இன்றும் தொடரும் உண்மைக்கதை!

Spread the love

(*விக்கிபீடியாவிலிருந்து)

தமிழில் லதா ராமகிருஷ்ணன்

ஆபிரகாம் லிங்க்கன்செருப்புத் தைப்பவரின் மகனாகப் பிறந்து அமெரிக்காவின் ஜனாதிபதியானவர்அமெரிக்காவின் 16ஆவது அதிபராக 1861 முதல் 1865 வரை இருந்தவர். சக மனிதர்களை அடிமைகளாக வைத்திருப்பதை எதிர்த்தவர். சட்டம் இயற்றி அந்த வழக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்தவர்.

அமெரிக்க ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்க்கனின் தந்தை செருப்புத் தைப்பவர். செருப்புத் தைப்பவரின் மகன் நாட்டின் அதிபராகிவிட்டானே என்று வழிவழியாக வளவாழ்வு வாழும் பரம்பரையில் வந்தவர்கள் பலர் முகஞ்சுளித்தார்கள். உயர்குடிப் பிறப்பினரான தங்களுக்கே நாட்டை ஆளும் உயர்பதவிகளில் வகிக்க உரிமையும் தகுதியும் உண்டு என்று எண்ணுபவர்கள் அவர்கள். செருப்புத் தைக்கும் ஒருவரின் மகன் தங்களை ஆள்வதா என்று ஆத்திரப்பட்டார்கள்.  

அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்ற பின் ஆபிரகாம் லிங்க்கன் முதன் முறையாக உரையாற்ற நாடாளுமன்றப் பேரவைக்குள் நுழைந்தபோது அங்கிருந்தவர்களில் ஒருவர் எழுந்தார். மேற்குடிவர்க்கத்தைச் சேர்ந்த செல்வந்தர் அவர். ஆபிரகாம் லிங்க்கனைப் பார்த்து அவர், “மிஸ்டர் லிங்க்கன், உங்கள் தந்தையார் என் குடும்பத்திற்கு செருப்பு தைத்துக்கொடுத்துக்கொண்டிருந்தார் என்பதை நீங்கள் மறக்கலாகாது”, என்றார்.

அவையிலிருந்தவர்கள் எல்லோரும் சத்தமாகச் சிரித்தார்கள். ஆபிரகாம் லிங்க்கனை அத்தனை பேர் முன்னிலையிலும் முட்டாளாக்கி அவமானப்படுத்திவிட்டோம் என்று அவர்கள் எண்ணினார்கள்.

ஆனால் லிங்க்கன் குனிக் குறுகவில்லை. அவருடைய தரமும் திறமும் அடியோடு வேறு. தன்னை அவமானப்படுத்துவதாய் பேசிய மனிதனை நேருக்குநேராகப் பார்த்தவர், “சார், உங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்தாருக்கு என் தந்தை வழக்கமாக செருப்பு செய்துகொடுப்பது எனக்குத் தெரியும். இங்கேயுள்ள வேறு பலரும் கூட அதை அறிந்திருப்பார்கள். அவர்களுக்குக் கூட என் தந்தை செருப்பு செய்துகொடுத் திருப்பார். ஏனென்றால், என் தந்தை செய்வதுபோல் வேறு யாராலுமே அத்தனை அருமையான பூட்சுகளைத் தயாரிக்க முடியாது. அவர் ஒரு சிருஷ்டிகர்த்தா.  அவர் தயாரிக்கும் பூட்சுகள் வெறும் பூட்சுகள் மட்டுமல்ல. அவர் அத்தனை ஆத்மார்த்தமாய் அவற்றை உருவாக்கினார். உங்களிடம் கேட்க விரும்புகிறேன். அவர் தயாரித்துத் தந்த பூட்சுகளைப் பற்றி உங்களுக்கு அதிருப்தி ஏதேனும் உண்டா? அவை குறித்த புகார் எதேனும் உண்டா? ஏனெனில், எனக்கும் பூட்சுகள் தயாரிக்கத் தெரியும். என் தந்தை செய்துதந்த பூட்சுகள் சரியில்லை என்று நீங்கள் எண்ணினால் வேறு பூட்சுகளை உங்களுக்கு என்னால் தயாரித்துத்தர முடியும்! ஆனால், எனக்குத் தெரிந்தவரை, என் தந்தையார் உருவாக்கிய பூட்சுகளைப் பற்றி எவரும் ஒருபோதும் குறைசொல்லியதில்லை. அவர் ஒரு மேதை, ஒரு படைப்பாளி; என் தந்தையை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்!”

அவர் பேசியதைக் கேட்டு அவையே மௌனமாகிவிட்டது. யாருக்கும் பேச்செழ வில்லை. அவர்களால் ஆபிரகாம் லிங்க்கன் என்னமாதிரியான இரும்புமனிதர் என்பதைப் புரிந்துகொள்ள இயலவில்லை. அவர் பூட்சு-தயாரித்தலை ஒரு கலைவடிவமாக்கினார், ஒரு படைப்புத் திறனாகப் பேசினார்! அவருடைய தந்தையின் தொழிலில் கூனிக் குறுக எதுவுமேயில்லை என்றும், அப்பழுக்கற்ற, கலைநயம் மிக்க பூட்சுகளை தன் தந்தை  உருவாக்கிய விதத்தை, அவை குறித்து யாரும் ஏதும் குறைசொல்லவியலாத அளவு செய்நேர்த்தியோடு தன் தந்தை தயாரித்ததை எண்ணி தான் பெருமைப்படுவதாகவும் அவையோர் முன் தலைநிமிர்ந்து தெரிவித்தார். அமெரிக்காவின் அதிபராக இருந்தாலும், தனக்கும் பூட்சுகள் செய்யத் தெரியும் என்றும், தன் தந்தை செய்துதந்த பூட்சுகளில் குறையிருந்தால் வேறொரு ஜதை காலணிகளை செய்துதர தான் தயாராயிருப்ப தாகவும் தெரிவித்தார்!

ஆபிரகாமை அவையோர் முன் முட்டாளாக்கிக்காட்ட, மதிப்பழிக்க முற்பட்டவர்(கள்) இறுதியில் தலைகவிழ்ந்து நின்றார்(கள்).

Series Navigationமுதன்முதல் பூதப்பெரும் கருந்துளைப் படப்பிடிப்பை வானியல் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்நானென்பதும் நீயென்பதும்….