ஆன்மிகமோ, அன்னைத் தமிழோ- அன்பேயாகுமாம் எல்லாம்!! -தமிழறிஞர் திரு.கதிரேசனைத் தெரிந்துகொள்வோம்!

This entry is part 2 of 33 in the series 14 ஏப்ரல் 2013

kadhiresan - jpgவித்துவான் க.கதிரேசன், M.A., B.Ed

[குன்றக்குடி ஆதீனப்புலவர், சைவத்தமிழ்மணி, சித்தாந்தச்செல்வர்,

 

அலுவலகத்தில் பணிசெய்த நாட்களிலும் சரி, விருப்ப ஓய்வில் வெளிவந்து இன்று எட்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டபோதும் சரி, ஏதாவது சமூகப் பணி செய்யும் ஆர்வத்தில் நிதியுதவி கேட்கும்போதெல்லாம் உதவ முன்வரும் முதல் நபராக இருப்பவர் என் மதிப்பிற்குரிய அலுவலகத்தோழி குமாரி.  அவ ரும், அவருடைய கணவர் சுந்தரேசனும் அடிக்கடி திரு.கதிரேசன் என்ற தமிழறி ஞரைப் பற்றி மிகுந்த மதிப்போடு பேசக்கேட்டிருக்கிறேன். தமிழாசிரியராக திரு.கதிரேசன் அர்ப்பணிப்போடு ஆற்றிய அரும்பணி தான் என்னை இநத அளவுக்கு மேம்படுத்தியிருக்கிறது என்று நெகிழ்ந்து கூறுவார் குமாரி. ஆரவார மில்லாமல் தமிழ்த்தொண்டு ஆற்றிவரும் அந்தத் தமிழறிஞரைப் பற்றி எழுது வது அவசியம் என்று தோன்றியது லதா ராமகிருஷ்ணன்

 

ஆன்மிகம், ஆசிரியப்பணி – இரண்டும் எனக்குச் சொல்லித்தந்தது ஒரே செய்தி – அன்பு காட்டு என்பதே அது என்று ரத்தினச்சுருக்கமாகக் கூறும் திரு.கதிரேசன் 1994 முதல் இன்றுவரை குன்றக்குடி ஆதீனப்புலவராக இருந்துவருகிறார். படிக்கும் காலத்திலேயே தமிழை மிகவும் நேசித்துவந்த மனிதர். கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு 1959-ல் குன்றக்குடி,அடிகளார் உயர்நிலைப் பள்ளி யில்[இந்தப் பள்ளியே இப்போது தருமைக் கயிலைக் குருமணி மேல்நிலைப் பள்ளியாகியுள்ளது]தமிழாசிரியராகப்பணியேற்று 1994வரை அங்கே எத்தனையோ மாணாக்கர்களுக்கு அறிவூட்டி நல்வழிப்படுத்தியவர்.

 

ஆன்மிகத்தில் பற்று பரம்பரை பரம்பரையாக வந்தது என்று கூறும் திரு.கதி ரேசன் எல்லோரையும் ஆண்டவனின் பிள்ளைகளாக பாவிக்கவேண்டும் என்பதே எல்லா மதங்களின் அடிப்படைநோக்கம். அதை உணராமல் மதத்தின் பெயரால் தீமை செய்பவர்கள் ‘மதம்பிடித்தவர்கள்’. நான் சொல்வது வேறுவகையான ‘மதம்பிடித்தல்’ என்று திட்டவட்டமாகக் கூறுகிறார்.

 

ஆன்மிகவாதியான நீங்கள் பெரியாரைப் பாராட்டிப் பாடியிருக்கிறீர்களே என்று கேட்டால், ‘ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் நாலுவிதமாகத்தான் இருப்பார்கள். நண்பர்களுக்கிடையில் கூட கருத்துவேறுபாடிருக்கலாம். ஆனால், ஏதேனும் ஓர் அடிப்படைச் சரடு அவர்களை ஒருங்கிணைத்திருக்கும். அப்படித்தான் பெரியா ரும் சமூகசீர்திருத்தம் என்ற அடிப்படையான ஒருமித்த கருத்து காரணமாய் குன்றக்குடி மடத்திற்கு நான்கைந்து முறை வந்ததுண்டு. அன்போடும் பண்போ டும் பழகுவார் என்று நெகிழ்வோடு நினைவுகூர்கிறார் திரு.கதிரேசன்.

 

குன்றக்குடி அடிகளாரைப் பற்றியும் மனமார நினைவுகூர நிறைய விஷயங் களிருக்கின்றன இந்தத் தமிழறிஞருக்கு. ஒருமுறை விவசாயப்பெருமக்களுக் கான விருந்து ஏற்பாடு மடத்தில். சிவகங்கை மன்னர் வருவதாக இருந்தது. அவர் வரக் காலதாமதமாகியது. வரவேண்டியவர்கள் இன்னும் வரவில்லையே என்று மடத்தைச் சேர்ந்தவர்கள் மன்னரைக் குறித்துப் பேச, வரவேண்டியவர்கள் வந்துவிட்டார்களே என்று அங்கே குழுமியிருந்த உழவர் பெருமக்களை முன்னிலைப்படுத்திப் பேசிய குன்றக்குடி அடிகளார், அவர்களுக்கு விருந்து பரிமாறிவிடச் சொன்னாராம்! ஏறத்தாழ 1954 சமயம் குன்றக்குடி அடிகளாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் சைவர்களுக்குத் தனியிடத்தில் பந்தி போடப்பட்டிருந்தது. அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தனி பந்தி.  இதற்கு வேறுவகையான முறையான ஏற்பாடுகளைச் செய்யாமல் இப்படிப் பிரித்து வைத்திருப்பது சரியல்ல என்று சைவப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அடிகளார் அங்கே அமர்ந்து உண்ணாமல் எழுந்துவிட்டாராம்.

 

1994-இல் தமிழாசிரியப் பணியிலிருந்து திரு.கதிரேசன் ஓய்வுபெற்ற போது அவர் மீது மிகுந்த பிரியம் வைத்திருந்த மாணாக்கர்கள் பதினெட்டாயிரம் அளவு பணம் சேர்த்து அவருக்குப் பாராட்டுவிழா நடத்த முற்பட்ட போது வேண்டாம் என்று திரு.கதிரேசன் மறுக்க அவர்கள் நேரே குன்றக்குடி அடிகளா ரிடம் சென்று முறையிட, விழா நடத்துங்கள், கதிரேசன் கலந்துகொள்வார், நானும் கலந்துகொள்வேன் என்று உறுதியளித்தோடு, அப்போது அவர் இருதய நோயாளி என்பதால் சேர்ந்தாற்போல் ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேசலாகாது என்று மருத்துவர் அறிவுறுத்தியிருந்தபோதிலும், ஐந்து நிமிடங்கள் ஆகிவிட் டதை நினைவுபடுத்துவதாய் ’இளைய பட்டம்’ மணியடித்தபோது அந்த மணியை நிறுத்தி ஏறத்தாழ 40 நிமிடங்கள் பேசினார் என்பதை நெகிழ்ச்சியோடு நினைவு கூர்கிறார் திரு.கதிரேசன்.

 

ஒரு ஆசிரியராக, தமிழாசிரியராக உங்கள் அனுபவங்கள்? இன்று தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களிலும் தமிழை எழுதப் படிக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதாய் ஒரு சுற்றாய்வு புலப்படுத்து கிறதே?

 

ஆசிரியர்களுக்குப் பொறுமையும், மாணாக்கர்களிடம் உண்மையான பிரியமும் மிகவும் அவசியம். மாணாக்கர்களை அக்கறையோடு கடிந்துகொள்ளலாம். ஆனால், அவர்களை மதிப்பழிக்கலாகாது. நான் மொழியில் தேர்ச்சியற்ற, ஆர்வ மில்லாத பிள்ளைகளிடம் பொறுமையாகப் பேசிப் புரியவைப்பேன். அவர்களு டைய பெற்றோர்களிடம் பேசிப்பார்ப்பேன். ஆசிரியர்களுக்கு அவ்வப்போது நெறிப்படுத்துதல் பயிற்சி நடத்தினால் நல்லதுதான். நாங்கள் சுற்றுவட்டாரப் பள்ளிகள் கூட்டம் நடத்தியிருக்கிறோம்.  குன்றக்குடி மடம் சார்பில் 16 பள்ளிகள் இருக்கின்றன. ஏழெட்டு கிலோமீட்டர்கள் தள்ளியுள்ள வேறு பள்ளிக ளிலிருந்து இங்கே சேர வரும் பிள்ளைகளுக்கு போதுமான தேர்ச்சியில்லை என்று ஒருமுறை இங்கேயிருந்த தலைமையாசிரியர் இடம் தர மறுத்துவிட்ட செய்தியை அந்தப் பிள்ளைகளின் பெற்றோர் ஆதீனத்திடம் எடுத்துச் சென்ற போது, தலைமையாசிரியரைக் கூப்பிட்டு காரணம் கேட்டார் அடிகளார். அந்த மாணாக்கர்களுக்கு சரியாக எழுதப் படிக்கத் தெரியலை. அவர்கள் சுத்தமாக இல்லை என்று காரணம் கூறப்பட்ட போது “படிக்கத் தெரியலைன்னு தானே வரான். இடம் கொடுக்கலைன்னா எங்க போவான். சேர்த்துக்கொள்ளுங்கள்”, என்று அடிகளார் பதிலளித்ததை நாம் எண்ணிப்பார்க்க வேண்டியது அவசியம் என்று சுட்டிக்காட்டும் திரு.கதிரேசன் தன் பொறுப்பிலிருந்த ஒரு மாணவன் அப்படித்தான் படிப்பில் ஆர்வமில்லாமல் அலட்சியமாக இருந்ததையும், அவனைத் தான் அணுகிய விதத்தையும் எடுத்துரைத்தார்: சம்பந்தப்பட்ட மாணவன் வீட்டுப்பாடத்தைச் செய்யாமல் வருவதையே வழக்கமாகக் கொண் டிருந்தான். ஒருநாள் திரு.கதிரேசன், ‘இனி மேல் நான் வீட்டுப்பாடம் செய்தாயா என்று உன்னைக் கேட்டு தொந்தரவு செய்யவே மாட்டேன்,” என்று சொல்லிவிட, அடுத்த நாளிலிருந்து ஒழுங்காக வீட்டுப்பாடம் செய்துவர ஆரம்பித்தான். ஆசிரி யர் தன்னைக் கேட்கவேண்டுமே என்று ஏங்குவ தாகவும், அவனிடம் கேட்கும் படியும் மற்ற மாணவர்கள் அவனுக்காக ஆசிரிய ரிடம் பரிந்துபேசினார்களாம்!

 

மாணவர்களிடம் அக்கறையோடு கோபம் கொள்ளலாமே தவிர அவர்களைக் கேவலமாக நடத்துவதும், கரித்துக்கொட்டிக் கொண்டேயிருப்பதும் தவறு. மேலும், அவர்களிடமுள்ள நல்ல இயல்புகளையும், திறமைகளையும் மனதாரப் பாராட்டி ஊக்குவிக்கவேண்டியதும் அவசியம். என்னுடைய அடிப்படையை அன்பு என்று வைத்துக்கொண்டதால் மாணவனைத் திருத்த மட்டுமே நினைப் பேனே தவிர மோசமானவனாக நினைக்க மாட்டேன், நடத்த மாட்டேன். அதனால் மாணவர்கள் எப்பொழுதுமே என்மீது அன்புமழை பொழிவார்கள். என் முகம் சற்றே வாடியிருந்தாலும் கூட ‘உடம்பு சரியில்லையா ஐயா என்று அன்பும், அக்கறையுமாக விசாரிப்பார்கள் என்று தன் ஆசிரியப்பணி நாட்கள் பற்றி சொல்லிக்கொண்டே போகிறார் திரு.கதிரேசன்! “என்னுடைய மாணாக்கர் களிடம் ‘உன் அப்பா பேர் என்ன?, அம்மா பேர் என்ன? என்று சினேகமாகப் பேச்சுக்கொடுப்பேன். அவர்கள் பேசும்போதே அவர்களுடைய ழகர, ளகர உச்சரிப் புகளைத் திருத்துவேன். பிள்ளைகளுக்குப் படிக்க ஆர்வமுண்டாக்குவதும், அந்த ஆர்வத்தைத் தக்கவைப்பதும் ஆசிரியர்களின் பொறுப்பு. இதற்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பும் அவசியம் தேவை என்று அனுபவத்தின் அடிப்படையில் அழுத்தமாகத் தெரிவிக்கிறார் அவர்.

 

1994-ல் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகே எழுத்துப்பணியில் ஈடு பட ஆரம்பித்தார். குன்றக்குடி அடிகளாரின் உரைகளை 16 தொகுதிகளாகத் திரட்டி வெளியிட்டிருக்கிறார். மற்றும் பல நூல்களை எழுதியுள்ளார். பதிகம், தலவரலாறு, தொகுப்புநூல்கள், நினைவுமலர்கள், சிற்றிலக்கியம், கட்டுரைகள் என பல பிரிவுகளில் நூல்கள் எழுதியுள்ளவரிடம் தமிழை எளிதாக ஆர்வமுடன் எழுதவும் படிக்கவும் கற்றுத்தரும் நூல்களையும், மாணாக்கர்களுக்கும், இளந்தலைமுறையினருக்கும் வாழ்வுமதிப்புகளைக் கற்றுத்தரும் நூல்களையும் எழுதும்படிக் கேட்டுக்கொண்டேன். திரு.கதிரேசன் மீது அன்பும் மதிப்பும் கொண்டவர்களின் பொருளுதவியோடு தனது நூல்களை வெளியிட்டுவருகிறார் திரு.கதிரேசன்.. இப்பொழுது ஒரு பெரிய எழுத்தாக்கத்தைப் படைக்கும் முயற்சி யில் ஈடுபட்டுள்ளார். பக்தி இலக்கியங்கள் என்பதால் தேவாரம், திருவாசகம் ஆகிய பழந்தமிழ் இலக்கியங்களின் தமிழ்ப்பணி அதிகம் பேசப்படுவதில்லையா என்று கேட்டதற்கு கடவுளைப் பாடினாலும் அவற்றில் சமூகத்தில் நிலவும் வேறுபாடுகளைக் களைவதற்கான சீர்திருத்தக் கருத்துகள் நிறையவே சொல்லப் பட்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். ‘சாதி, குலம், பிறப்பு என்னும் சுழி பட்டுத் தடுமாறும் போன்ற பல வரிகளை எடுத்துக்காட்டுபவர் முத்தாய்ப்பாக, சமூகம்-ஆன்மிகம்-அரசியல் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று உறுதுணையாக, வளம்சேர்ப்பதாக அமையவேண்டியது இன்றியமையாதது என்கிறார்.

 

Series Navigationவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -5 மூன்று அங்க நாடகம்வெளியிடமுடியாத ரகசியம்!
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    கவிஞர் இராய. செல்லப்பா, நியுஜெர்சி says:

    தமிழாசிரியர் திரு கதிரேசன் அவர்களைப் பற்றிய வரைவு வரவேற்கத்தக்கது. நான் அன்னாரது மாணாக்கன் அல்லன் என்றாலும், அவரைப் போன்ற சிறந்த ஆசிரியர்களைப் போற்றிக் கட்டுரைகள் வருவது, இன்றைய மாணவர்களுக்கு வழிகாட்டுவதாக உள்ளது என்பதைத் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.
    கவிஞர் இராய. செல்லப்பா, நியுஜெர்சி.

  2. Avatar
    தேமொழி says:

    கடமையுணர்வுடன் கல்விப் பணியாற்றிய மனித குல மாணிக்கத்தை அறிமுகப்படுத்திய கட்டுரைக்கு நன்றி.

    அன்புடன்
    ….. தேமொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *