“அவர் அப்படித்தான்…”

This entry is part 20 of 35 in the series 11 மார்ச் 2012

இன்றுவரை அந்த வாசப்படி மிதிக்கவில்லை கிருஷ்ணமூர்த்தி. மிதிக்கக் கூடாது என்பது அல்ல. என்னவோ ஒரு வெறுப்பு. அது இனம் புரியாதது என்று சொல்வதற்கில்லை. புரிந்ததுதான். மனதளவில் ரொம்ப காலத்திற்கு முன்னமே விலகிப் போனார் என்பது உண்மை. உடலளவிலும் சேர்த்து முற்றிலுமாக விலகியது அந்த 31.12.க்குப் பிறகுதான். சரியாக வருஷம் முடிந்தபோது அவரது சர்வீசும் முடிந்து போனது.

புத்தாண்டு பிறந்த அன்று இவர் வேலையில்லாதவராக நின்றார். அப்படித்தானே சொல்லியாக வேண்டும். அதுதானே சரியும் கூட. வேலைதானே ஆணுக்கு அழகு. ரெண்டு வருஷம் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதோ வருது, அதோ வருது என்றார்கள். ஒன்றையும் காணோம். சர்தான் கழுதைய விடு…என்று வெளியேறியாயிற்று. இல்லாவிட்டால் யார் உட்கார்த்தி வைக்கப் போகிறார்கள்? தன் இருக்கைக்கு எதிர்ப்பக்கமாக வேணுமானால் உட்காரலாம். அதுவும் ரெண்டொரு நாளைக்கு. பிறகு அதுவும் போரடித்து விடும். அவருக்கும் இருப்பவர்களுக்கும்.

இந்த மனுஷன் எதுக்கு தெனம் இங்க வந்து உட்கார்றான்…போவேண்டிதானே…அதான் ரிடையர்ட் ஆயாச்சுல்ல…இந்தக் கெழடுகளே இப்டித்தான்….

ரெண்டே நாளில் தன்னை முக்கால் கெழடு, முழுக் கெழடு ஆக்கி விடுவார்கள். இந்தப் பக்கம் தலை வச்சுக் கூடப் படுக்கக் கூடாது. அதான் கௌரவம்.

ஏதோ நாலைந்து பேர் போன் பண்ணினார்கள். துக்கம் விசாரித்தார்கள். என்னங்க, அதுக்குள்ள அம்பத்தெட்டாயிடுச்சா….? என்றார்கள். சார், நீங்கள்லாம் இல்லன்னா நாங்கள்லாம் என்ன சார் வேலை பார்க்கப் போறோம்? என்று துக்கப்பட்டார்கள். நல்ல வேளை நாங்கள்லாம் இல்லன்னா நீங்கள்லாம் என்று சொல்லவில்லை. என்ன தலைவா, ஓய்வு பெற்றுட்டீங்களாமுல்ல? உங்களுக்குமா? நம்ப முடில தலைவரே…! என்று வெடிச் சிரிப்புச் சிரித்தார்கள். பொருந்தாமல் எதையாவது செய்வதுதானே வழக்கம். எல்லார் உளறலையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டார். ஆத்மார்த்தமாய் கேட்ட சிலரும் உண்டு.அது தவிர்க்க முடியாததுதானே, எல்லார்க்கும் பொதுவானதுதானே என்பதான தொனியில் அடங்கியது. எப்பொழுதுமே ஓய்வு பெற்றவர்களைப் பார்த்து சர்வீசில் உள்ளவர்கள், என்ன அதுக்குள்ளேன் செத்துட்டீங்க? என்பதுபோலத்தான் கேட்பார்கள். செத்த பிணத்தைப் பார்த்து எங்களுக்கெல்லாம் சாவு கிடையாதாக்கும் என்கிற பாவனையில் எழவு வீட்டில் துக்கப்படும் மனிதர்களைப் போல..

ஒரு காலத்தில் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களுக்கு சமதையாய் அந்நாளைய நடிகர்களை நினைத்துக்கொண்டிருக்கவில்லையா? ஸ்டார்ஸ் என்கிற வார்த்தை உண்மையிலேயே அவர்களுக்குத்தான் நூறு சதவிதம் பொருந்தும். அவர்களெல்லாம் அபூர்வப் பிறவிகள். எட்டிப் பிடிக்க முடியாத நட்சத்திரங்கள். அவர்களுக்கு முதுமை என்பதே கிடையாது, இறைவனால் ஸ்பெஷலாக இதற்கென்றே பிடித்துப் பிடித்து அழகு பார்த்துப் படைத்து அனுப்பப்பட்டவர்கள், என்று கனவுகளில் மிதந்த காலம். இப்படி ஒரு தலைமுறையே கற்பனைகளில் மிதந்ததும், காலத்தை வீணாக்கியதும், தங்கள் சொந்த வாழ்க்கைபற்றிய பிரக்ஞையே இல்லாமல் திரிந்ததும், நாசமாய்ப் போனதும், பிற்பாடு அ(இ)வர்களுக்கெல்லாம் வயதாகி, கிழமாகி, மரித்துப் போனபோதே மேற்படியார்கள் தங்கள் கா(நா)லாந்திர இழப்பை உணர்ந்ததும், காலம் எல்லாமும் கடந்து போய் செத்த சவமாய் நின்றதும், இன்றும் நினைத்துப் பார்த்து புத்தியில் நிறுத்த வேண்டிய கதை. உண்மையிலேயே நடப்புத் தலைமுறைகளுக்குச் சொல்ல வேண்டிய விழுமியங்கள் இவை. அது போல எல்லாருக்கும் ஓய்வு உண்டு, அனைவருக்கும் சாவு உண்டு. இப்டியெல்லாம் அசடு மாதிரிச் சொல்லித்தானே ஆக வேண்டிர்க்கு…?

மனதில் தோன்றிய வெறுப்புணர்வில் என்னென்னவோ தோன்றியது கிருஷ்ணமூர்த்திக்கு. எதற்கு இதையெல்லாம் அனாவசியமாய் நினைத்துக் கொண்டு? நம்மளவில் வேலை பார்த்த காலத்தில் சரியாய் இருந்தோமா, வெளியே வந்தோமா…அவ்வளவுதானே…?

நம்ம இல்லன்னா என்ன, ஆபீசே ஸ்தம்பிச்சிடவா போகுது…என்கின்ற தெளிவு எப்பவுமே உண்டு கிருஷ்ணமூர்த்திக்கு. இந்தக் குப்பன் இல்லன்னா இன்னொரு சுப்பன்…! அவ்வளவுதான். ஒரு வழியாய் விட்டது சனி…காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் போனது என்று நினைத்து ஆறுதல் பட்டுக் கொண்டார். மாதா மாதம் சம்பளம் தந்த இடத்தை அப்படி நினைக்கலாமா என்று இன்னொரு மனசு கேட்டது. கோயிலாக நினைத்துக் கும்பிட வேண்டாமா? அதைத்தான் இருந்தவரை செய்து தீர்த்தாயிற்றே? கடமைதான் தெய்வம், கூலி தரும், வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்ட உறுதுணையாய் நிற்கும் வேலையை மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செய்து முடிக்க வேண்டும் என்று பாடாய்ப் பட்டு பம்பரமாய்ச் சுழன்றாயிற்றே? ஓடாய்த் தேய்ந்து ஒன்றுமில்லாமல் ஆனது போதாதா?

என்னளவுக்கு எவன் இருந்தான்? இருக்கான்? உழவு மாடு மாதிரி இதுகாறும் வேலை பார்த்தாச்சு…சம்பளம் தவிர வேறே அது இதுன்னு இம்மியும் எதிர்பார்க்காம உண்மையா உழைச்சாச்சு…மொத்த சர்வீசுல ஒரு தடவை கூட மனசு சபலப்படலை…எவனும் கையை நேருக்கு நேரா நீட்டி, பல்லு மேலே நாக்குப் போட்டு….ச்ச்சீ…தப்பா வருது….நாக்கு மேல பல்லுப் போட்டு ஒரு வார்த்தை பேச முடியாது…சொன்னதுமில்ல…சொல்ற தெம்பும் இருந்ததில்ல எவனுக்கும்… ஏதாச்சும் தப்பு செய்திருந்தாத்தானே? மடில கனமிருந்தாத்தானே வழில பயமிருக்கணும்? பழைய பழமொழிதான்…இருந்தாலும் அவசரத்துக்கு இதுதான் வருது…

என்ன வேலை பார்த்து என்ன செய்ய? எப்படி இருந்து என்ன ஆக? எல்லாம் பொய். வீண். பெருமைப் பட்டுக்கொள்ள ஒன்றுமேயில்லை. விதி, விதி என்று விதியோடு மாரடித்ததுதான் பாக்கி. எது நடந்தது விதிப்படி? எல்லாமும் அதனதன் தலைவிதிப்படி ஆனது. அவ்வளவுதான். பத்துக்கு நாலு ஆச்சா? அட, ரெண்டு? அட வேணாம், ஒண்ணு? போளும்யா பெருமை…! நெனச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு, அதனால முழிக்குதே அம்மாக் கண்ணு…! பழைய பாட்டு ஒன்று ஞாபகம் வந்தது. இங்கே அம்மாக்கண்ணு இல்லை…அய்யாக் கண்ணு…அது ஒன்றுதான் மாற்றம்.

சார்…கரெக்டா போட்டிருக்கீங்க ஸார் லிஸ்ட்….இது பிரகாரம் போஸ்டிங் போட்டுட்டீங்க….சூப்பர் ஸார்…எங்க எல்லாருக்கும் சம்மதம் ஸார்….நீங்க இருக்கீங்கங்கிற நம்பிக்கைலதான் வந்தோம்…சாரு செய்து கொடுப்பாருன்னு…இத மட்டும் எங்களுக்குப் பண்ணிக் கொடுத்துட்டீங்க நாங்க உங்கள மறக்கவே மாட்டோம் சார்….

நா என்னத்தைய்யா பண்றது…உள்ளத்தச் சொல்றேன்…எது சரியோ அதச் சொல்றேன்….உள்ளே அனுப்பறேன்….அப்டியே கையெழுத்தாகி வந்தா உங்க யோகம்…

நீங்க அப்டிச் சொல்லப் படாது சார்…சீஃப்டச் சொல்லி எங்களுக்கு வாங்கிக் கொடுக்கணும்….

சரி, சொல்றேன்….இதுனால என்ன குறைஞ்சா போறேன்…தாராளமாச் சொல்றேன்….

தான் போட்ட மூதுரிமைப் பட்டியலை தன் முன்னே விவாதிக்கும்போது அப்படியே ஏற்றுக் கொண்ட அதிகாரி, தான் வெளியே வந்த கொஞ்ச நேரத்தில் எப்படித் தலை கீழாக மாற்றி விட்டார்? தன்னை ஒரு வார்த்தை கேட்டாரா? பின், தான் மணிக்கணக்காய் மெனக்கெட்டது எதற்கு? பார்த்துக் கொண்டேகை சூம்பவா? எது வேலை செய்தது அங்கே? லிஸ்ட் போடுங்கிறது, நேர்ல பேசும்போது ஓ.கே. குட்… ங்கிறது… பெறவு இஷ்டம்போல மாத்தறது…என்ன கண்றாவி இது? அப்போ நா எதுக்கு? இது இத இப்டிச் செய்யணும்னு சொல்றதுக்குத்தானே என்னை வச்சிருக்கா? உங்க இஷ்டப்படி செய்துக்கிறதுன்னா கையொடிய நா ஏன் எழுதணும்? மண்டையப் போட்டுப் பிச்சுக்கணும்? நா என்ன கிறுக்கனா?

கிறுக்கன்தான். பின்ன? உங்கைலயா அதிகாரம் இருக்கு? பவர் அங்கல்லய்யா இருக்கு? நீ சொல்லத்தான் முடியும். செய்றது அவுங்கதான்…நீ பார்த்திட்டு பெப் பெப் பேன்னு நிக்க வேண்டிதான்…போவியா? பொத்திட்டுப் போய்யா…சும்மா வாய் பேசாத…..

அப்படியெல்லாம் நின்றதில்லை. அதற்கான அவசியமும் இல்லை தனக்கு என்று நினைத்தவர் இவர். சரியைச் சொல்வது என் வேலை. அதற்குத்தான் எனக்குச் சம்பளம். நான் சொல்லியாயிற்று. என்னை நோக்கிக் கேள்வி வந்தால் அதற்கு எப்படிப் பதிலளிப்பது என்பது எனக்குத் தெரியும்.

இன்றுவரை அதே நினைப்புத்தான் கிருஷ்ணமூர்த்திக்கு. அவர் தலை எப்பொழுதும் நிமிர்ந்தேதான் இருக்கும். பார்வை தெளிவாய் நீண்டிருக்கும். அதை நேருக்கு நேர் அணுக முடியாதவர்கள்தான் அதிகம். அவரை டிஸ்கஷனுக்கு அழைக்கும் அலுவலர்கள் கூட அவர் கண்களை நேரடியாய் நோக்க மாட்டார்கள். நோக்க முடியாது அவர்களால். ஏனென்றால் அவர்கள் தப்பு செய்பவர்கள். அதை இவர் அறிவார். ஆனாலும் வேறு வழியில்லை என்று இருப்பவர்கள். கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா போட்டுத்தான் ஆகணும் என்பவர்கள்.

கிருஷ்ணமூர்த்தி தினமும் சந்தித்த பிரச்னை இது. விதி முறைப்படி என்ன உண்டோ அதை அச்சுப் பொறித்தாற்போல் எழுதி அமைதியாய் உள்ளே தள்ளி விட்டு விடுவார். இது எப்படி? அது எப்படி? என்று யாரும் ஒரு வார்த்தை கேட்க முடியாது. தேவையான விதிமுறைப் புத்தகங்களும், அந்தந்தப் பக்கங்களில் தக்க குறிகளிடப்பட்டு கொடி மாட்டப்பட்டு கோப்புகளுக்குக் கீழே தலை நிமிர்ந்து நீட்டிக் கொண்டிருக்கும். வாய் பேசாது அதைத் திறந்து பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். அவை சொல்லும் தேவையான விடைகளை. அவை தரும் தக்க விளக்கங்களை.

அவற்றைக் கூடப் பொறுமையாய்ப் படித்து அறிய முடியாத ஜென்மங்கள் அநேகரைப் பார்த்துத்தான் இருக்கிறார் இவர். “இவங்கள்லாம் எதுக்கு ஆபீசர்னு வந்து நம்ம கழுத்த அறுக்கிறாங்க…“ என்று தனக்குத்தானே நினைத்துக் கொள்வார். அல்லது முனகிக் கொள்வார்.

சார், உங்கள சீஃப் கூப்பிடுறார்… – பியூன் வந்து தயங்கித் தயங்கி இப்படி நிற்கும்போதே சங்கடத்தோடுதான் எழுவார்.

அதான் எல்லாந்தானய்யா வச்சு அனுப்பியிருக்கேன்…இன்னும் என்னத்துக்குக் கூப்பிடுறாரு…? என்பதும் உண்டு சில சமயம். பழத்த உரிச்சு நீட்டியாச்சு…இன்னும் வாயில வேறே ஊட்டி விடணுமா? போகச் சொல்லுய்யா அந்தாளை…

எதையும் படிக்கிறதுக்கு எவனுக்கும் பொறுமை கிடையாது. பிட்டுப் பிட்டு வாய்ல திணிக்கணும்…மென்னு…மென்னு….மென்னு முழுங்கு….என்று சொல்லித் தரணும். அது நாலு வரியோ, நாலு பக்கமோ… படிக்கும், அறிந்து கொள்ளும் ஆர்வம் கிடையாது. ஏதோ பரீட்சை எழுதியாச்சு, வந்தாச்சு வேலைக்கு…கிராஜூவேஷன் இருக்கு…பணம் இருக்கு….கையில காசு வாயிலதோச…ஆப்பீசர்…..நாஆப்பீசராக்கும்…ஞாபகமிருக்கட்டும்…..உங்களுக்கெல்லாம் பாஸ்…..முதல்ல இந்த எண்ணம் வந்தா எங்கிருந்து உருப்படும்…சட்டிய முதல்ல நிரப்பணும்…அப்பத்தான் அகப்பைல வரும்ங்கிற எண்ணத்துல இருக்கிற ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்ஸை முதல்ல தரவ் பண்ணுவோம்ங்கிற நினைப்பு எவனுக்காச்சும் இருக்கா? எவனும் நம்மளக் கேள்வி கேட்கக் கூடாது…எந்தக் கேள்வியும் வராத எடத்துல நாம நிக்கணும்ங்கிற நெனப்பு வேண்டாமா?

மொத்த சர்வீசில் அப்படி ஒரு சிலரைத்தான், தான் பார்த்திருப்பதாக அடிக்கடி தனக்குத்தானே நினைத்துக் கொள்வார் கிருஷ். அவர்களிடமெல்லாம் வேலை பார்க்க சந்தோஷமாய் இருக்கும். எல்லாம் தெரியும் என்கிற கர்வம் துளிக்கூட அவர்களிடம் தென்படாது. எதிராளியை, அவனது திறமையை மதிக்கத் தெரியும். ஊக்கப்படுத்தத் தெரியும். பலே என்று வாய் திறந்து பாராட்டத் தெரியும். ஒரு நல்ல அலுவலரிடத்தில் பணியாற்றுகிறோம் என்கிற பெருமை நமக்கு இருக்கும். அலுவலகத்தின் மதிப்பும் கூடும்.

ஆனால் ஒன்று அந்தக் காலத்திலேயே இந்தத் திறமையெல்லாம் இருந்தும் ஓடிச் சென்று காரின் கதவைத் திறந்து விடுபவர்களும் இருக்கத்தானே செய்தார்கள்?

உறலோ மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி, குட் மார்னிங்…. என்று வாயிலில் நின்று, உள்ளே உறாலில் உட்கார்ந்து சிவனே என்று தன் வேலையில் ஈடுபட்டிருக்கும் இவரை வம்படியாய் அழைத்து வணக்கம் சொன்ன அலுவலர்களையும் பார்த்திருக்கிறார் இவர்.

எதிர்ப்பட்டால் வணக்கம். இல்லையென்றால் அவருண்டு அவர் வேலையுண்டு. அவ்வளவுதான். வலிய அவர் அறைக்குச் சென்று, அவர் தலை நிமிரும் வரை காத்திருந்து, சலாம் போட்டுவிட்டு வரும் வேலையெல்லாம் என்றுமே இருந்ததில்லை இவரிடம்?

நம்ம வேலையைக் கவனிக்கத்தானே இங்க அனுப்பியிருக்காங்க…தெனம் இப்டி சலாம் அடிக்கிறதுக்கா? எதுக்கு? நாளுக்கு எத்தனை சலாம் அடிச்சேன்ங்கிறதுக்கு முக்கியமா? அல்லது எத்தனை ஃபைலை டிஸ்போஸ் பண்ணினேன்ங்கிறது முக்கியமா? போய்யா…அதுக்கெல்லாம் வேற ஆளப் பாரு….இவ்வளவுதான் கிருஷ்ணமூர்த்தி. இவை அலுவலர்கள் காதுக்கெல்லாம் போனதுமுண்டு. ஆனால் எவரும் எதுவும் கேட்டதில்லை. அவர்களுக்கே இவர் பேரில் கொஞ்சம் பயம் இருக்கும் போலத்தான். தங்கள் கேபினுக்குப் போக இவர் அறையைத் தாண்டும்போது விருட்டென்று கடப்பார்கள்.

எதுக்கு இந்த மனுஷன் மூஞ்சில முழிச்சிட்டு? என்று இருக்கலாம். வரும்போதே ஏதோ தப்பு செய்துவிட்டு வருபவர்கள் போலத்தான் இருக்கும். இவர் கண்களை அவர் நேருக்கு நேர் சந்தித்ததே இல்லையே?

இதற்குப் பேர் என்ன? ஞானத் திமிரா? அதெல்லாம் இல்லை. அப்படி ஒன்றும் அவர் தன்னை என்றுமே நினைத்துக் கொண்டதில்லை.எல்லாரும் முன்னேறணும், நல்லாயிருக்கணும் என்று எல்லோரையும்போல நினைப்பவர்தான். அப்படியெல்லாம் பிசகாய் இருந்தால், வெறுமே, கட்டணம் எதுவுமில்லாமல் எல்லாருக்கும் அவர் வகுப்பு எடுப்பாரா? எத்தனை பேரைத் தேற்றி விட்டிருக்கிறார்? அவரால் பயனடைந்தோர் எவ்வளவு நூறு பேர்? எனக்கென்ன தலைவிதியா? படிச்சாப் படி…இல்லன்னா போ…என்று இருந்திருக்கத் தெரியாதா?

வலிய ஒரு பள்ளிக்குப் போய் காலை எட்டரை வரை தனக்கு ஒரு இடம் வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டு, பணியாளர்களுக்கான வகுப்பை அங்கே நடத்தினாரே!

மனுஷன் க்ளாஸ் எடுத்தார்னா அப்டியிருக்கும்யா….அவர்ட்டப் போயிட்டு நீ ஆபீஸ் சீட்ல ஒக்கார்ந்தேன்னு வச்சிக்க…தானா எல்லா வேலையையும் பார்த்திடுவ…யார் உதவியும் உனக்குத் தேவைப்படாது….ப்ரமோஷனுக்கான டெஸ்ட்டையெல்லாம் தூசு மாதிரித் தட்டி விட்டிடலாம்….அவரெல்லாம் நம்ம டிபார்ட்மென்டுக்குப் பொக்கிஷம் மாதிரிய்யா….

பொக்கிஷந்தான்…யாரு இல்லன்னா..? ஓசில சொல்லித்தந்தா பின்ன பொக்கிஷமில்லாம வேறென்ன? காசுக்கு எல்லாத்தையும் விக்கிறவன்தானே இங்க கெட்டிக்காரன்…பொய்யான உலகம்…

எல்லாருமே நன்னா பண்றேள். நம்பிக்கையாப் பண்ணுங்கோ…எல்லாரும் கெட்டிக்காராள்தான்….சொல்லிச் சொல்லி எத்தனையோ பேரை மேலே கொண்டு சென்றிருக்கிறார்.

அவருக்கே அதிகாரியாய் இருந்து கொண்டு, அவரிடமே படித்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். டேரெக்ட் ரெக்ரூட்மென்ட் ஆசாமிகள். மேலிடத்தின் ஆமாசாமிகள். என்னதான் நேரடியாய் நுழைந்து தலையாய் உட்கார்ந்திருந்தாலும், ஒரு இன்க்ரிமென்டுக்குப் பிறகு அடுத்தடுத்த ஊதிய உயர்வுகளுக்கு இந்த இந்த டெஸ்ட்டுகளெல்லாம் பாஸ் பண்ணினாத்தான் ஆச்சு என்று ஆப்பு வச்சிருக்கானே….அப்போ அதுகளையும் காசு குடுத்தா விலைக்கு வாங்க முடியும்? மண்டைல மூளைன்னு ஒண்ணு இருக்கே அதைக் கொஞ்சமாச்சும் தேய்ச்சு விட்டுத்தானே ஆகணும்…

வகுப்பில் உட்கார்ந்திருக்கும்போதே நான் உனக்கெல்லாம் அதிகாரியாய் இருப்பதற்குத் தகுதியற்றவன்தான் என்று நிரூபித்தவர்கள்தான் அநேகம். என்ன செய்ய? மண்டைக்காய்ச்சல்தான் கிருஷ்ணமூர்த்திக்கு. எல்லாரோடும் போராடித்தான் இருக்கிறார். அப்படி அவர் தேற்றிவிட்டவர்களிடமெல்லாம் கணக்குப் பண்ணி ஒரு அமௌன்ட்டை ஃபீசாகத் தேற்றியிருந்தால் கூட இன்னும் சற்று முன்னே, அதாவது சர்வீசில் இருக்கும் காலத்திலேயே தன் ஒரே பெண்ணுக்கு அவர் கல்யாணம் செய்திருக்க முடியும். அதற்கான சமத்து அவரிடமில்லாமல் போனது ஒன்றும் அதிசயமில்லை. துட்டு மீது என்றுமே அக்கறை இருந்ததில்லை அவருக்கு. வாழ்க்கையின் ஒரு காரணி அது. அவ்வளவே…! அது என் பின்னால்தான் வர வேண்டும். நான் அதைத் துரத்திக் கொண்டு செல்ல முடியாது. அது என்னை ஆள முடியாது.

என்னத்தக் கூப்பிடச் சொல்ற? ரிடையர்ட் ஆகி வருஷம் ரெண்டு முடியப் போவுது…இப்பப் போய் அவனவன்ட்ட பத்திரிகையை நீட்டினா மொய்க்காகத்தான் இந்த ஆள் வந்திருக்கான்னு நினைப்பான்….நீங்கள்லாம் வந்து ஆசீர்வாதம் பண்ணனும்னு பொத்தாம் பொதுவாச் சொல்லச் சொல்றியா? இந்த ஊழல் ஆசாமிகளெல்லாம் வந்தா என்ன வராட்டா என்ன? இவங்க வந்து ஆசீர்வாதம் பண்றதுக்குப் பண்ணாமயே இருக்கலாம்…

அப்டிச் சொல்லலாமா? மனுஷா வேறே…ஆபீஸ் வேறே…அதையும் இதையும் மிங்கிள் பண்ணாதீங்க….

என்னடீ, மிங்கிள் தங்கிள்ங்கிற? மனுஷன் மனுஷனா இருந்தாத்தான் எல்லாம் நல்லாயிருந்திருக்குமே…! அவன் மிருகம் மாதிரி ஆகுறதுதானே கோளாறு…! தன்னோட சொந்த வக்கிரங்களையெல்லாம் வேலைல புகுத்தினதுனாலதானே நிர்வாகம் கெட்டுப் போச்சு….ஒழுக்கம் அதுனாலதானே சீர் கெட்டுது…அப்டித்தானே ஊழல் புகுந்தது…நிர்வாகத்துக்குன்னு என்னதான் விதிமுறைகளை வகுத்து வச்சிருந்தாலும், மனுஷாளோட சொந்தக் குணம் எல்லாத்தையும் கெடுத்துடுத்துங்கிறதுதானே உண்மை…அப்டிப்பட்டவாகிட்ட இப்பப் போயி இன்விடேஷனை நீட்டினா என்ன நினைப்பான்? வந்திட்டாருய்யா அங்கேருந்து நீஈஈஈஈஈட்டிக்கிட்டு….ன்னு மனசுக்குள்ள கருவுவான். இல்லன்னா கட்டாயம் வந்திருவோம் சார்னு பொய்யாச் சிரிப்பான்…எதுக்கு அவுங்களுக்கு தர்ம சங்கடத்த உண்டு பண்ணிட்டு…எத்தனையோ பேர் மாறிப் போயிருப்பா…இருக்கிற ஒரு சில பழையவா பேரும் எனக்கு மறந்து போயாச்சு…ஸ்டில் சம் குட் பர்சன்ஸ் ஆர் தேர்… சில நல்லவா இன்னைக்கும் இருக்கத்தான் செய்றா…இல்லைன்னு சொல்லலை…அவாளெல்லாம் மனசுலயும் இருக்கா…இவாளோட சேர்த்து அவாளையும் விட்டுட வேண்டிதான்….அநியாயமும் அக்ரமமும் பொறுக்க மாட்டாம இந்த லோகம் அழிஞ்சா எப்டி எல்லாக் கெட்டவாளோட சேர்ந்து நிறைய நல்லவாளும் அழிஞ்சு போவாளோ அத மாதிரி நினைச்சிக்க வேண்டிதான் இதையும்…

போறுமே உங்க வியாக்யானம்…அப்ப்ப்ப்பா…கேட்டுக் கேட்டு காது புளிச்சுப் போச்சு….பத்திரிகையை கொடுத்திட்டு வாங்கோன்னா அதுக்கு இதெல்லாமா பேச்சு?

பார்த்தியா, உனக்கே இம்புட்டு அலுப்பிருக்கு…ரெண்டு வருஷமா அந்தத் திசைப்பக்கமே திரும்பாத நா இப்பப் போய் அங்க நின்னா என்ன நினைப்பாங்க என்னப்பத்தி?

சரி விடுங்கோ, உங்க இஷ்டம்போல செய்ங்கோ…

அப்டிச் சொல்லு…அதுதான் என்னோட சகதர்மிணிக்குப் பொருத்தம்….

அப்படியும் ஒரு சிலரைப் பார்க்கத்தான் செய்தார் கிருஷ்ணமூர்த்தி. கடை, கண்ணி, மார்க்கெட், சபா என்று கண்ணில் பட்டு விடுகிறார்களே….

சாஆஆஆஆஆஆஆர்…….எங்களெல்லாம் மறந்திட்டீங்கல்ல….நல்லாருக்கீங்களா சார்……? ஆளே மாறிட்டீங்களே சார்…

நல்ல்ல்ல்லா….இருக்கேன்…நீங்களெல்லாம் எப்டியிருக்கேள்? யாரெல்லாம் ப்ரமோஷன்ல போனா? யாரெல்லாம் டிரான்ஸ்பர் ஆனா? இப்ப யாரெல்லாம் இங்க இருக்கேள்? சொல்லுங்கோ… – அவரையறியாமல் ஆர்வமாய்த்தான் கேட்டார். தினமும் அவர்களோடெல்லாம் கலகலப்பாய்ப் பேசிச் சென்று வடையும் டீயும் சாப்பிடும் அந்த நேசமான நேரங்களை மறக்க முடியுமா? பணியை அவ்வளவு நேசித்தவராயிற்றே…கூடஇருந்தவர்களையெல்லாம் கொண்டாடியவராயிற்றே…

நன்னா வருவேள் எல்லாரும். கொஞ்சம் அக்கறைதான் வேணும்…கருத்தா, கவனமா வேலை பார்த்தா எல்லாமும் மனசுல பச்சுன்னு உட்கார்ந்துக்கும்….அப்புறம் நீங்க மத்தவாளக் கேள்வி கேட்கலாம்….நமக்குக் கூலி தர்ற வேலையாச்சே….அம்பத்தெட்டு வரைக்கும் இதுலதானே கழிச்சாகணும்…அப்போ? சும்மா ஓட்ட முடியுமா? அதெல்லாம் செல்லுபடியாகாது. என்னைக்கும் வேலைதான் நிக்கும்….உங்களப்பத்தி மத்தவா சொல்லணும்னா உங்க திறமைதான் பேசணும்….

சாமர்த்தியமா இருக்கிறதுங்கிறது வேறே…அது இப்போ இங்கே தப்புத் தப்பா அர்த்தப்பட்டு நிக்கிறது…சம்பளம் தவிர மேல் வரும்படின்னு வருதே பல பேருக்கு….அதை சாமர்த்தியம்னு சொல்றா…சொல்ல ஆரம்பிச்சுப் பல காலம் ஆயாச்சு…அன்பளிப்புங்கிறமாதிரி….உங்க குடும்பம் நன்னாயிருக்க வேண்டாமா? குழந்தைகுட்டிகள்நன்னாயிருக்கணுமோல்லியோ?அதை நீங்கபார்க்கணுமோல்லியோ…கண்ணாரக்கண்டுசந்தோஷப்படணுமோல்லியோ…அப்போ அந்தத் தப்பை நாம பண்ணக் கூடாது. அவ்வளவுதான்…இதெல்லாம் உங்களுக்குத் தெரியாததுல்ல…என்னமோ பெரிசா நான்போய் உளறிண்டிருக்கேன்….என்னைவிட உங்களுக்குத்தான் இந்த லோகத்துல நடக்குற நல்லது கெட்டது எல்லாம் நன்னாத் தெரியும்…ஏதோ தோணித்து சொன்னேன். கொஞ்சம் ஆசுவாசப் பட்டுண்ட மாதிரின்னு வச்சிக்குங்கோளேன்…

இம்புட்டுப் பேசுறாருல்ல…இவர் பையன் ஏன் அப்டிப் போனானாம்? கேளுங்களேன்யா யாராச்சும்? யாரோ கேட்பது போலத்தான் இருக்கிறது.

அது கர்ம வினை….உதவாக்கரையாப் போகணும்னு இருக்கு….அனுபவிக்க வேண்டியதை அனுபவிச்சாத்தான் முடியும். சில ஜென்மாந்திரக் கடனை அந்த ஜென்மத்துலயே அடைச்சாகணும்னு இருக்கும்…அனுபவிக்கிறேன். இதையும் மத்தவா சொல்றதுக்கு என்ன இருக்கு…எனக்கு நானே உணர்ந்துதானே இருக்கேன்…நமக்குப் பையன் விளங்காமப் போயிட்டானேன்னு நானும் தப்பாவே நடக்க முடியுமா? அது இன்னுமில்ல மனசையும் உடம்பையும் கெடுத்துண்டதாகும்….இந்த சரீரமும், மனசும் அதுக்காகவா இருக்கு? பஞ்ச பூதங்களும் ஆட்டிப் படைக்கிற இந்த உடம்புலேர்ந்து இந்த மனசைப் பிரிக்கிறது எவ்வளவு கஷ்டமாயிருக்கு? சாதாரண மனுஷனுக்கு அதென்ன அவ்வளவு சாத்தியமா? நான் யாரு, நான் யாருன்னு கேள்வி கேட்டுண்டேயிருன்னு மகான்களெல்லாம் சொல்றா? யாரு விடை கண்டு பிடிச்சிருக்கா? ஆதிப் பெரியவா தவிர்த்து? முயற்சி பண்ண வேண்டிதான்….இந்த ஸ்தூல சரீரத்துலர்ந்து ஆன்மாவப் பிரிச்சு உணர முயற்சிச்சுண்டேயிருக்க வேண்டிதான்….உடம்பு வேறே, ஆன்மா வேறேன்னு உணர்ந்ததுனாலதானே “என்ன, ஆயிடுத்தா?“ ன்னு கேட்டார் ரமணர். முதுகுல வளர்ந்திருந்த கட்டிய ஆபரேட் பண்ணி எடுத்தபோது அது அவரை ஒண்ணுமே பண்ணலியே? அவாளெல்லாம் மகான்கள். நாம சாதாரண மனுஷா…அவ்வளவுதான்….

இன்று என்ன, எண்ண அலைகள் போட்டு இந்தப் பாடு படுத்துகிறது? நினைத்துக்கொண்டே அந்த வடையைப் பிய்த்து வாய்க்குள் தள்ளினார் கிருஷ்ணமூர்த்தி. பேருந்தை விட்டிறங்கித் தன்னை அறியாமல் அங்கு வந்து விட்டோமோ? அந்த முக்குக் கடையில் வடை சாப்பிட்டு எவ்வளவு நாளாயிற்று? அந்தப் பகுதிக்கே வருவதில்லையே? கடைக்காரனுக்கே தன் முகம் மறந்து போயாச்சு….அதோ அந்தப் பாலத்தை ஒட்டின ஆபீசுல இருந்தீகளே…அந்த சார்தானா? என்று கேட்பான் என்று எதிர்பார்த்தால்… அதற்குள்ளேயுமா அடையாளம் தெரியாமல் போய் விட்டது? அவன் கேட்காட்டா என்ன? நா கேட்டுட்டுப் போறேன்…நன்னாயிருக்கேளா…? வேலை மும்முரத்தில் தலையாட்டி வைத்தான் அவன்.

தன்னை விட்டு விடுவோம்…சாதாரண மனுஷப் பிறவி. அடையாளப் படுத்தப் பட வேண்டிய பல புனிதர்கள் இந்த உலகத்தில் இப்படித்தானே அடையாளமில்லாமல் போயிருக்கிறார்கள்? எல்லாம் காலத்தின் கோலம்….

இடது கையில் அந்த மஞ்சள் பையில் அடுக்கியிருந்த கல்யாணப் பத்திரிகைகளோடு அப்படியே நின்று கொண்டிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

நீங்களே சொல்லுங்களேன்…அதோ அந்தப் பாலத்தின் அருகிலிருக்கும் அவரின் அந்தப் பழைய ஆபீசுக்கு அவர் போவதா வேண்டாமா என்று? அவர் அதுக்காகத்தான் கிளம்பி வந்தாரா தெரியாது! இருந்தாலும் ஒரு யோசனைதான்…இப்டியாப்பட்ட காரெக்டர் உள்ள மனுஷன் என்ன செய்வார்?

நானும் யோசிச்சித்தான் பார்க்கிறேன்…ஒண்ணும் புலப்படலை….

உறலோ….! என்னங்க நீங்க…நீங்களும் இப்டி ஒரேயடியா தலையைச் சொறிஞ்சிட்டு நின்னீங்கன்னா…? எதாச்சும் சொல்லுங்க…? யாருமே ஒண்ணும் சொல்ல மாட்டீங்கிறீங்களே…? சரியாப் போச்சு…அங்க பாருங்க…..?

எல்லோரும் அவசரமாய்த் திரும்பி நோக்குகிறார்கள்.

சுருட்டி மடக்கிக் கட்கத்தில் இடுக்கிய மஞ்சள் பையோடு எந்த நிறுத்தத்தில் வீட்டிலிருந்து கிளம்பி வந்து இறங்கினாரோ, அதே இடத்தின் எதிர் முனைப் பேருந்து நிறுத்தத்தை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

Series Navigationகவிஞர் முடியரசனாரின் வாழ்வும் இலக்கியப் பணிகளும்வடிவுடையானின் ” மனம் ஒரு வெற்றுக் காகிதம் “
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    AVAR APPADITHAN by USHATHEEBAN is yet another masterpiece in short-story writing. It centres around the pangs and thoughts of the only charactor Krishnamoorthy. He is a retired officer who was honest and helpful in nature. As an experienced officer he used to take free classes for the other workers, including some new senior officers. As a honest person he took no bribes or fees for his classes. He was always helpful to his co-workers and encouaged them to learn their jobs to be efficient. If he had been interesred in money, he could have arranged the marriage of his only daughter much earlier. Now it is already two years and he is reluctant to go to his office to give the wedding invitation. His thoughts about the reaction of his old collagues are very well depicted by the writer. His mind is wavering as he is basically a principled man with self-respect. He appreciates honesty which he thinks is lacking in people of today. Men have become more money-oriented, corrupt and hypocritic in his view. He would rather not invite them though there are also some who are honest in their midst. Hence he enters his regular corner shop and hopes the owner would recognise him as he was a regular customer there for so many years. But to his dimay the shop-owner never cares about him! And what else? The disappointed Krishnamoorthy drops the idea of visiting his office and instead crosses the road for the opposite bus stand to return home!A very well written short story by USHATHEEBAN. Congratulations!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *