன விஷயமாகிவருகிறது. அதன் தேவையை சொன்ன பாடல் இது.

””அரைக்கீரை விற்கிறான் அம்பானி” யில் சமூகச் சாடல் நிறைந்த துளிப்பாக்கள் . சிந்தனையைத் தூண்டுகின்றன. எல்லாமே எழுச்சிக் கவிகள்.

”மொட்டை மரங்கள்
வற்றிய நீர்நிலை
பொட்டலாய்க் காடு”

“வேகமாய் எழும்
வெட்டிக் கொண்டு விழும்
கோபம்”

“அதிர்ச்சியில் ஆயா
அரைக்கீரை விற்கிறான்
அம்பானி”

உள்ளூர் வியாபாரிகளை ஒடுக்கிவிடும் உலகமயமாக்கல், மக்களின் பொறுப்பற்ற தனம் பற்றிய சாடல்கள் கவிதைகளில் தெறிக்கின்றன.

“வாழப் பிறந்தோம்.” என்ற தொகுதியில் மதுவின் தீமை, புகைப்பது இகழ்ச்சி, தாய்மொழிக்கல்வியின் அவசியம், இட ஒதுக்கீடு, தாய்ப்பால், குழந்தைத்தொழிலாளர்கள், சாதிக்கலவரம்., பசி, வரதட்சணை ஒழிய வழி, மதவாதம் இவற்றோடு சுற்றுச் சூழல் காப்பது குறித்த கவிதைகளும் தேச நிர்மானி என்று உரைக்கும் கவிதையும் வித்யாசம்.

“மாற்றுப் பயிர் செய்து
மண்வளம் காத்திடுவோம்
மாமழை நீரைத் தேக்கி
மண்ணுக்குள் செலுத்திடுவோம்”

காவிரியா .. கண்ணீரா என்ற கவிதையில் தண்ணீருக்காக பாடுபடுவதாக நடிக்கும் நிஜமுகங்களைத் தோலுரிக்கிறார்.

“ஆளுகின்ற அரசு எல்லாம்
அரசு பண்ணக் காவிரி நீர்
கானல் நீராய் ஆனதுவே
கண்ணீர் மல்கிப் போனதுவே”

“வெள்ளைத் திமிர்” இதில் வெள்ளைத்திமிர் என்ற தலைப்பிலான கவிதை ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பை கொடுமையை வன்செயலை கடுமையாக சாடுகிறது. சாதியம், மே நாள், இந்திய முகத்திரை, இமயம் வெல்வோம், கருத்தியலின் சின்னம் கவிதைகளும் உண்டு. இன்றைய இளைஞர் பற்றிய கவிதையும் கம்யூட்டர் விளையாட்டில் மூழ்கும் பழக்கம் பற்றிய கவிதையும் மிக எதார்த்தம்.

பிள்ளைகள் எது எதைக் கைக்கொள்ள வேண்டும். எதெதை விடவேண்டும் எனத் தெள்ளிய முறையில் பகர்கின்றன கவிதைகள். கவிதைகளின் அடிநாதமாக குழந்தைகள் மேல் கொண்ட அபரிமிதமான அன்பும் பொறுப்புணர்வும் வெளிப்படுகிறது. நாளைய சமுதாயத்தைச் சீர் படுத்தும் முயற்சியாக தன் கவிதைகளை குழந்தைகளுக்குக் கொடுத்திருக்கிறார் பாலசுப்ரமணியன். சமுதாயச் சாடல்களும், மக்களுக்கான விழிப்புணர்வும். பெருந்தலைவர்கள் பற்றிய கவிதைகளும் கொண்ட அற்புத நூல்கள் இவை. இதில் சில ஆங்கில வார்த்தைகளும் கலந்திருந்தாலும், ஒரு கவிதையில் அரசாள்பவரைப் பற்றிய கோபங்கள் மிகவும் அதிகமாக தாக்குமளவு இடம் பெற்றிருந்தாலும் இவற்றில் பெரும்பகுதி குழந்தைகளுக்கு நலம் பயப்பதாகவே உள்ளதால் இவற்றை எல்லாக் குழந்தைகளுக்கும் பயனளிக்கும் அளவு பள்ளிகளில் இடம்பெறச் செய்யவேண்டும் என்பதே என் கருத்தாக இருக்கிறது.

நூல்கள் . பதிப்பகம். விலை பற்றிய விபரங்கள்.

1. சிட்டுக் குருவி – யாழினி பதிப்பகம் – விலை ரூ . 110/- ( வாழ்த்துரை பாவலன் இலக்கியன்)

2. நடைவண்டி – யாழினி பதிப்பகம் – விலை ரூ 80/- ( அணிந்துரை தமிழ்மாமணி புலவரேறு அரிமதி தென்னகன், வாழ்த்துரை இரா. தேவதாசு)

3. அரைக்கீரை விற்கிறான் அம்பானி – ஜெயந்தி பதிப்பகம் – விலை ரூ 75/- ( அணிந்துரை புதுவைத் தமிழ்நெஞ்சன்)

4. வாழப்பிறந்தோம் – ஜெயந்தி பதிப்பகம் – விலை ரூ 70/- ( அணிந்துரை கலைமாமணி கோனேரி பா. ராமசாமி, )

5. வெள்ளைத்திமிர் – ஜெயந்தி பதிப்பகம் – விலை ரூ 100/- ( அணிந்துரை முனைவர் நா. இளங்கோ)

Series Navigationநெய்தல் பாடல்”பின் புத்தி”
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

Comments

  1. Avatar
    Balasubramanian says:

    என் புத்தகங்கள் பற்றிய ஒரு சிறப்பான அறிமுகமாகவும்.என்னைப்பற்றிய ஒரு நல்ல அறிமுகமாகவும் .திண்ணையில் பதிவிட்ட நட்புக்குறிய தோழியர் தேனம்மை அவர்களுக்கும்,திண்ணைக்கும்,வாசகர்களுக்கும் என் நன்றிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *