ஒரு மலர் உதிர்ந்த கதை

This entry is part 11 of 40 in the series 1 ஏப்ரல் 2012

பருவ வயது வந்ததும்

பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு

வீட்டு வேலை செய்யும்

வேலைக்காரி ஆக்கினீர்கள்.

வரதட்சனை கேட்க்காத

வரன்தான் வேண்டுமென்று

வந்த வரன்களை

விரட்டி விட்டீர்கள்.

விவாக வயது கடந்துபோனது.

தோழியின் இடுப்பில் குழந்தை

கனத்துப்போகுது என் இதயம்.

பக்கத்து வீட்டு பையனை

பார்த்தாலேபோதும்

வேசி என்று பேசுகின்றீர்கள்.

தனிமரமாய்

தமக்கை நானிருக்க

தம்பி திருமணத்திற்கு

துடி துடிக்கின்றீர்கள்

மகாலட்சுமி வருவதாய்

மகிழ்ந்து போகின்றீர்கள்

தம்பி திருமணத்திற்கு

தடையாக இருக்கிறேன் என்று

அரளிவிதையை அரைத்து வைத்து

“செத்துப்போ” என்றீர்கள்.

குடிக்க வைத்தீர்கள்

இதற்குப்பதிலாக

பிறந்தவுடன் கள்ளிப்பாலை

ஊற்றியிருக்கலாமே.

ஆனாலும்,

உங்கள் மகளாக பிறந்தபோதும்

உங்கள் மகளாக இறக்கும்போதும்

மகிழ்ந்து போகிறேன். போ…கி….றே….ன்.

இன்னும் நான்

முழுமையாக சாகவில்லை

அதற்குள்,

நடிப்போடு

உங்கள் அழுகை குரல் வெளியே

நான் தற்கொலை செய்துகொண்டதாக.

(இந்த மலர் உதிர்ந்தது 1970 அன்றைய, மதுரை மாவட்டம்,ஆண்டிபட்டி அருகே உள்ள வடுகபட்டி கிராமத்தில்,40 ஆண்டுகளுக்கு முன்பு எனது 13 வயதில் பார்த்தது.கள்ளிப்பாலுக்கு தப்பிய பெண்குழந்தைகள் கல்யாண வயதில் அரளிவிதைக்கு அழிந்துபோவது அப்போது எனக்கு புரியவில்லை.இத்தனை காலம் என் இதயத்தில் இருளாக இருந்த இது இன்றுதான் வெளிச்சத்திற்கு வந்தது.)

———-பரிதி.முத்துராசன்.

Series Navigationதனிமை உலகம்: வேட்டை :சுப்ரபாரதிமணியன் புதிய சிறுகதைத் தொகுப்புஅக்கரை…. இச்சை….!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *