ஊர்மிளைகளின் உலகங்கள்[இலக்குமிகுமாரன் ஞானதிரவியத்தின் “தீயரும்பு” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து]

 

நமது மரபே கதைசொல்லல்தான். பின்எழுத்து வடிவம் வந்தபோது கதைகள் எழுதப்பட்டன. இப்பொழுது நிறைய சிறுகதைகள் வருகின்றன. அவற்றில் வடிவங்களிலும் கருப்பொருள்களிலும் மாறுபட்டிருப்பவையே நம் கவனத்தைக் கவர்கின்றன. கதை எழுதும் முறையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சிறுகதைகளைக் காட்சிகள் வழியாய்க் கவனப்படுத்தி நகர்த்தலாம். உரையாடல்கள், வருணனைகள் மூலமாகவும் ஒருகதையைச் சொல்லிக் கொண்டு போகலாம். ஆனால் இலக்குமிகுமாரன் மன உணர்வுகளாலேயே ‘மருள் கதையை நகர்த்திக்கொண்டு போகிறார்.

கதையில் இரண்டே பாத்திரங்கள்தாம். உரையாடல்களும் சற்றுக் குறைவுதாம். கதையில் அளவுடன் பின்னோக்கு உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது கதையை மேலும் விறுவிறுப்புக்குள்ளாக்குகிறது. ரெங்கசாமிக்குப் பெண்பார்த்து நிச்சயம் செய்து திருமணத்திற்குத் தேதியும் குறித்துவிட்டுச் செத்துப் போகிறாள் அவன் அம்மா. திருமணமாகி எல்லாரும் அவரவர் ஊருக்குப் போனதும் முதல் இரவன்று ரெங்கசாமி, புது மனைவியுடன் இருக்கிறான். அவன் நினைவுகளில் கதை வளர்கிறது. அம்மா பற்றியவை, புதிதாய் வந்திருக்கும் அவன் மனைவி பற்றியவை என்று நினைவுச் சரடு மாறி மாறி நீண்டு கொண்டே போகிறது.

அன்றுகூட அவன் அம்மாவையே எண்ணிஎண்ணி உருகிக் கடைசியில் புதுமனைவியுடன் கலக்கப் போகிறான். திடீரென அறையைவிட்டு வெளியே வந்து அழுதுகொண்டே ஓடி வருகிறான். போர்வைகளை எடுத்து உடம்பு முழுதும் போர்த்துக்கொண்டு படுக்கையின் மீது விக்கித்து நிற்கிறாள் புது மனைவி. கதை முடிகிறது. ”மரணவாசனை அம்மாவின் மீதிருந்து வரத் தொடங்கியதை ரெங்கசாமி உணரத் தொடங்கினான்” என்றெழுதுகிறார் இலக்குமிகுமாரன். ‘மரணவாசனை’ என்பது அற்புதமான புது சொற்றொடர். அது உணர்ந்தவர்களுக்கும் அல்லது அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் மட்டுமே தெளிவாகக் கூடியது. எந்த அளவுக்கு ரெங்கசாமியிடம் அம்மாவின் தாக்கம் இருந்தது என்பதையும் இறுதிவரை அவனுக்கு அது ’மருள்’ தந்ததையும் கூறுகிறது ’மருள்’ சிறுகதை.

தமிழ்நாட்டில் சிறுவயதுமுதலே கடவுள் பற்றிய நம்பிக்கையும், பயமும் பாலில் கலந்தே ஊட்டப்படுகின்றன. அதுவும் பெரும்பாலும் கருப்பண்ண சாமி, காத்தவராயன், முனீஸ்வரன், மாரியம்மன், பச்சை வாழியம்மன், அங்காளம்மன் போன்ற சிறுதெய்வ வழிபாடுகளாகவே அவை இருக்கின்றன. அப்படி ஊட்டப்பட்டவன்தான் ‘சிறைப்பாடு’ கதையில் வரும் நரேந்திரன்.

கதவுகூட இல்லாமல் ஓட்டுக்கூரை வீட்டுக்குள் இருந்த சாமி காத்தவராயன்தான் அவனின் குலதெய்வம். அந்தக் காத்தவராயன் சாமிக்குக் கோயில் கட்டப்பட்ட பிறகு அது குருக்களின் கைகளுக்கு வந்துவிடுகிறது. கடைசியில் சாமி கும்பிடப் போன நரேந்திரனுக்கும் சாமிக்கும் இடையில் கம்பிக் கதவுகள் வந்து விடுகின்றன. அவன் வெளியில் நிறுத்தப்படுகிறான். இத்தனைக்கும் அவன் அந்தக் காத்தவராயனின் மடி மேல் அமர்ந்து விளையாடியவன்.

வசதியும், வருமானமும் வந்த பிறகு சிறுதெய்வ வழிபாடு என்பது எப்படி பெருதெய்வ வழிபாடாக மாற்றப் படுகிறது என்பதை கதை மறைமுகமாக உணர்த்துகிறது. அத்துடன் அச்செயலுக்கு நம்மவர்களே காரணமாயிருக்கின்றனர் என்ற கவலையையும் காட்டுகிறார் ஆசிரியர். என்னுடைய “தேரு பிறந்த கதை” ஜெயமோகன் தொடக்க காலத்தில் எழுதிய “மாடன் மோட்சம்” கதையும் இந்த வகையைச் சார்ந்தவை என்பது நினைவுக்கு வருகிறது.

நவீன உலகு பொருள் சார்ந்ததாய் மாறிவிட்டது. வாழ்வுக்குப் பொருள் என்பது மிக முக்கியமானதாக மாறிவிட்ட சூழலில் சில நெறிமுறைகள் காற்றில் பறக்கவிடப் படுகின்றன. பொருள் வழிப் பிரிதல் என்பது சங்ககாலக் கோட்பாடுதான் என்றாலும், இன்று பணத்தின் மீது அபரித ஆசை ஏற்பட்டுக் கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள் ஆகியோரை விட்டு விட்டுக் கணவர்கள் திரைகடலோடியும் திரவியம் தேடுகிறார்கள்.                மனைவிகளைக் கனவுலகில் மிதக்க விட்டுவிட்டு அவர்கள் வெளிநாடுகளில் சஞ்சரிக்கிறார்கள். இந்த மாதிரி நிலவும் தற்காலச் சூழல் எங்குபோய் முடியும் என்பதை “ஊர்மிளைகள்” கதை வெளிப்படையாகவே சில பாத்திரங்கள் வழி காட்டுகிறது.

பருவ வயதாகியும் திருமணமாகாத சில வாலிபர்களின் மன அவத்தைகளைத் தன் ’சேவல் பண்னை’ என்னும் குறுநாவலில் காட்டியிருப்பார் பாலகுமாரன். திருமணமாகிக் கணவன் அயல்நாடு போய்விட, இலக்குவன் விட்டுவிட்டுப் போன ஊர்மிளையின் நிலையில் இருக்கும் சில பெண்களின் சூழலைக்காட்டுகிறது ‘ஊர்மிளைகள்’ சிறுகதை. இதன் போக்கு சற்று அதிர்ச்சி அளிக்கக் கூடியதுதான் எனினும் உண்மை சுடுமன்றோ? கவலைகளும், காமமும் அளவுக்கு மீறிப்போக அவற்றுக்கு வடிகாலாய்ப் பெண்களும் குடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இப்போது நவநாகரிகச் செல்வக் குடும்பங்களில் இலைமறைவாகக் காய் மறைவாக இருப்பதை வடித்துக் காட்டி இலக்குமிகுமாரன் எச்சரிக்கை மணி அடிக்கிறார்.

தொகுப்பின் மிகச் சிறந்த கதை ‘துளிர்’. கிராமத்தின் மொழி, சகோதரர்களுக்குள் சொத்துப் பங்கீடு, அதில் விளையாடும் மன ஊசல்கள் என்று பலவற்றை உணர்த்திக் கதை யதார்த்தமாகச் செல்கிறது. ஒரு கடிதத்தின் வாயிலாகக் கதை சொல்வது ஒருவகையில் புதுமையாக இருக்கிறது. வருங்காலத் தலைமுறையாவது சூழலை யோசிக்க வேண்டும் என்று கதை வேண்டுகிறது. கிராமங்களில் சொத்துக்களினால் உறவுகள் எவ்வளவு காயப்படுத்தப்படுகின்றன என்பது தெளிவாகப் புரிகிறது.

’மருள்’ கதையின் புதுமணப்பெண் கூட ஊர்மிளைதான் ஒருவிதத்தில்; ரெங்கசாமியான இலக்குவன் அருகே இருந்தும் அடைய முடியாதவள். மகனின் படிப்புக்கு இரண்டு லட்சம் செலுத்தி வெற்றிடத்தை உணர்ந்து ஒரு விடியலுக்குக் காத்திருக்கும் சுந்தரேசன் கூட ஊர்மிளைதான். உண்ணி பற்றி அறிய ஆவலாய் இருப்பவனும் ஊர்மிளைதானே! காமாட்சியம்மனும் காத்தவராயனும் கம்பிக்கதவுகளுக்குப் பின்னாலிருந்து எப்போது வருவார்கள் என எதிர்பார்க்கும் நரேந்திரன் மட்டும் யாராம்? ஊர்மிளை என்பது இப்பொழுது குறியீடுதான். ஊர்மிளை என்றாலே காத்திருத்தல்தான். காமமோ, பண்பாடோ, கல்வியோ, அன்போ எதற்காகவோ பல பாத்திரங்கள் இத்தொகுப்பில் பல்வேறு சூழல்களில் காத்திருக்கிறார்கள்.

இலக்குமிகுமாரனின் சிறுகதை நடையைப் பற்றிச் சொல்ல வேண்டும். பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு தோள்மீது கைபோட்டுக் கதை சொல்லும் நடை அது. சரியான கிராமத்துச் சொலவடைகள், புழங்கு மொழிகள், எள்ளல்கள் எல்லாம் அதில் இருக்கும். அதே நேரத்தில் கனமாகவும் இருக்கும் என்பதற்கு “எண்ணெய்க் கிணறுள்ள நாடுகளைச் சுற்றி வட்டமடிக்கும் வல்லரசுகளைப் போலப் பறந்துவந்து வட்டமடித்து வடைகளைக் கவ்விக்கொண்டு போனதுமில்லாமல் உச்சந்தலையில் இரண்டு கொத்து கொத்திப் போன அண்டங்காக்கை” என்பது ஓர் எடுத்துக்காட்டு.

சிறுகதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தளங்களில் மாறிமாறி இயங்குவது படிக்கக் களைப்பில்லாமல் உற்சாகமாக இருக்கிறது. உண்மையில் வெற்றி பெற்ற வித்தியாசமான தொகுப்புதான் இது.

[தீயரும்பு—சிறுகதைத்தொகுப்பு—-இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்—வெளியீடு:  அய்யா நிலையம், 10, ஆரோக்கிய நகர் முதல் தெரு, E.B காலனி, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர்—613 006—பக்: 160; விலை : ரூ 150]

 

Series Navigationஇலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம், கடலூர்மரணம்