ஒரு விவாகரத்து இப்படியாக…!

 

எழுதியவர்: ’கோமதி’

 

காலை முதல் பக்கத்து போர்ஷனில் ஏதோ தகராறு. விவரம் சரியாகப் புரியவில்லை. ஆனால், காரசாரமான விவகாரம். நான் அலுவலகம் புறப்படும் வரை தொடர்ந்ததால் எனக்குப் புறப்படவே முடியவில்லை. எப்படியாவது விவரம் அறியவேண்டும். என் மனைவியோ அவள் உண்டு அவள் வேலை உண்டு என்றிருப்பவள். எதையும் காதில் வாங்க அவளால் முடியாது.

 

நான் வாசலில் வண்டியை புறப்படவைக்க முயன்றுகொண்டி ருந்த போது ஜகன் இரைந்துகொண்டிருந்தான்.  ”ஒன்று, நீ போகணும், இல்லை, நான் போயிடறேன். இனிமே, இந்த வீட்டில ரெண்டு பேரும் சேந்து வாழ்வது என்பது முடியாது”, என்றான். அவளும் பதிலுக்குக் கத்தினாள். “நீங்க போயிட்டா எல்லாம் அஸ்தமிச்சுப் போயிடாது. ஏதாவது ஒண்ணு இல்லாட்டா வேற வழி கிடைக்காமப்போகாது. இரண்டு வேளை சாப்பிடாம ஒரே வேளை சாப்பிடவாவது கிடைக்காமப் போகாது. அதுக்காக, நீங்க காக்கா வெள்ளைனு சொன்னா ஆமாம்னு சொல்ல என்னாலே முடியாது”, என்றாள் ஆணித்தரமாக.

 

அப்போது ‘அக்கம்பக்கம்கூட  வேடிக்கைப் பார்ப்பார்களே என்று எனக்கே வெட்கமாகிவிட்டது. ஏனென்றால், பக்கத்துவீட்டில் குடியேற அவர்களை நாந்தான் சிபாரிசு செய்தேன். என்னுடன் வேலைசெய்பவனுடைய நண்பன்தான் ஜகன். ஊரிலிருந்து வேலைதேடி வந்தவன் பிறகு மனைவியுடன் குடித்தனம் வந்திருக்கிறான்.

 

அவர்கள் இருவருக்கும் அடிக்கடி அபிப்பிராய பேதம் ஏற்பட்டு வாக்குவாதம் வரும் என்றும் தோன்றியது. என்றாலும், இத்தனை தூரம் வளர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கவில்லை. எப்படியும் அவர்களை சந்தித்து ‘ஒரு காலனியில் இப்படிக் கத்துவது, சண்டைபோடுவது எல்லாம் நாகரீகமல்ல’, என்று எடுத்துச்சொல்லவேண்டுமென்று திர்மானித்தேன். மாலை நான் வீடு திரும்பியபோது அவர்கள் கதவு பூட்டிக்கிடந்தது. என் மனைவியிடம் கேட்பதில் பயனில்லை.

 

இரவு பக்கத்துப் போர்ஷனில் சாதாரணமாக பேச்சுக்குரல் கேட்டது. இதென்ன இது? காலையில் புகம்பம்,  மாலையில் அந்தர்தியானம், இரவு எதுவுமே  நிகழவில்லை என்றிருக் கிறதோ…!’

 

அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் ஜார்ஜிடம் அவன் நண்பன் ஜகன் விஷயம் பற்றி விசாரித்தேன். “இதென்னப்பா, காலையில் நான் புறப்படும்போது விவாகரத்துவரை போனவர்கள் மாலையில் நான் வீடுதிரும்பும்போது ஹனிமூனுக்குப் புறப்படுகிறார்களே!” என்றேன்.

 

அவனும் சிரித்துவிட்டு, “அதுக்கா கவலைப்படறே! அவங்க ரெண்டு பேருமே டி.வி. சீரியல்லே நடிச்சே காதல்கல்யாணம் கட்டிக்கிட்டவங்க! எப்போதும் ஏதாவது சீரியலுக்கு ஒத்திகை பாப்பாங்க. இப்ப அவன் டைரக்ட் கூட செய்யறான். உனக்குத் தெரியாதா? பேசினயானா ஒனக்கும் ஒரு பார்ட் குடுத்து நடிக்கத் தயார் பண்னிடுவான்!”, என்று ஜார்ஜ் சொன்னான்.

 

”அப்படியா!” என்று நான் அலங்கமலங்க விழித்தேன்.

0

 


குறிப்பு: எழுத்தாளரும், கவிஞரும் ஆன சதாரா மாலதி திண்ணைக்கும் பிற பல இணையதளங்களுக்கும் நன்கு அறிமுகமானவர். திருப்பாவையை அலசி ஆராய்ந்து அவர் எழுதிய கட்டுரைகள் திண்ணையில் வெளிவந்து பரவலான வரவேற்பைப் பெற்றது. பின், உயர்பாவை என்ற தலைப்பில் சந்தியா பதிப்பகத்த்தால் அவை நூலாக வெளியிடப்பட்டன. தனது தாயைப்பற்றி அவர் எழுதிய என் தகவல்.காம் என்ற கவிதை ஒரு தாய்க்கு மகள் காட்டும் அருமையான செய்நன்றி என்பதோடு அந்தக் கவிதை அவருடைய தாயாரின் இலக்கிய ஆர்வத்தையும், சமூக, அரசியல் பிரக்ஞையையும் எடுத்துக்காட்டுவ தாகவும் அமைந்திருந்தது.

சதாரா மாலதியின் தாயார் திருமதி லலிதா நாராயணனுக்கு இப்போது 80 வயதுபோல் இருக்கும் என்று நினைக்கிறேன்.  ஏராளமான சிறுகதைகளை எழுதியுள்ளார். அவற்றில் 50 கதைகள் ஆசீர்வாதம், யதாஸ்தானம்[சந்தியா பதிப்பக வெளியீடு] ஆகிய இரண்டு தொகுப்புகளாக இதுவரை[சில வருடங்களுக்கு முன்பு] வெளியாகி யுள்ளன. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் எழுதிவரும் இவரிடம் இன்னும் கையில் ஒரு முழு நாவலும், 200க்கு மேல் சிறுகதைகளும் உள்ளன. தனது மாமியாரின் பெயரை தனது புனைப்பெயராக்கிக் கொண்டு ‘கோமதி’ என்ற பெயரில் எழுதிவரும் அவருடைய கதைகளின் உலகம் சிறிய தென்றாலும் அவற்றின் மூலம் வெளிப்படுகின்ற சிந்தனை யோட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. அவருடைய கதைகள் மிகை யுணர்ச்சியை அறவே தவிர்த்த அளவில் அமைந்துள்ளதும், காட்சிப் புலனின் துல்லியத்தை வெளிப்படுத்துவதும், மெல்லிய இழையாய் அவற்றில் ஊடுபாவும் நகைச்சுவையுணர்ச்சியும், அறச்சீற்றமும், பெண்முன்னேற்றக் கருத்துகளும் குறிப்பிடத்தக்கவை.

மூத்த தலைமுறையைச் சேர்ந்த, அதிகம் பரிச்சயமற்ற எழுத்தாளர் என்பதால் கோமதியின் எழுத்தை வெளியிட தற்போதைய பதிப்பகங்கள் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுவருகிறேன். எனில், திண்ணையில் தனது கதைகளை வெளியிடு வார்களா என்று அவர் கேட்டபோது அவருடைய சிறுகதைகளை தொடர்ந்து  வெளியிட்டு ஊக்குவிக்கும் என்ற நம்பிக் கையில் அவரு டைய தேர்ந்தெடுத்த, இதுவரை அச்சில் வெளிவராத கதைகளை கணினி யில் அச்சிட்டு அனுப்பி வைக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று அவரிடம் கூறினேன். அப்படியே, முதல் கதையை இப்போது அனுப்பி வைக்கிறேன். கோமதியின் கதைகளை திண்ணை தொடர்ந்து வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கோமதி அவர்கள் தற்சமயம் பெங்களூரில் தனது மருமகனின் ஆதரவில் வாழ்ந்துவருகிறார். அவருடைய தொலைபேசி எண்: 080 23308336. அவருடைய மின்னஞ்சல் முகவரி: valee1938@gmail.com

நன்றி

தோழமையுடன்லதா ராமகிருஷ்ணன்
Series Navigationதிலக பாமா – தனித்து நிற்கும் ஒரு கவிஞர்வழக்கு எண் 18/9 திரைப்பட விமர்சனக் கூட்டம்