கவிஞர் பழனிவேளின் தொகுப்பு “கஞ்சா” குறித்து…..

This entry is part 17 of 20 in the series 11 பெப்ருவரி 2018

 

  லதா ராமகிருஷ்ணன்.

 

 

தனது தவளை வீடு தொகுப்பின் மூலம் தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞராக கவனம் பெற்றுள்ள திரு. பழனிவேளின் கஞ்சா என்ற தலைப்பிட்ட மற்றொரு தொகுப்பு ஆலன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. (64 பக்கங்கள், 50 கவிதைகள். விலை ரூ.100 தொடர்புக்கு – palanivelrayan@gmail.com. தொலைபேசி 8973228830.) புத்தகத்தை வெளியிட்டுள்ள திரு.ராஜகோபால் தமிழ்ச் சிறுபத்திரிகைவெளியில் நன்கு பரிச்சயமானவர். இந்தக் கவிதைத்தொகுப்பை நேர்த்தியாக வெளியிட்டுள்ளார்.

 

கஞ்சா கவிதைத்தொகுப்பு குறித்து தனது அறிமுக உரையில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார் அவர்:

 

“இயல்பாகவே பழனிவேள் கவிதைகளில், அவரது கவிதைமொழியில், ஆழ்ந்த அமைதியும், செறிவும் விரவியிருக்கும். புலம்பல்கள், வெற்று தர்க்க விசாரங்கள், புதிர் அவிழ்ப்புகள், கழிவிரக்கம் போன்ற கூறுகள் அவரது கவிதைகளில் காணக் கிடைக்காது. வேறெந்த ஒரு படைப்பாளியின் சாயலோ, பாதிப்போ அறவே கிடையாது.  ஏறத்தாழ இத்தொக்குப்பிலிருக்கும் ஐம்பது கவிதைகளிலும் ஒரு சரடாக உள்ளோடும் கருப்பொருள் மிகவும் வித்தியாசமானதும், விசித்திரமானதும்கூட. பழனிவேள் இதைக் கையாண்டிருக்கும் விதம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.”

 

இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் மேற்கண்ட மதிப்பாய்வின் உண்மைத் தன்மைக்கு நிரூபணமாக விளங்குகின்றன.

 

big pictureஐ பலவிதமாகக் காட்சிப்படுத்துகிறது. வாழ்வோட்டத்திற்குக் குறியீடாக கவிதைகளில் இடம்பெறுகிறது.

 

கவிதைகளில் மொழிநயமும் கவித்துவமும் வெகு இயல்பாக, பிரயத்தனம் கோராத கவி மனத் தனிமொழியாக, உரையாடலாக இடம்பெற்றிருக்கின்றன. சமகால வாழ்க்கையின் நெருக்கடிகள் பேசப்பட்டிருக்கின்றன. அவற்றை எதிர்க்கும் கலகக்குரல் கஞ்சாவினூடாக ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு கவிதை:

 

கடந்த காலமானாலும்

நிகழ் காலமானாலும்

எதிர் காலமானாலும்

 

 

எதிரிகளால் சூழப்பட்டது

எதிரிகளால் ஆளப்படுவது

இருக்கட்டுமே

 

 

ஒழுக்கம் வேண்டும் என்றே

விளைவிக்கிறது

நேர்மை அதை விநியோகிக்கிறது

வேண்டும் என்று

 

 

எளியோர் எப்படி மறுக்க முடியும்

வேண்டாம் என்று

 

கஞ்சாவைக் குறியீடாக்கி வாழ்க்கை குறித்த தத்துவார்த்தப் பார்வைகள் முன்னிறுத்தப்படுகின்றன. வாழ்வின் நெருக்கடிகளிலிருந்து தப்பிக்கும் ஒரு வழியாக, உபாயமாக கஞ்சா கவிதைகளில் ஊடாடிக்கொண்டிருக்கிறது.

 

பாழாய்ப் போனது

பட்டப் பெயர்கள்

அடையாளப் பெயர்கள்

சுட்டுப் பெயர்கள்

 

டோப்பு மால் சரக்கு

கடா மர்ஜிவானா பொட்டலம்

தூள்

 

கஞ்சாவின் எல்லாப் பெயர்களும்

புகைவெளியில் மாயமாகின்றன.

 

 

 

பழனிவேளின் கவிதைகள் விளக்கவுரையாக இருப்பதில்லை. பீடமேறி போதிப்பதில்லை. தீர்ப்பளிப்பதில்லை. அழுது புலம்புவதில்லை. அலட்டி ஆர்ப்பரிப்பதில்லை. ஒருவித மோனநிலையில், ஒருவித விலகிய பார்வையில் வாழ்க்கையைப் பார்த்தபடி, கனகச்சிதமான சொற்களில் ரத்தினச்சுருக்கமாகக் காட்சிப்படுத்துகின்றன.

 

அப்படி இருந்தது

அந்தப் பாட்டு

வரிகள் கூட இல்லையது நான்கைந்து வார்த்தைகள்

நீர்த்திவலைகள்

 

உடல் உப்புத்தொட்டி

கடல் கண்ணீர் புட்டி

இன்று காற்று

நாளையென்பது பொழுது

போ விலகிப்போ

இலைகளைப் போல உன்னால் நெருங்கவோ

இருக்கவோ முடியாது.

 

 

வார்த்தைகளுக்கிடையே வாசகர்கள் தேடியெடுத்துக்கொள்ள சொல்லும் பொருளும் பழனிவேளின் கவிதைகளில் நிறையவே உள்ளன. மேம்போக்கான, அசிரத்தையான தொனியில் ஒலிப்பதுபோலிருந்தாலும் இந்தக் கவிதைகள் அடியாழமன தீவிரத்தன்மை கொண்டவை என்பது தெளிவாகவே புலப்படுகிறது.

 

பெற்ற பேறு ஏதுமற்று

பெரும்போர் நடக்கும் அன்றாடத்தில்

கஞ்சா

கச்சிதமான பதுங்குகுழி

 

எல்லோரிடமும் கேள்விகள்

கேள்விகள் போலவே பதில்களும்

 

அவர்கள் எதையும் கோர்ப்பதில்லை

எதனையும் எளிதாக்குவதுமில்லை

 

பதுங்கு குழியில்

கேள்விகள்

பதில்கள்

தேவையே இல்லை.

 

கஞ்சா ஒரு குறியீடாகவும், பின்புலமாகவும், தூல அளவிலும், சூக்கும அளவிலும் இந்தக் கவிதைகளை கவித்துவம் குறையாமல் கட்டமைத்து உயிர்த்திருக்கச் செய்வதை வாசித்துத்தான் முழுமையாக அனுபவங்கொள்ள முடியும்.

 

 

 

 

Series Navigationகவிதைத்திரட்டுகளும் கவிஞர்களும்பிரம்மராஜனின் இலையுதிராக் காடு
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Comments

  1. Avatar
    latha ramakrishnan says:

    வணக்கம். ‘கஞ்சா’ என்பது கவிஞர் பழனிவேளினுடைய கவிதைத்தொகுப்பின் தலைப்பு. எனவே, ‘கஞ்சா’ என்று மேலேயும் அடுத்த வரியில் கவிஞர் பழனிவேளின் தொகுப்பு குறித்து என்றும் சரிசெய்து வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய இந்தச் சிறிய நூல் அறிமுகக் கட்டுரையை வெளியிட்டமைக்கு நன்றி. தோழமையுடன் லதா ராமகிருஷ்ணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *