உலகம் வாழ ஊசல் ஆடுக

 

வளவ. துரையன்

பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பேரனான கோனேரியப்பனையங்கார் பாடிய “சீரங்க நாயகியார் ஊசல்” எனும் நூலின் முதல் பாடல் சீரங்க நாயகிப் பிராட்டியை இந்த நிலவுலக மக்கள் சிறப்புடன் வாழ அருள் செய்யும் வண்ணம் ஊசல் ஆடுவீராக என்று வேண்டுகிறது. ”தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்ய” என்று ஆண்டாள் நாச்சியார் பாடியதுபோல் இப்பாடலும் அடியவர் நலத்தையே எண்ணுகிறது.

”நீராழி நிறத்த ரங்கர் அடிகள் வாழ

நெடுமகுடப் பணிவாழக் கருடன் வாழப்

பேராழி செலுத்திய சேனையர்கோன் வாழப்

பேய்பூதன் பொய்கைமுதற் பதின்மர் வாழ

ஓராழிக் கதிர்வாழத் திங்கள் வாழ

வும்மடியார் மிகவாழ உலகம் வாழச்

சீராழி சங்குகதை சிலைவாள் வாழச்

சீரங்க நாயகியார் ஆடிர் ஊசல்”

பாடலின் முதலில் பெருமாளை வாழ்த்தும்போது ”கடல் போன்ற நிறமுடையவர்” என்று திருவரங்கர் குறிப்பிடப்படுகின்றார். பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் அவனும் கடல் போல நீலநிறத்தவன்தானே? பூத்தாழ்வார் தன் மனத்துக்குக் கூறும்போது ’மனமே! திருப்பாற்கடலான பேராழியிலிருந்து எழுந்து வந்து தேவர்களுக்காக அக்கடலைக் கடைந்த நீலநிற வண்ணனான பெருமானையே சிந்தித்திருப்பாயாக’ என்று திருமாலின் நீல நிறத்தைக் காட்டி அருள்வார்.

”மதிக்கண்டாய் நெஞ்சே மணிவண்ணன் பாதம்

மதிக்கண்டாய் மற்றவன் பேர்தன்னை—மதிக்கண்டாய்

பேராழி நின்று பெயர்ந்து கடல்கடைந்த

நீராழி வண்ணன் நிறம்           [இரண்டாம் திருவந்தாதி-51]

அடுத்து எம்பெருமானுக்குப் பாயலாகவும், குடையாகவும், சிங்காசனாமாகவும் விளங்கும் ஆதிசேஷனைக் காட்டி வாழ்த்துகிறார். நீண்ட முடி உடைய ஆதிசேஷன் எனும் பொருளில் ’நெடுமகுடப் பணி’ என்று பாடுகிறார். பெரியாழ்வார் திருமாலிருஞ்சோலையை மங்களாசாசனம் செய்யும்போது, ”ஆயிரம் தோள்களைப் பரப்பிக் கொண்டு, ஆயிரம் திருமுடிகளும் ஒளி வீச, ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்ட பெருமாள் விரும்பி வாழும் மலை” என்று அதைக்குறிப்பிடுகிறார்.

 

”ஆயிரம் தோள்பரப்பி முடியாயிர மின்னிலக

ஆயிரம் பைந்தலைய அனந்த சயனனாளும் மலை

ஆயிரம் ஆறுகளும் சுனை பலவாயிரமும்

ஆயிரம் பூம்பொழிலும் உடை மாலிருஞ்சோலையதே” [4-3-10]

எம்பெருமானின் ஊர்தியான கருடாழ்வார் அடுத்துப் போற்றப்படுகிறார். பல ஆழ்வார் பெருமக்கள் அஞ்சிறைப் புள்ளான கருடனைப் பாடியிருக்கிறார்கள். பேயாழ்வார் ‘மகாலட்சுமியானவள் பொருந்தி இருக்கக் கூடிய திருமார்பை உடையவனும், கருடனால் மேற்கொள்ளப்பட்டவனுமான கருநிறப்பெருமாளுடைய திருவடிகளே பக்திக்கு விஷயமென்று தெளி என்றுதன் நெஞ்சிற்குத்’ தெரிவிக்கிறார்.

”பொலிந் திருண்ட கார்வானில் மின்னேபோல்

மலிந்து திருவிருந்த மார்வன்—பொலிந்த

கருடன் மேல்கொண்ட கரியான் கழலே

தெருடன்மேல் கண்டாய் தெளி” [மூன்றாம் திருவந்தாதி-57]

அடுத்து நித்ய சூரிகளுக்குத் தலைவராக விளங்கும் சேனையர் கோன் எனப்படும் விஷ்வக்சேனரை வாழ்த்தியபின் ஆழ்வார் பதின்மரைக் குறிப்பிட்டு, அவர்களை வாழ்த்தியபின், ஒற்றைச் சக்கரத் தேர் கொண்ட சூரியன், சந்திரன் இம்மண்ணுலகம் எல்லாம் வாழ வேண்டும் என்று கோனேரியப்பனையங்கார் போற்றுகிறார்.

இறுதியில் எம்பெருமானின் “ஆழி, சங்கு, கதை, சிலை, வாள் எனும் பஞ்சாயுதங்களுக்கும் பல்லாண்டு பாடப்படுகிறது. திருமாலின் இந்த ஐந்து படைக்கலங்களையும் ஆழ்வார்கள் பல அருளிச்செயல்களில் அனுபவித்துள்ளனர்.

குறிப்பாகப் பெரியாழ்வார்,

”ஒண்சுடர் ஆழியே! சங்கே! அறவெறிநாந்தகவாளே! அழகிய சார்ங்கமே! தண்டே! [5-2-9] என்றும்,

பெருமாள் திருமொழியில் குலசேகரப் பெருமாள்,

“கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்

”கொலைஆழி கொடுந்தண்டு கொற்ற ஒள்வாள்” [1-8] என்றும்

திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தத்தில்,

”ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்” [106] என்றும்,

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில்,

”வாளும் வரிவில்லும் வளை ஆழிகதை சங்கம் இவை அங்கை உடையான்” [5-10-5] என்றும்,

நம்மாழ்வார் திருவாய்மொழியில்,

”வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கும்’ [5-5-3] என்றும்

அருளிச் செய்துள்ளனர்

ஒருங்கே நோக்குமிடத்து ஆழ்வார் பெருமக்களின் அருளிச்செயல்கலையும் சீரங்க நாயகியார் ஊசலின் முதல் பாடலையும் இப்படி ஒப்பிட்டு எம்பெருமானை நாம் எண்ணி என்ணி மகிழ முடிகிறது.

Series Navigationதொல்காப்பிய அகத்திணையியலில் இளம்பூரணர் உரைவழி தமிழர் அகம்சார் சிந்தனைகள்உதிராதபூக்கள் – அத்தியாயம் 6