உக்ரைன் நாட்டின் சில பகுதிகளை ரஸ்யா கைப்பற்றியதன் எதிர்வினை என்ன?

author
0 minutes, 0 seconds Read
This entry is part 6 of 11 in the series 27 பெப்ருவரி 2022

 

 

குரு அரவிந்தன்
 
கடந்த இரண்டு மாதங்களாக ரஸ்யா – உக்ரைன் எல்லையில் நடக்கும் பிரச்சனை உலகநாடுகளின் கவனத்தைத் திருப்பி இருக்கின்றது. உக்ரைன் எல்லையில் 100,000 மேற்பட்ட ரஸ்யாவின் இராணுவ வீரர்களும், தாக்குதல் வாகனங்களும் குவிக்கப்பட்டிருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். எந்த நேரமும் ரஸ்யா உக்ரைன் மீது படை எடுக்கலாம் என்றதொரு மாயை இதன் மூலம் உருவாக்கப் பட்டிருக்கின்றது. ஊரிலே நடக்கும் வேலிச் சண்டை போல இதுவும் ஒரு எல்லைச் சண்டைதான். இதற்கு முக்கிய காரணம் நேட்டோ கூட்டணியில் உக்ரைன் அங்கத்தவராகச் சேர்வதை ரஸ்யா தனது பாதுகாப்பு காரணங்களுக்காக விரும்பவில்லை. அதை அனுமதித்தால் தங்கள் எல்லையில் நேட்டோ நாடுகள் ஏவுகணைகளை நிலை நிறுத்திவிடுவார்கள் என்ற பயம் ரஸ்யாவுக்கு இருக்கின்றது. எனவேதான் உக்ரைன் மட்டுமல்ல, எல்லைநாடுகள் நேட்டோவில் இணைவதையும் ரஸ்யா விரும்பவில்லை. இதைவிட 2015 ஆம் ஆண்டு நடந்த மின்ஸ்க் உடன்படிக்கையின் தொடராகவே இந்த ரஸ்யா – உக்ரைன் எல்லைப் பிரச்சனை மீண்டும் உருவெடுத்திருக்கின்றது என்றும் சொல்லலாம்.
 
இதன் காரணமாக ரஸ்யா ஏன் படைகளை எல்லையில் குவித்திருக்கிறது என்பதற்கான காரணத்திற்கு ரஸ்யா விளக்கம் கொடுத்திருக்கின்றது. ‘உக்ரைன் மற்றும் முன்னாள் சோவியற்யூனியன் நாடுளில் நேட்டோ ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்த வேண்டும். ரஸ்ய நாட்டு எல்லைக்கு அருகே ஆயுதங்கள் கொண்டு வருவதை நிறுத்த வேண்டும். கிழக்கு ஐரோப்பாவில் இருந்து கூட்டுப் படைகளை விலக்க வேண்டும்’ என்பன போன்ற கோரிக்கைகள் ரஸ்யா நாட்டு அதிபர் விளாடிமிர் புடினால் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
 
ஆசிய நாடுகள் பொருளாதாரத்தில் பின் தங்கியதாக இருந்தாலும், தொழில் நுட்பத்தைக் கடைப்பிடிப்பதில் சில ஆசிய நாடுகள் நன்றாக முன்னேறி இருக்கின்றன. யப்பான்நாடு மேலை நாடுகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல என்பதை இரண்டாம் உலக யுத்தத்தில் காட்டியிருந்தது. அதே போல இப்போது சீனாவும், வடகொரியாவும் தொழில் நுட்பத்தில் முன்னேறிய நாடுகளாகத் தங்களைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட இந்த இரண்டு நாடுகளுடன் ரஸ்யாவும்; இணைந்து கொண்டிருக்கின்றது. இடதுசாரிக் கொள்கை கொண்ட வல்லரசுகளான சீனாவும், ரஸ்யாவும் ஒன்றாகப் பயணிக்கத் தொடங்கினால், என்ன நடக்கும் என்பதுதான் இப்போது எல்லோர் மனதிலும் எழுந்த கேள்வியாக இருக்கின்றது.
 
சமீபத்தில் சீனாவின் தலைநகரான பீஜிங்கில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது ரஸ்யா நாட்டு அதிபர் ஆரம்ப நிகழ்வில் கலந்து சிறப்பித்தது எல்லோர் கவனத்தையும் ஈர்த்திருந்தது. அதேபோல அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற சில நாடுகள் ஒலிம்பிக் முதல்நாள் நிகழ்வைப் பகிஷ்கரித்து இருந்ததும் கவனிக்கப்பட்டது. இது ஒரு விளையாட்டுப் போட்டிபோல இருந்தாலும், அதன் பின்னணியில் அரசியல் கலந்திருந்தது தெளிவாகத் தெரிந்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜெர்மனி, இத்தாலி, யப்பான் ஆகிய நாடுகள் ஒன்றாக, இணைந்து செயற்பட்டது போல, இப்போது ரஸ்யா, சீனா, இரான் ஆகிய நாடுகள் ஒன்றாகப் இராணுவப் பயிற்சி நடத்தி இருக்கின்றன. வெளிப்படையாகவே மேலை நாடுகளுக்குத் தாங்கள் கூட்டு நாடுகள் என்பதை உணர்த்தியிருக்கின்றன. இந்தப் பிரச்சனைகளில் தலையிடாமல் இன்னுமொரு குழுவாகச் சில நாடுகள் ஒதுங்கியே இருக்கின்றன.
 
கடந்த சில மாதங்களாக உலக நாடுகளின் கவனத்தைத் திருப்பி இருக்கும் உக்ரைன் நாடு ஐரோப்பாவின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இதன் வடகிழக்காக  ரஸ்யா இருக்கின்றது. மற்றும், பெலரஸ், போலாந்து சிலோவாக்கியா, கங்கேரி, ருமேனியா, மல்தோவா, கருங்கடல், அசோவ் கடல் போன்றவற்றை உக்ரைனின் எல்லைகளாக இருக்கின்றன. 233,062 சதுரமைல் பரப்பளவைக் கொண்ட உக்ரைன் ரஸ்யாவுக்கு அடுத்ததாக ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய நிலப்பரப்பைக் கொண்டது. இரண்டாம் உலகயுத்தத்தின் போது ஜெர்மனியால் கைப்பற்றப்பட்ட போது நடந்த யுத்தத்தில் 1.4 மில்லியன் உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டனர். கீயிவ் இதன் தலைநகராக இருக்கின்றது. 41.3 கோடி மக்கள் உக்ரைனில் வசிக்கிறார்கள். 100 பெண்களுக்கு 86 ஆண்கள் என்ற எண்ணிக்கையில் இருக்கிறார்கள். 1991 ஆம் ஆண்டு சோவியற்யூனியனில் இருந்து பிரிந்து சுதந்திர நாடாகியது. அரசியலுக்காக 24 மாகாணங்களை 490  மாவட்டங்களாகப் பிரித்து உள்ளுராட்சி அமைப்பு அங்கு நடைபெறுகின்றது. கிரிமியா தன்னாட்சிக் குடியரசாக இருக்கிறது. சேவஸ்தபோல், கியிவ் ஆகியன மாநகராட்சியாக இருக்கின்றன.
 
2004 ஆம் ஆண்டு இங்கே ஒரேஞ்ச் புரட்சி நடைபெற்றது. அரசமொழியாக உக்ரைனியன் மொழி இருக்கின்றது. 87.3 வீதமானவர்கள் கிறிஸ்தவர்கள். இங்கே 17.3 வீதமான மக்கள் ரஸ்ய மொழி பேசுபவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் ரஸ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கக்கூடிய ஒருவரை உக்ரைனின் தலைவராக நியமிக்க முயல்கின்றது. இப்போது ஜனாதிபதியாக வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இருக்கின்றார். 2014 ஆம் ஆண்டு உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியா குடாவை ரஸ்யா கைப்பற்றிக் கொண்டது. அதனால் ரஸ்யாவுக்கும், உக்ரைனுக்கும் பிரச்சனை உருவானது. இதைவிட ரஸ்ய எல்லையில் உள்ள உக்ரைன் மாகாணங்களான லுஹான்ஸ்க், டொனிற்ஸ்க் பகுதிகளில் உள்ள சிலர் ரஸ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களாகவும் இருக்கிறார்கள். இது உக்ரேனுக்குத் தலையிடியாகவும் இருக்கிறது. ரஸ்யாவில் இருந்து உக்ரைன் பிரிந்த போது, உக்ரைன் ஆயுதக் கிடங்கில் இருந்த சுமார் 3000 மேற்பட்ட அணு ஆயுதங்களுக்கு என்ன நடந்தது, பாதுகாப்பாக இருக்கிறதா இல்லையா என்பது இதுவரை உலகிற்குத் தெரியவில்லை.
இது இப்படி இருக்கச் சில நாடுகள் குழுக்களாகப் பிரிந்து இராணுவக் கூட்டுப் பயிற்சிகள் எடுக்கத் தொடங்கித் தங்கள் பலத்தைக் காட்டத் தொடங்கி இருக்கின்றன. உக்ரைன் மீது படையெடுக்க மாட்டோம் என்று ரஸ்யா அடிக்கடி கூறிக் கொண்டாலும், நடவடிக்கைகளைப் பார்க்கும்போது. ஏதோ ஒன்று விரைவில் நடக்கப் போகிறது என்பதை உறுதி செய்ய முடிகின்றது. உக்ரைனைச் சுற்றி ரஸ்ய படைகள் நிலை கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடல் பகுதிகளில் கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றன. செயற்கைக் கோள்கள் மூலம் வானத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங்களிலும் எல்லையில் டாங்கிகள் புடைசூழ இராணுவம் குவிக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
 
 
இதே சமயம் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளமும், இரண்டு முக்கியமான வங்கிகளின் சேவைகளும் இனந்தெரியாதோரால் முடக்கப் பட்டிருக்கின்றன. தற்காலத்தில் போர்முனை நவீன தொழில்நுட்பத்தில் தங்கி இருப்பதால், கட்டளை பிறப்பிக்கும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளமே முடக்கப்பட்டால், போரின் திசை திரும்பிவிடும். உக்ரைனின் கிரிமியாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரஸ்யா, தாக்குதல் நடத்துமானால் முதலில் மேற்கே உள்ள ஹேஸன், ஒடிஸா போன்ற நகரங்களையும், கிழக்கே மெலிட்ரோபோல், மரியுபோல் போன்ற நகரங்களையும் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யலாம். கிழக்கு எல்லையில் உள்ள ரஸ்யா ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் இதற்கு உதவலாம். இதற்கிடையே டொன்பாஸ் நகரில் குண்டுத்தாக்குதல் நடைபெற்றிருக்கின்றது. இது முறுகல் நிலையில் இருப்பவர்களை உள்ளே இழுத்துவிடும் ஒருவித அரசியல் தந்திரமாகத் தெரிகின்றது. லுகான்ஸா கிளர்ச்சியாளர்கள் தமது பகுதியில் உள்ள ஆதரவாளர்களையும் பாதுகாப்பாக ரஸ்யாவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளனர்.
 
உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் ரஸ்ய எல்லைக்கருகே இருக்கும் இரண்டு மாகாணங்களின் கிளர்ச்சியாளர்கள் தங்களை அங்கீகரிக்கும்படி ரஸ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், டுநெட்ஸ், லுகன்ஸ் பகுதிகளை அங்கீகரிக்க ரஸ்யா ஒப்புக் கொண்டிருக்கின்றது. பிரிந்து சென்ற இந்த இரண்டு பிராந்தியங்களின் பாதுகாப்பிற்காக ரஸ்யப்படைகளை அங்கு அனுப்பும் படியும் புதின் உத்தரவிட்டுள்ளார். புதினின் இந்த முடிவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டித்திருக்கின்றார். அதுமட்டுமல்ல, பிரிந்து சென்ற பகுதிகளுக்குப் பொருளாதாரத் தடையும் விதித்திருக்கின்றார். கனடாவும் அப்பகுதிகளுக்கு பொருளாதாரத் தடை விதித்திருக்கின்றது. இதை விட மேலதிக கனடிய அமைதிப் படையையும் லட்வியாவுக்கு அனுப்பி இருக்கின்றது. ரஸ்ய மொழி பேசுபவர்களே இப்பகுதியில் அதிகமாக இருப்பதால், இதுவரைகாலமும் உள்ளேயிருந்து உக்ரைனுக்குத் தலையிடியாக இந்த இரண்டு பிரதேசங்களும் உக்ரேனில் இருந்து பிரிந்தாலும், இந்த முடிவு உக்ரைனின் எதிர்காலத்திற்கு நன்மை பயப்பதாகவே அமையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். ஆனால் இது உக்ரைனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ரஸ்யாவின் முதல் முயற்சியோ தெரியவில்லை!
 
அமெரிக்கா நேரடியாக ரஸ்யாவுடன் மோதப்போவதில்லை, ஆனால் அமெரிக்க பிரஜைகள் பாதிக்கப்பட்டால் கதையே வேறு என்பது போல எச்சரிக்கை விட்டிருக்கின்றது. ரஸ்யா உக்ரைன் மீது படைஎடுத்தால், ரஸ்யாவின் ஜெர்மனியுடனான மிகப்பெரிய திட்டமான ‘நோட் ஸ்ரிம்’ எரிபொருள் காவிக்குழாய்களைத் தடைசெய்யப் போவதாக அமெரிக்கா அறிவித்திருக்கின்றது. இதன் மூலம் ரஸ்யா பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. ரஸ்யா தனது பக்க நியாயத்தை வெளிப்படுத்தி இருக்கின்றது. இரண்டு அமெரிக்கத் தூதுவர்கள் மஸ்கோவில் இருந்து ஏற்கனவே வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள். உக்ரைனில் தங்கியிருக்கும் தங்கள் குடிமக்களை உடனடியாக வெளியேறும்படி அமெரிக்கா உள்ளிட்ட கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற சில நாடுகள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றன. யுத்தத்தின் வலியை இன்னும் அனுபவிப்பவர்கள் நாங்கள், எது எப்படி இருந்தாலும், நிலைமை தீவிரமாக இருப்பதால் யுத்தம் என்று ஒன்று ஏற்பட்டால் இம்முறை உயிர் சேதம் கணக்கிட முடியாமல் போய்விடும், இதன் தாக்கம் உலக நாடுகளையும் பாதிக்கும்.
 
Series Navigationஅயலாள் தர்மினி கவிதைகள் – வாசிப்பு அனுபவம்:  அவதானிப்பின் ஊடாக உணர்வுகளை புரிந்துகொள்ளல்….!மெய்ப்பாடு  
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *