அருந்தும் கலை

அந்த எலுமிச்சம் பழங்களை வாங்கிவந்தேன்

மொத்தம் மூன்று தந்தார்கள்

தீராச் சண்டைக்கும் கசப்புக்கும்

முகம்திருப்பி தெருவில் போனதற்கும்

இன்னும் என்னென்னவோ பொருமல்களுக்கும் பிறகு

அவர்கள் கொடுத்தவை இவை

மேசையில் உள்ள அந்தப் பழங்களை இன்னும்

வீட்டில் யாருமே தொடவில்லை

அப்பழங்களுக்குள்ளிருக்கும் சாறு பற்றி

கூசும்படி ஒரு சந்தேகம்

அவர்கள் வீட்டுப் பழங்களுமா குற்றவாளி?

பார்த்துக் கொண்டேயிருக்கும்போது

பழங்களும் பார்த்தபடியே இருப்பதாக

எண்ணம் குறுக்கிட சட்டென

எதிரி வீட்டுக்காரன் முகத்தை மஞ்சளாய் பழத்தோலில்

மனம் வரைகிறது.

கொஞ்சம்சர்க்கரை கலந்து அருந்தும் கலை அறியாமல்

வருந்துகிறது மனது.

*****

செத்துத் துள்ளிய மீன்

–     பா.சத்தியமோகன்

“கேட்ட வார்த்தைக்கு அர்த்தமில்லை

சும்மாதான் கேட்டேன் விட்டுடுங்க”என்றார்

நட்பென உள்ளே பூத்த கடல்

உனை நேசித்த எனது அலை

யாவும் தலைகீழாக்கி கவிழ்த்துவிட்ட அந்தக் கேள்வியை

எந்தப் பேயிடம் தந்தழிக்க?

ரகசியம் சுமந்திடும் துரோகம் கூட

வெளிப்பட்ட வினாடியில் துன்பத்தோடு விலகி விடுமே!

நான் தோழமையேந்தி நெருங்கிய வேளையில்

நண்பா எப்படி வினவ உண்ணால் இயன்றது

எதற்கெனக் கேட்டாய் நீ என்ன ஜாதியென்று

உள்ளே துண்டுதுண்டாகி

ரத்தத் துளியேதும் காட்டாமல்

அன்றென் இதய மீன்

நட்பு துறந்து

செத்து துள்ளியதென எப்படிச் சொல்வேன் நான்.

—————————————————————–

Series Navigationநினைவுகளின் சுவட்டில் (103)மொழிவது சுகம் – நவம்பர் -2- 2012