என்னை ஆட்கொண்ட இசையும், நானும்

author
0 minutes, 8 seconds Read
This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013

அரவக்கோன்

சிறுவயது முதலே இசைச் சூழலில் வளர்ந்த நான் அதைக் கற்கத் தேர்ந்தெடுக்காதது எப்படி என்று பிறரால் வினவப்படும்போது தக்க பதில் தெரியாமல் தவித்ததுண்டு. இளமையில் எப்போதும் கிட்டும் பொருள்கொண்டு விரல்களால் தாளங்களை தோன்றிய விதமாய் தட்டிக்கொண்டிருப்பது எனக்கு உற்சாகமான பொழுதுபோக்கு. வீட்டில் பெரியவர்களுடன் அனைத்து இசை நிகழ்ச்சிகளுக்கும் தவறாது சென்று வருவேன். மாலையில் ஒரு குழுவாகக் கிளம்பி மயிலாப்பூர், லஸ் போன்ற இடங்களில் அவ்வப்போது நிகழும் இசை நிகழ்ச்சிகளுக்கு சென்று இரவில் நடந்தே திரும்புவது என்பது உற்சாகமானதாகவே இருந்தது. அப்போது நாங்கள் அடையாரில் பெசன்ட் பள்ளி வளாகத்தில் வசித்துக்கொண்டு இருந்தோம்.
பெசன்ட் பள்ளியில் இசை வகுப்பு என்பது வாரத்தில் மூன்று நாட்கள் (நாற்பத்து ஐந்து நிமிடம்) பாட அட்டவணையில் (periods) இருக்கும். பத்து (பத்மாசனி) டீச்சர் வகுப்புக்கு வந்து கற்பிப்பார். பலமொழிப் பாடல்களை கரும்பலகையில் எழுதி, உச்சரிப்பை திருத்தி, சுருதியுடன் பாடுவதற்கு சொல்லிக்கொடுப்பார். எனது குரல் உடையும் வரை பாடுவது தொடர்ந்தது.
1970இல் பணி சார்ந்து பாண்டிச்சேரி சென்றபோதும் இசை நிகழ்ச்சிகள் கேட்பது தொடர்ந்தது. ஆனால் அதன் நுணுக்கங்கள் எப்போதுமே எனக்குப் புரிந்தது கிடையாது. பல பாடல்களின் முதல் வரி அல்லது பல்லவி மட்டுமே தெரியும். ராக ஆலாபனையின்போது அதன் பெயர் தெரியாமலேயே அதில் லயிப்பதுண்டு. 1981 இல் நான் ஒரு ரேடியோ வாங்கினேன் அதில் இசையை நாடாவில் பதியும் வசதியும் இருந்தது. அப்போதெல்லாம் வானொலி இதழ் மாதம் இருமுறை வெளிவரும். நிகழ்ச்சிகளின் விவரங்கள் இசைக் கட்டுரைகள், இசைக்குறிப்புகள் போன்றவை அதில் இருக்கும். பாடகர் பாடப்போகும் பாடல்களின் பெயர் அது சார்ந்த மற்ற விவரங்கள் எனக்கு நிகழ்ச்சிகளை கேட்கும்போது மிகவும் உதவியாக இருந்தன. ஒலிநாடாவில் இசையைப் பதிவு செய்வது என்பது அதிகரித்து அதற்கான செலவும் கூடத் தொடங்கியது. வானொலி இசை நிகழ்ச்சிகளை பாதுகாக்கத் தொடங்கியது அப்போது முதல்தான். கும்பகோணம், சென்னை என்று இடம் மாறிய போதும் அது நிற்கவில்லை. ஒலி நாடாக்களின் எண்ணிக்கை 200 யும் தாண்டியது.  குறுந்தகடு வந்தபின் அனைத்து ஒலி நாடக்களின் இசை நிகழ்ச்சிகளும் mp3 உருவத்தில் பதியத் தொடங்கினேன். தொடக்கத்தில் அதற்கு நிறையவே செலவு செய்தேன். பின்னர் ஒரு நண்பரின் உதவியால் நானே அந்த முறையைக் கற்றுக் கொண்டேன்.
இன்று என்னிடம் ஒரு குட்டி இசை வங்கியே உள்ளது. அவற்றின் அனைத்து விவரங்களையும் கணினியில் தட்டச்சு செய்து குறுந்தகட்டில் பாதுகாத்துள்ளேன். இப்போது சுமாராக ஒரு இருபது ராகங்கள் உடனே அடையாளம் தெரியும். Mp3player என்னும் இசைப்பேழை வாங்கியபின் தினசரி காலை நடைபயிற்சி என்பது இசையுடந்தான் நிகழும். இரவில் படுத்து தூங்கும் முன்னரும் இசைப்பேழையில் சங்கீதம் கேட்பது வழக்கமாகி விட்டது. நான்  M.D.ராமநாதன், மதுரை சோமு, வோலேட்டி வெங்கடேஸ்வருலு மூவருடைய இசையிலும் என்னை இழப்பதுண்டு.
கச்சேரிகளில் நாம் காணக்கூடிய சில பொதுவான அம்சங்கள் உண்டு. அது நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர் பற்றியதுதான். சிலர் பையில் புத்தகங்கள், ஒரு நோட் புத்தகம், பேனா சகிதம் வருவார்கள். இவர்கள் பயிலும் மாணவர்கள் அல்ல. எல்லா நிகழ்ச்சிகளிலும் தவறாமல் வித்வான் பாடும் பாடல், அதன் மற்ற விவரங்களைத் தமது நோட்டில் தேதி, நிகழ்ந்த இடம், போன்ற குறிப்புகளுடன் வருடக் கணக்கில் பதிவு செய்து இருப்பார்கள். இன்னும் சிலர் வித்வான் பாடும் போதும் ராக ஆலாபனையில் திளைக்கும்போதும் தாமும் நமக்குப் பக்கத்திலோ பின்புறமோ அமர்ந்து கூடவே மெல்லிய குரலில் பாடி தமது சங்கீத ஞானத்தை உறுதிப்படுத்திக் கொள்வார்கள். சிலர் ராக ஆலாபனை முடியுமட்டும் காத்திருந்து வித்வான் பாடலைத் தொடங்கியவுடன் பையிலிருந்து ஒரு புத்தகத்தை உருவுவார்கள். அது பாடல்களும் அவற்றின் ராகமும் கொண்ட பட்டியல் புத்தகமாயிருக்கும். அதில் அந்தப் பாடலைத் தேடி, ராகம் கண்டுபிடித்து நோட்டில் எழுதுவார்கள். இதற்குள் வித்வான் பாடலில் சரணத்துக்கு வந்து கற்பனை ஸ்வரங்களில் உலாவிக் கொண்டிருப்பார். தமது அருகிலிருப்பவர்களிடம் ராகம் கேட்பவர்களும் உண்டு. எனக்குப் பல ராகங்களின் பரிச்சயம் கிடையாது. ஏதோ ஒரு பத்து பிரதான ராகங்களை கொஞ்சம் சிரமம் இல்லாமல் அடையாளம் தெரிந்து கொள்வேன். யாராவது இம்மாதிரி என்னிடம் ராகத்தின் பெயரைக் கேட்டு சிரமப்படுத்தியதும் உண்டு.
இன்னும் சிலர் தமது அந்த நாளைய நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்குவர், நடு நிகழ்ச்சியில். அவர்களுக்கு எப்போதும் அன்றையக் கச்சேரியை அந்த நாளையக் கச்சேரி ஒன்றுடன் இணைத்து தமது இசை அறிவை சொல்ல வேண்டும். டி.வி.சங்கரநாரயணன் கச்சேரி ஒன்று முடிந்தவுடன் அவரிடம் வந்து ‘உங்க மாமா மணி ஐயர் பாடி நிறையக் கேட்டிருக்கிறேன். இன்றும் அவர் இசையைக் கேட்பதுபோல் இருந்தது’ என்று கூறி அது புகழ்ச்சியா நக்கலா என்று நம்மை குழப்புபவர்களும் உண்டு.
சில நாட்களுக்கு முன் ஹிந்துவில் (ஆங்கிலம்) புகழ்மிக்க சில நேற்றைய இசைக் கலைஞர்கள் தங்கள் பிறப்புகளை இசையைத் தொழிலாகக் கொள்ள அனுமதிக்கவில்லை என்னும் செய்தியைப்படித்தேன். (ஜி,என்.பி., பாலக்காடு மணிஐயர்) அப்போது எனக்குத் தோன்றியது, சில இசைக் கலைஞர்கள் தங்களது பிள்ளை/பெண்களை கவனமாக மேடையேற்றி இசைத்தொழில் செய்ய வைத்தார்கள். (லால்குடி, எம்.எஸ்.ஜி, என்று பட்டியல் நீளும்) அவர்களுக்கும் அனேக சீடர்கள் உண்டு என்றாலும் மேடையில் தங்களுடன் அவர்களை இசைக்க அனுமதிக்க வில்லை என்பதே செய்தி. ஆங்காங்கே (வாரிசு இல்லாத) தமது சீடர்களை தங்களுடனேயே மேடைதோறும் கூட்டிச்சென்ற இசைமேதைகளும் இருக்கத்தான் செய்தார்கள்..
கர்நாடக இசை நிகழ்ச்சிகளில் உள்ள கட்டமைப்பிலிருந்து விலகி புதிய உத்திகளைப் புகுத்துவது என்பது பாலமுரளி கிருஷ்ணா, குன்னக்குடி இருவரும் தொடங்கி வைத்தது என்று தோன்றுகிறது. பாலமுரளி நிகழ்ச்சியின் நடுவில் இடைவேளை அறிவித்துக் கேட்போரைப் புருவம் தூக்க வைத்தார். குன்னக்குடி வலையப்பட்டியாருடன் இணைந்து தவிலுக்கு வயலின் வாசித்தார். அவரும் நிகழ்ச்சியை இரண்டாகப் பிரித்துக்கொண்டு பின்பாதியில் மக்கள் விரும்பும் மெல்லிசை, சினிமாப் பாடல்கள் என்று அரங்கை அதிர வைத்தார்.  கனராகங்களைக்கூட கரணம்போட்டு வாசித்து கைதட்டல் பெற்றார். இருவரும் கேட்போருக்குத் தங்கள் மேதமையில் கொஞ்சம்போல் கிள்ளிப் போட்டார்கள். சீர்காழியாரும் நிகழ்ச்சி நிரலில் கனமான இசை, பக்தி இசை முடிவில் சினிமா பாடல்கள் என்று முறைப்படுத்திக் கொண்டார். சோமு நிகழ்ச்சியின் முடிவில் குறிப்பிட்ட தமிழ்ப் பாடல்களை தவறாமல் பாடிக் கேட்கும் கூட்டத்தைக் களியாட்டம் போட வைத்தார். (என்ன கவிபாடினாலும்) அப்புறம் இருக்கவே இருக்கிறது ஜுகல்பந்தி மற்றும் தாள வாத்திய கச்சேரி. திருவாவடுதுறையாரே ஒத்து வாத்தியத்தை ஒதுக்கிவிட்டு ஸ்ருதிப் பெட்டி வைத்துக் கொண்டார். அப்புறம் நாதஸ்வரத்துக்கு வயலின் என்று புதுமைப் பட்டியல் நீளும்.
நமது உண்ணும் உணவை (தமிழ்நாட்டுப் பழக்கம்) குழம்பு, ரசம், மோர் என்னும் வரிசையில் பரிமாறும் வழக்கம் எப்போது ஏற்பட்டதோ தெரியவில்லை. அதை மாற்றி மோர், ரசம், குழம்பு என்று யாரும் உண்பதில்லை என்றே நம்புகிறேன். இசையும் எனக்கும் என்போன்ற பலருக்கும் அப்படித்தான் வேண்டியிருக்கிறது. வர்ணத்தில் தொடங்கி, வினாயகர்மேல் ஒரு கிருதி என்று தொடரும் கச்சேரியைக் கேட்கும்போது பலமுறை சென்ற பாதையில் போகும் சுகத்தை கொடுக்கிறது. இசை நிகழ்ச்சிகளில் பாடுபவருக்கும் பக்க வாத்தியம் வாசிப்பவருக்கும் ஒரு மன ஒற்றுமை ஏற்பட்டுவிட்டால் அன்று நிகழ்ச்சியைக் கேட்போருக்குப் பெரும் பேறுதான். அது கலைஞர்கள் சமமான திறமையும் புகழும் உள்ளவர்களாக இருந்துவிட்டால் இன்னும் சுகம்.
