உதிராதபூக்கள் – அத்தியாயம் -3

author
0 minutes, 21 seconds Read
This entry is part 10 of 26 in the series 22 பெப்ருவரி 2015

இலக்கியா தேன்மொழி

சிந்து தனது படுக்கையில் அமர்ந்து, நகங்களை சீராக்கிக்கொண்டிருக்கையில், மாடியில் துணி காய போட்டுவிட்டு வாளியுடன் நுழைந்தாள் கிரிஜா.

‘ஹேய், என்னடீ…இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட?’ என்றாள் ஆச்சர்யமாக.

சிந்து பதிலேதும் பேசாதது கண்டு சற்றே கலவரமாகி, சிந்துவின் அருகில் வந்து அமர்ந்தாள் கிரிஜா.

‘என்னடீ ஆச்சு… மேட்டர் முடிச்சிட்டானா?’ என்றாள்.

சிந்து கிரிஜாவை கண்களில் பார்த்துவிட்டு, நடந்ததை முழுவதும் விவரித்தாள்.

‘நினைச்சேன் சிந்து.. இந்த ஓவர் படிப்ஸெல்லாம் இப்படித்தான் இருக்கும்… நான் அப்பவே சொன்னேன்.. நீ தான் கேக்கலை.. அவன் ரொம்ப ஓவராத்தான் பண்ணியிருக்கான். மனசுல பெரிய மன்மதன்னு நினைப்பு. நிறைய பொண்ணுங்க வந்து பேசுதுல?..அந்த திமிறு.. இவனையெல்லாம் நீ திரும்பியே பாத்திருக்கக் கூடாது.’ என்றாள் கிரிஜா கோபமாக.

சிந்து எதுவும் பேசாமல் அமைதியாக தனது நகங்களை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘சரி சிந்து.. உன் இஷ்டம்..அப்போ வினய் உனக்கு வேணாம்ல?’ என்றாள்.

நகங்களை பார்த்துக்கொண்டிருந்த சிந்து சட்டென திரும்பி,  கிரிஜாவை ஒரு கணம் ஆர்வமுடன் பார்த்தாள்.

‘ஏன் கிரி? நீ ட்ரை பண்ண போறியா?’ என்றாள்.

‘ஏன் கூடாது?.. நீதான் முரளின்னு செட் ஆயிட்டல?’

‘செட் ஆயிட்டேன்னு யாரு சொன்னா? முரளிக்கு ஒரு சான்ஸ் குடுத்தேன். அதை முரளி சரியா பயன்படுத்திக்கலை’

‘அதுனால?’

‘அதுனால, அடுத்த வாய்ப்பை வினய்க்கு தரலாம்ன்னு பாக்குறேன். அதுல அவன் தேறுகிறானா பார்க்கணும்’ என்றாள் சிந்து.

கேட்டுக்கொண்டிருந்த கிரிஜா வெறுமனே ‘ம்ம்ம்ம்ம்’ என்றாள்.

‘சரி கிரி.. நானும் போய் என் துணிகளை துவைச்சு காயப்போட்டுட்டு வந்துடறேன்.. மெஷின் இப்போ ஃப்ரீயா தானே இருக்கு?’

‘ஆமா சிந்து.. சீக்கிரம் போ.. வேற யாரும் வர்றதுக்குல்ல?’

சிந்து எழுந்து பாத்ரூம் செல்ல, கிரிஜாவின் பார்வை, படுக்கையின் மீதிருந்த சிந்துவின் மொபைல் மீது அர்த்தமாக விழுந்தது.

வினய் முக நூலில் இருந்தபோது, லேசான அதிர்வுடன் ஒரு குறுஞ்செய்தி வந்து விழுந்தது.

‘ஹாய்’

எண் புதியதாக இருக்கவே, யாராக இருக்குமென்று ஒரு நொடி ஊகித்து, யார் பெயரும் குறிப்பிட்டு தோன்றாமல்,

‘ஹலோ, இது என்னுடைய புதிய மொபைல். இன்னும் பெயர் கூட வைக்கவில்லை. பழைய போனிலிருந்து தொடர்புகளை இன்னும் மாற்றவில்லை. நீங்கள் யார் என்று நான் தெரிந்துகொள்ளலாமா?’ என்று மிக மிக நாகரீகமாக ஆங்கிலத்தில் பதில் அனுப்பினான்.

உடனேயே பதில் வந்தது.

‘என் கம்மல் காணோம். நீங்க எடுத்தீங்களா?’

வினய் சட்டென பிரகாசமானான். எதையோ டைப் செய்து, சற்று யோசித்து, பின் அதை அழித்துவிட்டு,

‘ஆமா, என்கிட்ட தான் இருக்கு..’ என்று பதில் அனுப்பினான்.

‘ஏன் எடுத்தீங்க?’  மீண்டும் குறுஞ்செய்தி வந்தது.

‘உங்களைப் போலவே அழகா இருந்தது. ஒரு உரையில ரெண்டு கத்தி வேணாம்னு எடுத்துட்டேன்’

அந்தப் பக்கமிருந்து ஒரு புன்னகை வந்து விழுந்தது. தொடர்ந்து,

‘நாங்க ட்வின்ஸ்.. அப்படித்தான் இருப்போம்’ என்றது.

‘நாங்க திருடங்க.. நாங்களும் அப்படித்தான் இருப்போம்’  என்றான் இவன்.

ஒரு புன்னகை கண்ணடித்தது. தொடர்ந்து,

‘என் கம்மலை திருப்பிக் குடுங்க’

‘நான் உங்க கம்மலை உங்ககிட்ட குடுத்துட்டா. உங்க கம்மல் உங்களை என் கிட்ட குடுத்துடுமா?’

‘சோ ஸ்வீட்’

‘ஸ்வீட் வேணாம்.. நீங்க மட்டும் தான்’

‘முதல்ல கம்மலை திருப்பி குடுங்க…அடுத்தவங்க பொருள் உங்களுக்கு எதுக்கு?’

‘அதே தான் நானும் கேக்குறேன்.. அடுத்தவங்க பொருள் உங்களுக்கு எதுக்கு?’

‘நான் எதை வச்சிருக்கேன்?’

‘என் இதயத்தை’

‘என்கிட்ட அப்படி எதுவும் இல்லை’

‘ஓஹோ.. ஏகப்பட்டது வச்சிருகீங்களா.. அப்போ என்னோடது எங்கயாவது ஓரமா இருக்கும்.. கம்மல் தரும்போது நானே தேடி எடுத்துக்குறேன்’

‘எப்ப தரீங்க?’

‘நீங்க எப்ப சொல்றீங்களோ, அப்போ?’

‘சொல்றேன்’ என்று மட்டும் வந்தது இறுதியாக.

வினய் அந்த எண்ணை தனது மொபையில் Love11 என்று பதிவு செய்தான்.

– இலக்கியா தேன்மொழி
(ilakya.thenmozhi@gmail.com)

Series Navigationஅதிர்வுப் பயணம்நினைவுகளைக் கூட்டுவது
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *