இப்போதைக்கு இது (நடந்து முடிந்த தேர்தலும் ஆட்சிமாற்றமும்)

திர்பார்ப்பும் நம்பிக்கையுமாக தமிழக மக்கள் தங்களிடமுள்ள வன்முறை சாரா எனில் வலுவான ஒரே ஆயுதமான ‘வாக்குரிமையை’ப் பயன்படுத்தி ஆட்சிமாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். மக்களின் வாக்குரிமையை, வாழ்வுரிமையை மதித்துநடக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதே தோல்வியடைந்தவர்களுக்கும் சரி வெற்றியடைந்தவர்களுக்கும் சரி தேர்தல் தரும் பாடமாக இருந்துவருகிறது.

தேர்தல் முடிவுகளை தமிழக மக்களின் தோல்வி என்று திருவாய் மலர்ந்தருளினார் குஷ்பு. இதுநாள்வரை இன்னலுறும் தமிழக மக்களுக்காக நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதை எண்ணிப்பாராமல் அவர் ’வெயிலே படாமல் அரசியல் நடத்துபவராக இன்றை தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தேர்தல் கூட்டங்களில் குற்றஞ்சாட்டினார்! இதற்கு ஒரு படி மேலே போய், ‘பணப்பட்டுவாடா’ குறித்து டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியில் கேட்கப்பட்டதற்கு ‘தமிழக மக்கள் ஒருவரிடம் பண்ம் வாங்கி இன்னொருவருக்குப் போடுமளவுக்கு மனசாட்சியற்றவர்கள் என்று கூறுகிறீர்களா?” என்று அத்தனை ஆவேசமாய் கேட்டதில் ‘ஆர்னாப்’ ஆடிப்போனார்! கைப்பற்றப்பட்ட பணம் யாருடையது என்பதற்கு ஆவணச்சான்று இருக்கிறதா என்று அவர் கேட்ட அபத்தம் மலைச்சாமி ஐ.ஏ.எஸ்ஸை திகைத்துப்போகச் செய்தது! ஆங்கிலம் தெரிந்த ஒரே காரணத்திற்காக எவரொருவரையும் கட்சி சார்பாகப் பேசவைப்பது அபத்தமான போக்கு. இவரைவிட ரத்தினச்சுருக்கமாக நான்கே வரிகளில் ஆங்கிலத்தில் கச்சிதமாகத் தம் கட்சித்தலைவரின் மனவலிமை குறித்துப் பேசினார் பாராளுமன்ற உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி.

படத்திற்குப் படம் மதுவருந்தி தாயையும், தந்தையையும் கூட எட்டியுதைப்பதாய் நடித்த, தமக்கையையே இழிவாகப் பேசும் வசனங்களை நாக்கூசாமல் பேசி தமிழக மக்களுக்கு நகைச்சுவை விருந்தளித்த நடிகர், வருமானத்திற்காக மதுக்கடைகளை அரசுகளே மூலைக்குமூலை திறந்துவைத்திருக்கும் உண்மையைக் கூடக் கணக்கில் கொள்ளாமல் குடிக்கு எதிராக அத்தனை ஆக்ரோஷமாக தேர்தல் களத்தில் முழங்கியது அவர் சார்ந்த கட்சியைச் சார்ந்த பலருக்கும்கூடப் பிடித்திருக்காது.

இன்னோரன்னோரைத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் பார்க்கும்போதும், கேட்கும்போதும் ‘அரங்கின்றி வட்டாடியற்றே’ என்று தொடங்கும் வள்ளுவரின் வாய்மொழியே திரும்பத்திரும்ப நினைவுக்கு வந்துகொண்டிருந்தது.

ன்றைய தமிழக முதல்வர் குறித்து எழுத்தாளர் வாசந்தி எழுதியுள்ள நூலுக்கு முதல்வர் தரப்பில் நீதிமன்றத் தடை வாங்கப்பட்டிருப்பது ‘எழுத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூறப்படுகிறது. எனில், வாழ்க்கைச் சரிதை என்பது சம்பந்தப்பட்ட நபரை  குறிப்பிடத்தக்க அளவு நெருக்கமாகப் பலகாலம் பார்த்து,பழகி அறிந்தவர்களால் எழுதப்படுவது என்றும், எழுத்தாளர் வாசந்தி என்றுமே இன்றைய முதல்வரை எதிர்மறைக் கண்ணோட்டத்துடன் விமர்சித்துவருபவர் என்றும், தொலைவிலிருந்து, செய்தி ஊடகங்களின் வாயிலாக மட்டுமே அறிந்தவர் என்றும், இந்நிலையில் தருணம் பார்த்து இந்த சமயத்தில் அந்த நூலை வெளியிடுவது தேவையில்லை என்றும் கருத்து பெறப்படுகிறது.

தங்கள் ‘அந்தரங்கம் புனிதமானது’  மற்றவர்கள் அந்தரங்கம் மண்ணிறைக்கப்படவேண்டியது என்ற மனோபாவத்துடன் வெளியாகும் எழுத்தாக்கங்கள் நம்மிடம் கணிசமாகவே  உண்டுதான்.

தேசியத் தொலைக்காட்சி அலைவரிசைகள் தமிழக அரசியல் தலைவர்களைப் பலகாலமாகவே பாரபட்சமாகவே நடத்திவந்திருக்கின்றன; சித்தரித்துவந்தி ருக்கின்றன. இன்றைய தமிழக முதல்வரைப் பற்றி நகைச்சுவை என்ற பெயரில் ஒரு சமயம் என்.டி.டி.வி ஸைரஸ் பரூச்சா sexist overtones கொண்ட வார்த்தைகளை உதிர்த்தார். சமீபத்தில் தேர்தல் பிரச்சார சமயம் என்.டி.டி.வி ’பர்க்கா தத்’ பேட்டிகண்டபோது இன்றைய முதல்வர் “இரண்டு கட்சிகளுமே ஊழல் வழக்குகளில் சிக்கிக்கொண்டிருக்கின்றன என்பதாகவே உங்கள் சானல்கள் திரும்பத்திரும்பக் கூறிவருகின்றன. என்மீது போடப்பட்ட எல்லா வழக்குகளில் ஒன்று நீங்கலாக மற்ற அனைத்திலும் என் குற்றமற்ற நிலை நிரூபிக்கப்பட்டுவிட்டது என்பதை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதேயில்லை”, என்றார். இன்றும் Cases pending against Ms.Jayalalitha என்றுதான் ஆங்கில சானல்களில் கூறப்பட்டுவருகிறது.

’தமிழகத்தில் தான் திரைப்படக்காரர்களே ஆட்சியாளர்களாகவும் இடம்பெறும் அவலநிலை நீடிக்கிறது’ என்பதாகவும் திரும்பத்திரும்ப ஆங்கிலத் தொலைக்காட்சியாளர்கள் அங்கலாய்த்துவருகிறார்கள். இது உண்மையா? திரைப்படத்துறையிலிருந்து வந்தவர்களெல்லாம் தமிழக அரசியல் களத்தில் சல்லிசாக நிலைத்துநின்றுவிட்டார்களா? நிலைத்துநின்றுவிட முடிகிறதா?

எப்படியிருந்தாலும், அரசியல் கட்சிகளால் நடத்தப்படும் தமிழ் சானல்களில் இருக்கவியலாத கருத்துச்சுதந்திரம், கருத்துப்பகிர்வு, பலகுரல் விமர்சனம் இந்த ஆங்கில சானல்களில் இருப்பதாக ஒரு நிறைவையுணரும் அதே நேரம் அது ஒருவித பிரமை என்பதாகவும் அறிவுக்குப் புலப்படுகிறது. இந்த ஆங்கில சானல்களின் முதலாளிகள், அவர்கள் பின்னணி குறித்து அறியும் ஆர்வம் வரவாகிறது.

வெல்ஃபேர் ஸ்டேட்’ என்னும்போது அடித்தட்டு மக்களுக்கான் அடிப்படைத்தேவைகளை இலவசமாகக் கொடுப்பதில் தவறிருக்க முடியாது. அது அரசின் கடமை; சாதனையல்ல. ஆனால், அதுவே சகட்டுமேனிக்கு எல்லோருக்கும் தரப்பட வேண்டுமா? அதற்கு பதிலாக முதியவர்களுக்கு, சாலையோரப் பிச்சைக்காரர்களுக்கு தரமான மறுவாழ்வு இல்லங்கள் வாழ்வாதாரங்கள் அதிகரிக்கப்படலாம். மக்கள் நல உணவு விடுதிகள் அதிகரிக்கப்படலாம். அன்னதானம் என்பதை கோயிலோடு இணைந்த செயல்பாடாக இல்லாமல் பண்டைய அன்னசத்திரங்கள் போல் அமைக்கலாம். பகல் நேரப் பராமரிப்பு மையங்கள்/ பொழுதுபோக்கு மையங்கள் முதியோர்களுக்கு அமைக்கப்பட்டால் இடப்பற்றாக்குறையால் குடும்பங்களில் ஏற்படும் பல பிரச்னைகள் குறைய வழியுண்டு. பொதுவிடங்களில் குடிதண்ணீர் வசதி, கழிப்பறை வசதி அதிகரிக்கப்படவேண்டும். மூன்று ரூபாயும் அதற்கு மேலும்கூட வசூலித்துவரும், அசுத்தமான கழிப்பறைக் கட்டணங்கள் அனேகமுண்டு.

கேபிள் டி.வி அரசுடைமையாக்கப்படும் என்கிறார்கள். எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் எல்லாவற்றையும் தாண்டிய அளவில் தொலைக்காட்ட்சி அலைவரிசைகளில் இடம்பெறும் குத்துப்பாட்டுக் காட்சிகளும், கொலை-தற்கொலையை ‘உணவுக்கு ஊறுகாயே போல் வாழ்வுக்கு’ என்பதாய் வலியுறுத்திவரும் மகா-மெகா சீரியல்களுக்கு இருந்துவரும் அளப்பரிய சுதந்திரம் அச்சுறுத்துகிறது. அரசியல்வாதி ஆண் எனில் அவருடைய உடையலங்காரம் குறித்தோ, சிகையலங்காரம் குறித்தோ கேள்வியெழுவதில்லை; கருத்துரைக்கப் படுவதில்லை. அதுவே பெண் என்றால் மேற்கண்டவை முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய முக்கிய விஷயங்களாகிவிடுகின்றன. அவ்வாறு, ‘இன்றைய தமைழக முதல்வர் காதில் தோடு அணிந்துகொண்டிருப்பது குறித்து தவறாமல் கேள்வி கேட்கப்பட்டது. ‘என்னுடைய கழகத் தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப அணிந்துகொண்டே’, என்று சொல்லி முடித்திருக்கலாம். எனில், “எங்கள் கழகத் தொண்டர்களில் சிலர் நீங்கள் நகை அணியாவிட்டால் நாங்கள் தீக்குளித்துவிடுவோம் என்று சொன்னார்கள். எங்கள் தொண்டர்கள் சொன்னதைச் செய்வார்கள் என்பதால் நான் திகைத்துப் போனேன். எனவே, அணிந்துகொண்டேன்”, என்று ஒருவித பெருமிதத் தொனியில் குறிப்பிட்டிருக்க வேண்டாம். தேர்தலில் வெற்றிபெற நாவைக் காணிக்கையாக அறுத்தெறிந்த பெண்ணுக்கு அரசு வேலை போட்டுக்கொடுத்தது அவருடைய அனாதரவான நிலை கருதியே என்று முதல்வர் தெளிவுபடுத்தியதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. எனில், அதிகாரப்பொறுப்பில் உள்ளவர்கள், தொண்டர்களிடம் அல்லது கணிசமான எண்ணிக்கையிலான மக்கட்குழுக்களிடம் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய அளவில் கருத்துரைக்கும் இடத்தில் இருப்பவர்கள் மக்களின் சுயத்தை, தன்னம்பிக்கையை வளர்ப்பதாய் கருத்துரைத்தல் நலம். தாம் சொல்லும் கருத்துகளில், அதற்குப் பயன்படுத்தும் வார்த்தைகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். தற்கொலை செய்துகொள்பவரை சிறந்த தொண்டராகச் சுட்டும் அதே நேரம் தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்(தோழர் முத்துக்குமார் குறித்து முன்வைக்கப்படும் கருத்துகளுக்கும் இது பொருந்தும்).

புதிய அரசிடம் சமூகத்தின் ஒவ்வொரு தரப்பினருக்கும் சில பல எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் இருக்கின்றன. இலக்கியத்துறை சார்பில் அப்படி ஏதாவது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றனவா, முன்வைக்கப்படுமா தெரியவில்லை. எனில், இலக்கியத்துறை சார் வளர்ச்சிப்பணிக்கு என்று கட்சி சாரா அமைப்பொன்றை, சுயமாய் முடிவெடுக்கும் , செயல்திட்டங்கள் தீட்டும் சுதந்திரம் கொண்டதாய் உருவாக்கவேண்டும். சிறிய பதிப்பாளர்களின் நூல்களுக்கும் ‘நூலக ஆர்டர்’ கிடைக்க ஆவன செய்யப்படவேண்டும். குறிப்பாக, நவீன தமிழ்க்கவிதை நூல்களுக்குக் கிடைக்கவேண்டும். வெளியூர்களிலிருந்து வரும் எழுத்தாளர்கள், உள்ளூரில் அமைதியாக எழுத இடம் தேவையாக இருக்கும் எழுத்தாளர்கள் தங்கிச் செல்ல நியாய விலை தங்கும் விடுதிகள், இல்லங்கள் உருவாக்கப்படவேண்டும். அரசைப் பற்றி கருத்துகளை வெளியிடும் எழுத்தாளர்கள்/இதழியலாளர்கள் கட்டம்கட்டப்பட்டு பழிவாங்கப்படாமல் அவர்களுடைய கருத்துகள் உரிய அளவாக கவனம் பெறவேண்டும்…சொல்வதற்கு இன்னும் நிறைய உண்டு. எனில், இப்போதைக்கு இது!.

 

Series Navigationசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 392011 ஜப்பான் புகுஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு அணுமின் சக்தி பாதுகாப்புப் பற்றி உலக நாடுகளின் தீர்மானம் -3