அவர்கள்……

– மா.சித்திவினாயகம் 

இன்னமும்

மணற் கிடங்குகளிலும்,

சுடு சாம்பலுள்ளும்,

காலைக்குத்தும் கற்பார்மீதும்

என் வாழ்வு சந்தோசமாயிருக்கிறது.

 

வந்துவிழுந்த செல் துண்டுகளால்

என்னைவிட்டு என் உயிர் போகாத

மகிழ்ச்சி என்னுள் தாண்டவமாடுகிறது.

 

நான் நடந்த பாதை யெங்கும்

என் இரத்தத்தைச்

சந்தோசமாகப் பீச்சியடிக்கிறேன்.

 

வரும் சந்ததி, என்

நிறமூர்த்த அலகுகளை

இந்த இரத்தத் திவலைகளிலிருந்து

பின்னிக்கொள்ளட்டும்.

 

நந்தவனமுள்ள பூஞ்சோலையில்

சுதந்திர மலர் பூத்திருக்கும் என்று

பூப்பறிக்க முற்பட்டவரின்

சதைகள் பிய்த்துப் பிய்த்து

நந்திக்கடலெங்கும் வீசிக்கிடக்கிறது.

 

எடுத்து மாலை தொடுங்கள்

உலகக் கனவான்களே!

 

சாட்சியைத் தேடியும்…

காட்சியைத் தேடியும்….

ஓடுவதாகச் சொல்பவர்கள்

விருந்து சாப்பிடுகிறார்கள்.

தங்களின் விறைத்த குறிகளை

எம்முள் புதைக்கத் துடிக்கிற வீராப்பில்……

 

 

நான் இன்னமும்…

மணிக்கூட்டுமுள்ளைப் போல்

இதே பாழும் மணல் வெளியைச்

சுற்றி ஓடிக் கொண்டிருக்கிறேன்.

 

என்ன மாறுதலுக்கு  காத்திருக்கிறேன்- என்றோ

நான் இல்லாவிட்டால் இங்கு

என்ன மாறுதல் நடந்து விடப்போகிறதென்றோ

எதுவும் புரியவில்லை.

 

இந்த எலும்புக்கூடுகளால்

இனி இங்கு

எதை எழுதுதல் முடியுமெனக்

காலம்காலமாய் நானிருந்த மண்ணில்

மறுபடி என்னைக் குடியேற்றுகின்றார்கள்.

 

இதுவே யதார்த்தம் போல்

எங்கும் மௌனம்.

 

தோலை உரிக்கிறார்கள்,

எலும்புகளைச் சிதைக்கிறார்கள்.

மண்டை மணலாய்ச் சிதறிக்கிடக்கிறது.

கால்களை இழக்கிறேன். கைகள் துண்டாகின்றன.

குழந்தைகள் பெரு வெளியில்

கொன்று கொட்டப்பட்டிருக்கிறார்கள்.

உண்மைகளை மனதிற்குள் இறுக மூடிவிட்டு

எல்லாவற்றையும் துடைக்கின்றேன்.

 

துடைத்த கையோடு….

கட்டுக் கட்டாக அடுக்கிய கோப்புகளோடும்,

கறுப்புக் கண்ணாடிகளோடும்,

என்னை அவர்கள் விசாரிக்கின்றார்கள் .

நான் வாய்மூடி மௌனியாயிருக்கின்றேன்.

 

குண்டுகொட்டிச் சென்ற விமானங்களை -நீ

அடையாளம் காட்டுவாயா?

அக்கறையோடு கேட்கின்றார்கள் அவர்கள்.

நான் சிரிக்கிறேன்.

 

சொல் அவை பற்றி உனக்குத் தெரியுமா?

யார் உன்னவர்களைக் கொன்று பழிதீர்த்ததென்று????

எனக்குத் தெரியாது என்று தலையாட்டுகின்றேன்.

கர்த்தரை மறுத்த பேதுருவைப்போல.

 

 

செத்து விழுந்த பிணங்கள் எதனையும்,

அல்லது மூடிவைத்த பிணங்கள் எதனையும்,

உன்னால் பார்க்க முடிந்ததா உன் வாழ் நாளில்????..

என்கின்றார்கள் அவர்கள்…

இல்லையென்கின்றேன் நான்.

மண்டையோட்டின் மேல் உட்கார்ந்தபடியே….

 

பொட்டலங்களைஎறிந்தபடி…

இப்படித்தான்

பதில்கள்  இருக்க வேண்டும் என்கிறார்கள்  அவர்கள்.

பொறுக்கியபடியே சிரிக்கின்றேன் நான் .

 

அவர்கள் கையில் விசையிழுத்தபடி

குறிபார்த்திருக்கிறது

குண்டு நிரப்பப்பட்ட துப்பாக்கி….

 

அவர்களினால்த்தான் தேடற்கரிய- இன்பம்

தேடி வருமென்கிறான்

குடியேற்றவாதி.

 

இன்னமும் நம்பென்று

முழுப்பூசணிக்காயைத் தூக்கிச்

சோற்றில்ப் புதைக்கிறார்கள்

புரட்சியின் தலைவர்கள்.

 

எல்லாவற்றையும் நம்பிவிடுவதற்கென்றே

உயிர்வாழ்கின்றேன் நான்…

 

ஊரைப்பற்றிய,உறவுகளைப்பற்றிய,

மொழியைப் பற்றிய

கவலையை விடவும்,

பிய்த்தெறிந்த மக்களிடையே

ஆட்சி பிடிப்பதனைப் பற்றிய

மோகத்தோடு முற்றுகையிடுகிறார்கள் அவர்கள்.

 

பரிதவித்த வயிறுகளில்

கட்சி கட்டுகின்றார்கள்.

கோஸ்டியாய் மோதுகின்றார்கள்.

மண்டையோடுகளுக்குத்

தேசியம் பேசுகிறார்கள்.

 

வாழ்வு

தோற்றுப் போய்க் கிடக்கிறது

ஒரு வகையுமில்லாமல்….

 

வல்லவன் மட்டுமே

வாழ்வான் என்றெழுதிப்போகிறது

உலக நீதி.

 

மிருகங்களைவிடவும் கேவலமாகி மனிதம்

இரத்தமாய்க்கரைகிறது.

அவர்கள் அவற்றிற்கிடையே  தங்கள்

ஜனநாயகம்  தேடுகின்றார்கள்.

இன்னும் இன்னும் இரத்தத்தை ஊற்றும்

மனிதச் சதைகளில் தங்கள் தங்கள்

வெற்றிக்கொடியை நனைத்துப்

பளபளப்பாக்கத் துடிக்கிறார்கள் அவர்கள்.

…………………………………

elamraji@yahoo.ca

Series Navigationசெல்பேசிகளின் பன்முகத் தாக்கங்கள்அடுத்தவரை நோக்கி இலக்கியத்தினூடாகத் திறக்கும் சாளரமும், சுதாராஜின் கதை சொல்லும் கலையும்