இருள் தின்னும் வெளவால்கள்

 

காலத்தின் கண்ணியில்

இன்னொரு இரவு

கூடியிருக்கும்.

 

மழையின் இடைவிடா மோகத்தில்

மையிருள் இன்னும்

குழைந்திருக்கும்.

 

மின்னல் வெட்டி

மழை கொளுவி

நிலம் எரிவதாய்த் தோன்றும்.

 

சரமென

இடி இடித்து

கடித்துக் குதறும்

 

குகையை

யார் புரட்டிப் போடுவது?

வெளவால்கள்

கதறும்.

 

தெரிந்த முடிவிலிருந்து

தெரியாத கேள்விக்கு

தயாராகாது

பழகிய இருளில் பரபரக்கும்.

 

இருள் கூடி

இனி

இடி மின்னல் கேள்வி

இல்லையென்று

தளர்த்திக் கொண்டு

தளர் மேனி துவளும் சட்டை போல

அலாதியான இறுமாப்பில்

இருளோடு இருளாய் சேர்ந்திருக்கும்.

 

குகைக்கு வெளியே

கெட்டுக் கிடக்கும்

உலகமென்று

கூச்சலிடும்.

 

இதுவரை விடாது பெய்த

இரவு மழை ஓயத் தொடங்கி

மிச்ச மழையின் கடைசிச் சொட்டு

முடிச்சவிழக் காத்திருக்கும்

புது விடியலில்

சூரியனை முத்தமிட்டுச்

சூல் கொள்ள.

 

குகைக்குள்

வெளவால்கள்

இன்னும் இருளைத் தின்று

மலம் கழித்துக் கொண்டிருக்கும்.

 

 

Series Navigationஅமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின.?மந்திரச் சீப்பு (சீனக் கதை)