இப்போதைக்கு இது – 3 மரணதண்டனை

Spread the love

லதா ராமகிருஷ்ணன்

மரணதண்டனை கூடாது என்ற கருத்திற்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது. மானுட வாழ்க்கையை முன்னின்று வழிநடத்திச்செல்வது அன்பும், அக்கறையும், அனுசரணையும், விட்டுக்கொடுக்கும் இயல்பும், மன்னிக்கும் மனோபாவமுமே. [ஒரு பிரச்னையில் சம்பந்தப்பட்டிருக்கும் அனைத்து தரப்பினரிடமும் இவையாவும் இடம்பெற்றிருக்கவேண்டியதும் இன்றியமையாதது]. யார் அதிக வல்லமையாளர்களோ அவர்களே வெல்வார்கள் என்பதே வாழ்க்கைநியதி என்று சொல்லப்படுவது ஓரளவுக்கு உண்மையென்றாலும் அதுவே ஒட்டுமொத்த உண்மையல்ல.

அதே சமயம், ‘மரணதண்டனை கூடாது’ என்ற இயக்கம் தொடர்ந்த ரீதியில் நடத்தப்படவேண்டிய ஒன்று. கருத்தியல் ரீதியாக இது குறித்து ஒட்டியும் வெட்டியுமான கண்ணோட்டங்கள், காரசாரமான விவாதங்கள், சட்டரீதியான, அரசியல்சாசன ரீதியான பார்வைகள், புரிதல்கள் என்பதாய், மரணதண்டனை கூடாது என்பதை நம் நாட்டில், அதாவது இந்தியாவில்[இந்தியாவைத் தனது தாய்நாடாக சொல்லிக்கொள்வதையே அவமானமாகக் கருதும், கற்பித்துவரும், பிற்போக்குத்தனமாக பாவிக்கும், போதித்துவரும் ’அறிவுசாலிகள்’ நம்மிடையே கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர் என்பதும் கவனத்திற்குரியது] அதிகாரபூர்வமாக நிறுவுவதற்கான முயற்சியில் மனிதநேய ஆர்வலர்கள் இறங்கவேண்டியதும், இயங்கிவரவேண்டியதும் இன்றியமையாததாகிறது.

ஆனால், இன்று இந்த இயக்கம் தற்போது ராஜீவ் காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று பேரை முன்னிறுத்தி நடைபெற்றுவரும் விதத்தில் இந்த சமூக அக்கறை குறித்து கட்சிரீதியாகவும், பிறவேறு காரணங்களினாலும் ‘மரணதண்டனை வேண்டும், வேண்டாம் என்று இருவேறு பிரிவாக கட்சிகட்டிக்கொண்டு நிற்கும் சூழல் நிலவுகிறது.

மூவரின் மரணதண்டனைக்கு எதிராக நடத்தப்படும் கையெழுத்தியக்கங்கள் பலவற்றில் ‘ராஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்டது சரியே’, என்ற வாசகம் அல்லது கருத்து இடம்பெறும்போது காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல, நுண்ணுணர் வுள்ள வேறு பலராலும்கூட அதை ஏற்க முடிவதில்லை. இவ்வாறு ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது தாங்களே என்றும் அதற்கான காரணம் இந்திய அமைதிப்படையின் அராஜகம் என்றும் விடுதலைப் புலிகள் இயக்கம் கூட பிரகடனம் செய்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தப்போரில் 1000ற்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்களும் உயிரிழந்தார்கள்.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட அந்த குண்டுவெடிப்பில் இறந்த இருபதுக்கும் மேற்பட்டவர்களைப் பற்றி, படுகாயமுற்ற பலரைப் பற்றி ஒப்புக்குக்கூட வருத்தம் தெரிவிக்கப்படுவதில்லை. வழக்கு பல்வேறு கட்டங்களைக் கடந்து ‘கருணை மனு’ வரை வந்துவிட்ட நிலையில் ‘இந்த மொத்த வழக்குமே இந்திய அரசால் புனையப்பட்ட ஒன்று’ என்று நிறுவ முனைவது சரியா?

இத்தகைய போக்குகளால் ’உங்களுடைய தலைவர் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டால் நீங்கள் அதை நியாயப்படுத்துவீர்களா?’ என்றவிதமான எதிர்ப்புகள் கிளம்பி மரணதண்டனைக்கெதிரான ஒருமித்த குரல் உருவாவது தடைபடுகிறது.

முதலில் சம்பந்தப்பட்ட மூவரின் மரணதண்டனை நிறுத்தப்பட வேண்டும். அதற்குரிய சட்ட ரீதியான, சமூக ரீதியான [அதாவது, மக்கள் அனைவரும் ஒரே குரலில் மரணதண்டனையை எதிர்ப்பதற்கான] முயற்சிகள் வெற்றிபெறுவதற்கான நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படவேண்டியதே இன்றைய அவசர, அவசியத் தேவை.

மரணதண்டனை கூடாது என்பது குறித்து தன்னுடைய புதினம் ’தி இடியட்’ல் [அப்போதைய கில்லட்டீனை முன்னிறுத்தி] மிக வலுவான வாதங்களை முன்வைத்திருக்கிறார் தாஸ்த்தாவ்ஸ்கி!

மரணதண்டனை வேண்டாம் என்று சொல்லும் நாம் எந்தவொரு உயர்ந்த நோக்கத்திற்காக இருந்தாலும் சரி, உணர்ச்சிக் கொந்தளிப்பில் தனக்குத்தானே தந்துகொள்ளும் மரணதண்டனை யாகிய தற்கொலை மேன்மையானது என்ற கருத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனித மனங்களில் வேரூன்றச்செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் முக்கியம்.

Series Navigationஉறவுகள்மகிழ்ச்சியைத் தேடி…