ஐங்குறு நூறு — உரை வேற்றுமை

                    

                                         

ஐங்குறு நூறு என்பது ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் வீதம் என்னும் வகையில், ஐந்து குறுகிய நூறு பாடல்கள் அடங்கிய தொகுதியாகும்.

இந்நூலின் நெய்தல்திணைப் பாடல்களை அம்மூவனார் பாடி உள்ளார். அப்பாடல்களில் ஆறாவது பிரிவாக ‘வெள்ளாங்குருகுப் பத்து’ என்பது அமைந்துள்ளது. 

வெள்ளாங் குருகு என்னும் பறவையைப் பற்றிய செய்திகள் இப்பத்துப் பாடல்களிலும் பயின்று வருதலால் இப்பகுதி வெள்ளாங்குருகுப் பத்து என்று பெயர் பெற்றது. வெள்ளாங்குருகு என்பது நீர்ப்பறவை இனத்தைச் சேர்ந்தது. வயிற்றுப்புறத்தில் வெண்மை நிறமும், முதுகுப்புறம் சாம்பல் நிறமும் கொண்ட பறவை இது. ஆணை விடப் பெண் வேறு சில வண்ணங்களுடன் அழகாக இருக்கும். பெண்குருகின் வாலில் 26 முதல் 28 இறகுகளும், ஆண் பறவையின் வாலில் 14 முதல் 16 இறகுகளும் இருக்கும். நிலத்தில் இருக்கும்போது இது தன் வாலை மேலும் கீழும் அசைத்துக் கொண்டே இருக்கும். அதனால் இதை வாலாட்டி என்று வழங்குவதும் உண்டு. சில ஊர்களில் இதை உள்ளான் குருவி எனவும் வழங்குவர்.

.

மேலும், இப்பத்துப் பாடல்களிலும்

      “வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்                    

       காணிய சென்ற மடநாரை”

என்னும் இரண்டு அடிகள் காணப்படுகின்றன.

இந்தச் சொற்றொடருக்கு, ”உள்ளான்குருவியின் குஞ்சு இறந்துபட்டதைக் காணச்சென்ற இளமையான நடையுடைய நாரை” என்று அறிஞர் ச,வே. சுப்பிரமணியன் உரை எழுதி உள்ளார். சிதம்பரம் மெய்யப்பன் பதிப்பகம் [2009] அந்த உரையை வெளியிட்டுள்ளது.

எடுத்துக் காட்டுக்கு இப்பாடலையும் உரையையும் பார்க்கலாம்.

“வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

கையறு[பு] இரற்றும் கானல்அம் புலம்பத்

துறைவன் வரையும் என்ப;

அறவன் போலும்; அருளுமார் அதுவே”                     [152]

உரை: உள்ளான் குருவியின் குஞ்சு இறந்துபட்டதைக் காணச்சென்ற இளமையான நடையை உடைய நாரை, செயலற்றுத் துன்பத்துடன் ஒலித்தது. அத்தகைய கடற்கரைச் சோலையை  உடைய  தலைவன் திருமணம் செய்து கொள்வான் என்று கூறுவர். அறமுடையவனாக இருப்பான் போன்றுள்ளது. அருளும் உடையவன். 

இதே பாடலுக்கு ஔவை துரைசாமிப்பிள்ளையின் உரை இப்படி இருக்கிறது.

“வெள்ளாங்குருகின் பார்ப்பினைத் தனதெனக் கருதி அதனைக் காண்டற்குச் சென்ற  மடநடையினையை நாரை செயலற்று ஒலித்தலைச் செய்யும் கானலைச் சேர்ந்த கடல்நிலத்தலைவன்  அப்பரத்தையை வரைகுவன் எனப் பலரும் கூறுபவாகலின், அவன் அறமுடையவன் காண்; அஃது அவற்கு அருளுமாம்”

’செத்தென’ என்பதற்கு ச.வே.சுப்பிரமணியன் பத்துப் பாடல்களிலும் ’இறந்ததாக’ என்றே பொருள் கூறுகிறார். ஔவை துரைசாமிப்பிள்ளையோ, ’தனதெனக் கருதிய’ என்றே பொருள் தருகிறார்.

தொல்காப்பிய பொருளதிகார உவமவியல் நூற்பா உரையில் ’செத்து’ என்பது உவம உருபாகக் காட்டப்படுகிறது. மேலும் கலித்தொகை 45—ஆம் பாடலில் உள்ள,

“அரும்மணி அவிர்உத்தி அரவுநீர் உணல் செத்து” என்னும் பாடல் அடியிலும்,

குறுந்தொகை217—ஆம் பாடலில் உள்ள,

“ஆங்கியான் கூறிய அனைத்திற்குப் பிறிது செத்து” என்னும் பாடல் அடியிலும்,

நற்றிணை 35-ஆம் பாடலில் உள்ள.

“புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி

கிளை செத்து மொய்த்த தும்பி, பழம்

செத்து………”என்னும் பாடல் அடிகளிலும்

‘செத்து. என்பதற்குக் ’கருதிய’ என்றே பொருள் சொல்லப்படுகிறது.

எனவே வெள்ளாங்குருகுப் பத்தில் வரும் ‘செத்து’  என்னும் சொல்லுக்குக் கருதிய என்று பொருள் கொள்ளுதலே சிறப்பாக இருக்கும்

Series Navigation“ஞானப்பால்” – ந.பிச்சமூர்த்தி – சிறுகதை வாசிப்பனுபவம்ப.தனஞ்ஜெயன் கவிதைகள்