எதிர்பாராதது

Spread the love

வலையில் விழுந்த வண்டு
சிலந்தியைத் தின்றது

கிழட்டுச் சிங்கம்
தலையில் கழுகு

புலிக்குத் தப்பிய முயலைப்
பாம்பு செரித்தது

கவிதைப் போட்டி
வள்ளுவன் தோற்றான்

விழுதுகள் சுருண்டன
ஆல் சாய்ந்தது

மழை கேட்டது மல்லி
பிடுங்கிப் போட்டது புயல்

வெள்ளத்தில் தாமரை
மூர்ச்சையாகிச் செத்தன

கூட்டில் மசக்கைக் குருவி
சுற்றிலும் காட்டுத் தீ

பாரம்பரிய வைர அட்டிகை
பாஷா கடையில்

இலையுதிர் காலம் முடிந்தது
தொடர்கிறது இன்னொரு
இலையுதிர் காலம்

காலைப் புற்களில்
கதிரொளி பட்டதில்
பொசுங்கின புற்கள்

நான் தீட்டிய மோனலிசா
அழுகிறாள்

விதவையாக
ஓர் இரவு வானம்

எதிர்பாராததை எதிர்பார்
ஏமாற்றமே இல்லை

அமீதாம்மாள்

Series Navigationஎன்னோடு வாழ வந்த வனிதை மூலம் : பீட்டில்ஸ் பாடகர்பார்த்தேன் சிரித்தேன்