இதுவும் ஒரு காரணமோ?

 

 

அமீதாம்மாள்

போக்குவரத்து

போகாவரத்தானது

முதுகும் மூக்கும்

முட்டிக்கொள்ளும்

வாகன நெருக்கடி

என்ன காரணமாம்?

 

அட!

பெரிய குப்பை வாகனம்

குப்பை அள்ளுகிறது

 

நிமிட தாமதங்கள்

நெருப்பாய் அவசரங்கள்

ஒலிப்பான்கள் இரைச்சல்கள்

 

பாதசாரியாய் நான்

அந்தக் குப்பை வாகனம்

கடக்கிறேன்

கும்பலாய் குப்பை வாளிகள்

இழுக்கிறார்கள்

தள்ளுகிறார்கள்

தூக்குகிறார்கள்

கவிழ்க்கிறார்கள்

 

இன்று விடுமுறை

விடுமுறைக்கே விடுமுறை தந்து

குப்பை அள்ளும் இவர்களை

கும்பிட வேண்டாமா?

 

கரும்புச்சாறு வாங்கித் தந்தேன்

மறுத்தார்கள்

திணித்தேன்

வணங்கினேன்

வணங்கினார்கள்

 

வாளிகள் முடிந்தன

வழிவிட்டது வாகனம்

 

கதறிக் கடந்தன வாகனங்கள்

கடுகு வெடித்தன முகங்களில்

கும்பிட வேண்டிய மனிதர்களை

குப்பையாகப் பார்த்தனர்

இல்லை எரித்தனர்

சேவையைப் போற்றும் அறிவு

செத்துவிட்டதோ?

 

எனக்குப் புரிந்தது

 

காட்டுக் கிளிகளாய்

வாழவேண்டிய நாம்

கடிவாளங்களோடு வாழ

இதுவும் ஒரு காரணமோ?

 

(கடிவாளம் என்பது நம் முகக் கவசங்கள்.

கோவிட் 19ன் நிலைமைச் சொல்ல நினைத்த கவிதை’

சிங்கப்பூர் பின்னணியில்)

 

அமீதாம்மாள்

Series Navigationஇங்கு