அடுத்தது பக்க வாத்தியங்களின் இடம். வயலின், மிருதங்கம் போனால் போகிறது என்று கடம்-கஞ்சிரா இரண்டில் ஒன்று (உப-பக்கவாத்தியம்) போன்ற பக்க வாத்தியங்களுடன் கச்சேரிகள் நடந்தன. சோமு, குன்னக்குடி, சீர்காழி போன்றோர் பல இசைக் கருவிகளின் துணையுடன் (அதை முழுமேடை full bench என்பார்கள்) ஒரு கூட்டமாக மேடையில் இடித்துப்பிடித்துக் கொண்டு அமர்களப் படுத்தினார்கள். தபலா டோலக் எல்லாம்கூட இடம் பெற்றதுண்டு. அதுவும் கோயில், பொதுத் திடலில் என்றால் ஆங்காங்கே கம்பத்தில் கட்டியிருக்கும் கூம்பு ஒலிபெருக்கியில் அனைத்தும் கலந்து பேரோசையாகக் காதில் இறங்கும்.
இப்போதெல்லாம் கலைஞர்கள் தங்களது ஒலிபெருக்கியின் ஒலியைக் கூடுதலாக்கும்படி தொடர்ந்து வற்புறுத்துவதும் அதனால், பாடுபவரின் குரலே பின்தள்ளப் படுவதும், இயல்பாகிவிட்டது. கேட்போருக்குக் கேட்கும் திறமைக் குறைவோ என்னும்படி ஒலி காதில் வந்து அடிக்கிறது. இதனால் இசையில் இனிமைபோய் ஹிம்சை வந்து சேரும். சிலசமயம் வளரும் பாடகருக்கு மூத்த பக்க வாத்தியம் அமைந்துவிடும். (அது வேண்டிப் பெற்றதுதான்) அப்போது இசைப்பவரின் மையம் மூத்தவருக்குப் போய்விடும். பாடகர் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அசட்டு முகத்துடன் பாடுவதைப்பார்த்தால் பாவமாக இருக்கும். அம்மாதிரிக் கச்சேரிகளை பாடகரே பதிவு செய்வதும்கூட கடினம்தான். (‘பப்ளிக்கா யூஸ்பண்னக்கூடாது’ என்னும் அறிவுறுத்தலும் இருக்கும்)
பாடகர் தனது நிகழ்ச்சிக்குத் தேர்ந்தெடுக்கும் பாடல்களின் மொழி சார்ந்த சர்ச்சை தமிழ் இசை உலகை எப்போதும் உலுக்கும் ஒன்றுதான். கேட்போருக்கு அந்தப் பாடல்களின் வரிகள் முன்னரே தெரிந்திருப்பின் பாடுபவரைத் தொடரலாம். தெரியாவிட்டால்? பாடல்களை தெரிந்துகொண்டுதான் இசைக் கச்சேரிக்குப் போவது என்பது முடியுமா? அவர் பாடும்பாடல் தமிழேயானாலும் நமக்கு விளங்கிவிடுகிறதா என்றால் இல்லை. மொழி வேறு, பாடல்களைப் புரிந்துகொள்வது என்பது வேறு. அதற்குப் பயிற்சி வேண்டும். பாடகர் திரும்பத் திரும்ப பாடிய பாடல்களையே பாடுகிறார்  என்றும் குறை உண்டு.(அந்நாளில் பாரதியாரும் இதை ஒரு குறையாகச் சொல்லியிருக்கிறார்) நான் நினைப்பது பாடலை பாடுபவர் எல்லோருமே என்ன பாடல் இயற்றும் திறமை கொண்டவராக இருக்கமுடியுமா? பாடலை புனைபவர் எல்லோருமா அவற்றை தாமே பாடுகிறார்கள்? வாக்கேயக்காரர் என்று குறிப்பிடப்படும் சிலர்மட்டுமே தாமே பாடலை படைத்து அதைப் பாடும் விதத்தை ராகத்திலும் தாளத்திலும் முறைப்படுத்தி தமது சீடர்களிடம் ஒப்படைத்துள்ளார்கள். இன்று நம்மிடையே வாழும் பாலமுரளி அப்படிப் பட்டவர்தானே? சிலர் பாடுவதை மட்டும் தமது எல்லையாக வைத்துக்கொண்டார்கள். சிலர்பாட்டையும் படைத்தார்கள். அவற்றைத்  தாமே பாடவும் செய்தார்கள்.
சங்கீத மும்மூர்த்திகள் என்று குறிப்பிடப்படும் மூவரும் சமகாலத்தவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தியாகராஜ ஸ்வாமி தமது இஷ்டதெய்வமான ராமனை எதிரில் அமர்த்திப் புகழ்ந்தார், கோபித்தார், கெஞ்சினார், வசைகூடப்பாடினார். அவருக்கு ராமர் ஒரு தோழன்போல. ஸ்யாமா ஸாஸ்திரிகளுக்கு காமாட்சிதான் எல்லாம். இப்படி அப்படி அதிலிருந்து நகரவில்லை. எப்போதும் தன்னை காப்பாற்றும்படி இறைஞ்சுவார். அதிலிருந்து அவர் விலகவே இல்லை என்பது பாடல்களை புரிந்துகொண்டால் உணர முடியும். இவர்கள் இருவரிடமிருந்தும் வேறுபட்டவர் முத்துஸ்வாமி தீக்ஷ¢தர். இசையில் ஒரு முனைவர் பட்டம் பெற்றவர்போல பலவிமான உத்திகளைக் கையாண்டு பாடல்களை ஒரு பொது அமைப்புடன் படைத்தார். வெறும் பக்திமாத்திரம் இல்லை அவற்றில். கோயில்களைப் பற்றிய விவரங்கள், பாடும் இறைவனின்/தேவியின் சிறப்புகள் அவைசார்ந்து வழங்கும் கதைகள், தாந்திரிக வழிபாடு பற்றின விவரங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். Dr.V.ராகவன் அவர்கள்  அந்த நாளில் எழுதிய இசைக்கட்டுரைகளின் தொகுப்பைப்படித்து இவற்றை ஒருவாறு புரிந்துகொண்டேன். தியாகராஜஸ்வாமியின் வாழ்க்கையை பலரும் உபன்யாசம் செய்வதை நாம் கேட்டிருக்கிறோம் ஆனால் மற்ற இருவரைப்பற்றிக் கேட்டது உண்டா?
இசை விழா நிகழ்ச்சிகளில் அரங்குகளில் அமருவதற்கு இருக்கும் நாற்காலிகளின் வரிசை இடைவெளி பெரும்பாலும் ஒல்லியான உடல் வாகு இருப்பவர்களுக்கானது. கொஞ்சம் கனமான உடல்கொண்டவர் என்றால் பலரையும் கடந்து கிடைக்கும் அமர்வுக்குப் போவதற்குள் அமர்ந்திருப்பவர்களின் கால்களை மிதித்து, அவர்கள்மேல் சரிந்து, பின்புறத்தை அவர்களின் முகத்தில் அழுத்திப் போகநேரிடும். அங்கு சிலமணி நேரம் இப்படி அப்படி அசையாமல் ஒரேவிதமாக நாற்காலிகளில் அமர்ந்து இசையை ‘அனுபவிக்க’ வேண்டும். முதலிலேயே இயற்கை அழைப்பை ஏற்றுக்கொண்டு விடவேண்டும். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று கச்சேரிகளுக்கு நடுவில் அதற்கு இடைவெளியிருக்காது. மீறி எழுந்து போனால் இடம் போய்விடும். ஒரு உல்லாசப் பயணம் போவதுபோல உண்பன, பருகுவன என்று முன்னேற்பாடாகப் போனால்த்தான் பசியை வெல்லலாம். அப்புறம் அடுத்த தொல்லை இசைப்பவரின் இசைக்குள் நுழைந்து பயணிப்பது. அதில் என்ன தொல்லை? மேலே சொன்ன தொல்லைகள்தான். அவற்றைத் தாண்டி இசையை ரசிப்பது மிகக் கடினம். மூன்றாவதாகப் பாடும் பாடகரின் கச்சேரி முடியும்போது முதல் பாடகரின் நிகழ்ச்சி சுத்தமாக பலகையில் எழுதியதை அழித்ததுபோல மனதிலிருந்து அகன்று போயிருக்கும். குரங்கு உணவை வாயில் அடக்கிக்கொள்வது போல எல்லாவற்றையும் உள்ளத்தில் இருத்திக்கொள்ள இயலுவதில்லை.
மயிலை சீநிவாசா ஹாலில் கச்சேரி வருடம் முழுக்க நடந்த வண்ணம் இருக்கும். அங்கு வரும்  உள்ளூர் நபர்கள் சிலர் முதல் வரிசையில் அமர்வார்கள். பரவலாக அறியப் பட்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் மணி எட்டு ஆகிவிட்டால் போதும் வித்வான் பாடலை முடிக்கும்வரைகூடக் காத்திராமல் ‘பொசுக்’ என்று எழுந்துவிடுவார்கள். ஆவர்த்தனம் வந்ததும் ‘கொல்’ என்று ஜனங்கள் எழுந்து வித்வானை அவமதிப்பது தெரிந்த செய்திதானே?
அன்று போன நிகழ்ச்சி மயிலை சீநிவாசா அரங்கில் கபாலி •பைன் ஆர்ட்ஸ் அமைப்பினரது ஏறாபாடு. மாலை ஐந்து மணிக்குப் பாடியவர் ஒரு இளம் பெண்மணி. பெயர் குமாரி பிருந்தா மாணிக்கவாசகம். அவரது நிகழ்ச்சியில் மையமாக வராளி ராக ஆலாபனையும் ‘ஆழிமழைக்கண்னா’ திருப்பாவைப் பாடலும். இதுதான் நான் இவரது இசையை முதன் முறையாகக் கேட்பது. நன்கு home work செய்திருந்தார். இரவு ஏழு மணிக்கு பாலக்காடு ராம்பிரசாத் கச்சேரி. பாலாக்காடு மணி ஐயரின் பெண்வயிற்று மகன். (இது ஒரு செய்தியாக மட்டுமே) இவரது நிகழ்ச்சியிலும் ஹமீர்கல்யாணி ஆலாபனை. தொடர்ந்தது ‘தூமணிமாடத்து’ திருப்பாவைதான். நிரவல் ஸ்வரம் ஏதும் இல்லாமல் ‘தனி’. தொடர்ந்து லதாங்கி ராகம்,தானம்,பல்லவி. பல்லவிக்கு நான் இருக்கவில்லை.
அரியக்குடி அவர்கள் திருப்பாவை முப்பது பாடல்களுக்கும் ராகம் தேர்ந்தெடுத்து பொருத்திக் கொடுத்திருக்கிறார். அந்த முப்பது பாடல்களையும் முழுநேரக் கச்சேரியாகவும் பலமுறை பாடியிருக்கிறார். என்னிடம் நான்குமணிநேர இசைக் கச்சேரி -அவர்பாடியது- இருக்கிறது.
அரங்கைப்பற்றியும் சொல்லவேண்டும். மிகவும் பழையது இக்கட்டடம். முன்னர் அது குளிரூட்டப்பட்டிருக்கவில்லை. பாடகரின் மேடை மேசைகளைக் கொண்டுதான் அமைக்கப் பட்டிருக்கும். இப்போதும் அப்படித்தான். அரங்கில் பார்வையாக ஸ்ரீநிவாச ஸாஸ்திரியாரின் உருவ ஓவியம் முன்னர் இருந்தது. இப்போது அது ஒரு மூலையில் யார்கண்ணிலும் படாதவாறு ஒரு பிறையில் உள்ளது. பராமரிப்பு இல்லாததால் மேலே உள்ள கூறைத்தடுப்பு உடைந்து பல்லைக்காட்டுகிறது. சுற்றுசுவர் முழுவதும் புரவலர்களின் வருக என்னும் விளம்பர துணி தாறுமாறாகக் கட்டப்பட்டிருந்தது கண்களை உறுத்தியது.
ஆனால் எனக்கு மகிழ்ச்சியளித்த விஷயம் நமக்கும் பாடகருக்கும் இடையில் மற்ற அரங்குகளைப்போலத் திரை தொங்கவில்லை. அவர்கள் மேடையில் ஏறி அமர்ந்து, சுருதி கூட்டி, தங்களுக்குள் பேசிக்கொண்டு என்பதாக அனைத்தையும் நாம் காணமுடிந்தது. இங்கு கட்டணம் கொடுக்க வேண்டியிருக்க வில்லை. மேடையிலிருந்து ஒரு பத்தடி இடை வெளியில் அமர்ந்து இசையைக்கேட்க முடிந்தது. பதிக்கப்பட்ட அமர்வுகள் இல்லை என்பதால் வசதிபோல் அதை நகர்த்திக் கொள்ளவும் முடிந்தது. ஒலியும் காதைப்பதம் பார்க்கவில்லை என்பதும் சொல்லவேண்டிய செய்தி.
பெரிய அரங்குகளில் இப்போது கடைசீ வரிசைக்கு “நன்கொடை” -அதுவும் பால்கனியில்- ரூபாய் நூறு என்பதுதான் நடைமுறை. இசையைத் தவிர மற்ற எல்லாம் உள்ளது இசையைத்தான் தேடவேண்டும்.

Series Navigationமருமகளின் மர்மம் 9சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 13கண்ணீர் விட்டோம் வளர்த்தோம்பெண்மனதின் அரூப யுத்தம் ‘அம்மாவின் ரகசியம்’இடையனின் கால்நடை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *