கதை சொல்லல் -சுருக்கமான வரலாறு

Spread the love

 .

நடேசன்

மனிதர்களது பிரயாணங்கள் கால்நடை மற்றும்    குதிரைகளில்   தொடங்கி கப்பல்,  ஆகாயவிமானம், ஏவுகணை என மாறுவதுபோல் பயணங்களின்  வடிவங்கள்  மாறுகின்றன.

கதை சொல்வது கற்காலத்திலிருந்து தொடரியாக வந்தபோதும், வடிவம் மாறுகிறது.  கதை சொல்வதை நான்  பயணத்திற்கு ஒப்பிடுவது  இங்கு உதாரணத்திற்கு  மட்டுமல்ல,  ஒரு தொடர்ச்சியான படிமமாகவும் (Allegory) புரிந்து கொள்ளவேண்டும். கதை சொல்பவர்கள் , கேட்பவர்களை புதிய இடம் ,  தேசம் ,   ஏன்  புதிய உலகிற்கே அழைத்துச் செல்கிறார்கள்  .,

இலங்கையைப் பற்றிய கதை வாசிக்கும்போது அல்லது காதால் கேட்கும்போது மெல்பேனில் உள்ள எமது வீட்டிலிருந்து கொண்டே,    நாம் கடவுச்சீட்டு, விசா, விமானச் சீட்டு  அற்று இலங்கை போய் வருகிறோம்.  சகல விமானப்போக்குவரத்தும் நிறுத்திவைக்கப்பட்ட  தற்போதைய காலத்தில் எந்தத்  தடையுமற்று நமது பிறந்த ஊர்களுக்குக் கதைகள் மூலம்,  முகக்கவசமோ,  இரண்டு கிழமைகள் தனிமைப்படுத்தல்  அற்று  இலகுவாகப் பயணிக்கலாம்.  அத்துடன் கடிகாரத்தையும் நாட்காட்டியையும் நிறுத்திவிட்டு,  நமது  கடந்தகாலம்,  எதிர்காலம்,  நிகழ்காலம் எனச் சஞ்சரிக்க முடியும் .

கதை சொல்லல் எப்பொழுது தொடங்கியது ?

15 ஆண்கள் கொண்ட இனக்குழு உணவுக்கு வேட்டையாடியபோது அதில் ஒருவர் வேட்டைக்குப் போகாது  கள்ளம் பண்ணிவிட்டு வீட்டிலிருந்து விடுகிறார் .  மாலையில் வேட்டையாடிய உணவோடு மீண்டு  வந்தவர்களுக்கு , அவர்கள் உடல் அலுப்புத்தீர  தனது குற்ற உணர்வைத்  தவிர்க்கச் சொல்லியது  முதல் கதையாக இருக்கலாம் . இல்லை , தூங்காத பிள்ளைக்குத் தாய்,  தனக்குச் சிறு வயதில் நடந்தவற்றைச்  சொல்லியிருக்கலாம் – ஏன்  காதலன் காதலியின் உள்ளம்  கவருவதற்குச் சொல்லிருக்கலாம். இப்படியான வாய் மொழிக்கதைகள்  நமது கிராமங்களில் இன்றும் உள்ளது. எல்லா மனிதக் குழுமங்களிலும்  தேடமுடியும் .

சமூகத்தில் அரசுகள் உருவாகி,  வரி வசூலிக்க  , குற்றங்களைத் தடுக்க,  சொத்துக்களை பாதுகாக்க சட்டங்கள் உருவாகியது. அவை எழுத்தூடாக மக்களுக்கு கடத்தப்படவேண்டியதால் பதிவுகள் தேவை. இந்தியாவில் சந்திரகுப்த மவுரியனது காலத்தில் எழுத்துகள் உருவானதாக ஒரு கிரேக்க அறிஞர் சொல்கிறார் . நான் அலஸ்கா சென்றபோது , ஆதி அமெரிக்கர் தங்கள் கதைகளை மரக்கம்புகளில் ஓவியமாகவும் சிற்பமாகவும் செதுக்கியிருந்ததையும். அன்தீஸ் மலைப்பகுதியில்  இன்கா மக்கள் கீப் எனும்  கயிற்று முடிச்சுகளாகக் கதைகளை வைத்திருந்ததையும் பார்த்தேன்.

 நாம் இக்காலத்தில் வரலாறு என்ற பதத்தை பேசும்போது அது எழுதப்பட்ட கதைகளிலிருந்து தொடங்குகிறது .

அப்படி எழுதப்பட்ட கதையாக எமக்குக் கிடைத்தது கிறீஸ்துவுக்கு முன்பாக 7 ஆம்நூற்றாண்டில் எழுதப்பட்ட கதையாகும். அது  4800 வருடங்கள் முன்பு உருக்(Uruk) நகரை ஆண்ட கில்கமாஸ்(Gilgamesh) எனப்படும்  சுமிரீய மன்னனது சரித்திரமேயாகும் அதை எழுதியது சின்  லிகி உனானி (Sin-liqe-uninni) இந்தக்கதை மன்னனுக்கும்,  மனிதனும் மிருகத்தன்மையும் கலந்த என்கிடு(Enkidu) என்ற ஒருவனுக்கிடையே உள்ள  நட்பு,  இறப்பு,  காதல் என்பவற்றை  நமக்கு தெரிவிக்கிறது . இந்தக் கதைப் பாடல்களால் கதையாக்கப்பட்ட இதிகாசம் . இந்த இதிகாசத்தில் பழைய கோட்பாட்டில் சொல்லப்படும் நோவா சம்பந்தப்பட்ட  வெள்ளம் பற்றிய குறிப்புள்ளது .

இதே போலவே யூதர்களின் பழைய வேதாகமம் கிறிஸ்துக்கு 2000 வருடத்தின் முன்பு தொடங்குகிறது என்கிறார்கள் .இதைப்  புனைவான சரித்திரம்( Fictionalised History) என்கிறார்கள்.

இந்தியாவின்  இதிகாசங்களாக    இராமாயணமும் பின்பு   மகா பாரதமும் உருவாகிறது  இவை ஆரம்பத்தில்  வாய் மொழியாகவே வந்தன.  ஜாதகக்கதைகள் பஞ்சதந்திரக் கதைகள் வாய் மொழியாக வந்து பிற்காலத்தில் முறையே பாலியிலும் சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்டன.  அதேபோல்  கிரேக்கர்களது இதிகாசங்கள்  இலியட் ஒடிசி எல்லாம் செய்யுள் வடிவானவை

சீனர்களின் கொன்பூசியஸ்  தத்துவங்கள் தொடங்கி அவைகளது ஆரம்ப இலக்கியங்களும் இப்பாடல் முறையிலே இருந்தன

இது ஏன் ?

உங்களுக்குத்  தெரியும்,  சிறு வயதில் கேட்ட சினிமாப் பாடல்களை நாம் நினைவில் வைத்து இன்னமும் குளியலறையில் முணுமுணுப்போம் . நான் காதலித்த பருவத்தில் கேட்ட மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாட்டு இப்பொழுதும் எனது இதயத் துடிப்பை ஒரு கணம் நிறுத்திவிடும்.   காரணம்  சத்தங்கள்,  சந்தத்துடன்   வரும்போது அவை எமது முன் மூளையின் மடிப்புகளில் குழந்தைகளின்   லீகோ துண்டுகளாக வசதியாகப் படிந்திருக்கும்.  கடந்த வருடம் காசிக்கு சென்றபோது கங்கை கரையோரத்தில்  பார்க்க முடிந்தது. ஒரு குருவின் முன்  இருபதுக்கும்  மேற்பட்ட சிறுவர்கள் நின்றபடி  எதையோ சமஸ்கிருதத்தில் உச்சரித்தபடி நின்றார்கள்.

பிற்காலத்தில்  கிரேக்க நாடகங்கள்  ஒருவிதமான கதை சொல்லல் முயற்சியே . பலருக்கு ஒரே காலத்தில் வார்த்தைகளுடன்  உடல் மொழியையும் சேர்த்து கதை சொல்லப்படுகிறது

1440 பிரான்சில்  அச்சுயந்திரம் உருவாக்கப்பட்டதால் கதை சொல்லுவதில் மாற்றம் ஏற்படுகிறது. அதன் பின்பே ஆங்கிலத்தில் பைபிள் புத்தகம்  உருவாகிறது. மேற்குலகத்தில் சிறிய வசனங்களாகக் கதைகள் சொல்லப்பட்டதற்கு முன்னுதாரணமாகியது  புதிய ஏற்பாடு என பைபிள் ஆகும்.

   இதில் இயேசுநாதர் சொல்லிய விடயங்களாக  மத்தியு ,  மார்க்,  ஜோன் , லூக் என்பவர்கள் எழுதியவை,   உபதேசக்கதைகளாக  மட்டுமல்ல, இதில் பாத்திரங்களாக   மீன்பிடிப்பவர்கள்,  விபசாரி , நோயாளி  மற்றும் வரி வசூலிப்பவர் எனச் சாதாரண மக்கள்  வருகிறார்கள் .ஆரம்ப இலக்கியத்தின் கையைக் கோர்த்து  யதார்த்த நிலைக்கு அழைத்து சென்றது புதிய ஏற்பாடே.  ஆரம்பத்தில் கிரேக்க மொழியிலும் பின்  லத்தினிலும்  இறுதியால்  1611 ஆங்கிலத்தில் பதிப்பித்து வந்த பைபிள், மக்கள் மயப்படும் புத்தகமாகிறது – கிங் ஜேம்ஸ்  பைபிள் எனப்படும் ஆங்கிலப் பதிப்பிலிருந்து எவரும் தப்ப முடியாதபடி  மேல் நாடுகளின் ஒவ்வொரு ஹோட்டல் அறையிலும் இந்த தடிப்பான புத்தகம் வைக்கப்படுகிறது.

 அச்சுப் புத்தகங்கள் வந்த பின்பும் கவித்துவமாகக் கதைகள் நாடகங்கள் எழுதுவது,  விட்டகுறை தொட்டகுறையாக தொடர்ந்தது. ஆங்கிலத்தில் சேக்ஸ்பியரது நாடகங்களைக் கேட்டால் நான் சொல்வது புரியும் .ஆங்கிலத்தில் பைபிளையும் சேக்ஸ்பியரையும் வெளியே எடுத்தால் எதுவும் மிஞ்சாது என்பார்கள். 

நமது முக்கிய கதை சொல்லலான நாவல் வடிவம் சேக்ஸ்பியரது காலத்தில் ஸ்பெயினில் சேவான்ரியின்  டாங்கி கோட்டே 1605 இல் உருவாகிறது  (Cervantes’s Don Quixote)  இதனது மூலப் பிரதியை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது

அரசகுமாரர்கள் வீரதீரத்தையும்  அழகிய அரச குமாரிகளையும் விட்டு சாதாரண மனிதர்களது வாழ்வைச் சொல்லும் நீண்ட கதை சொல்லல் என்பதே இந்த நாவல் வடிவம்.

பல முக்கிய நாவலாசிரியர்களுக்கு இந்த நாவலே முன்னுதாரணமாக இருந்தது .இந்த நாவலை முன்வைத்து யதார்த்த   (Realism) நாவல்களாக வந்தது அதில் மிகவும் முன்னோடியாகப் பேசப்படுவது மாடம் பவாரி மற்றும் டால்ஸ்ரோயின் அன்னா கரீனினா  முதலான நாவல்கள்.   யதார்த்தத்தை மிகைப்படுத்திய நாவல்களாக (heightened realism) வந்தவை தஸ்தாவஸ்கியின் நாவல்கள் .

1843 அதாவது 19 ஆம் நடுப்பகுதியில் சிறுகதைகள் உருவாகின்றன. அக்காலத்தில் முக்கியமாகச் சஞ்சிகைகள் வரும்போது,  அவைகளில் ஐந்து ஆறு பக்கங்களுக்கு 2௦௦௦-5௦௦௦ வார்த்தைகளுடன்  இந்த  சிறுகதைகள் வருகின்றன.

 

யதார்த்த ரீதியான சிறுகதைகள் எனப்படுகிறது  இதை ஆரம்பத்தில் சிறிய நாவல்கள் அதாவது ஒரு முக்கிய நிகழ்வை வைத்து எழுதப்பட்டன. எட்கார் அலன்போ,  மாப்பசான் என்பவர்கள் முக்கியமானவர்கள்.

சிறுகதைகளுக்கும் வரலாறு உண்டு.  பஞ்ச தந்திரக்கதைகள்,  ஜாதகக் கதைகள்,  ஈசாப் நீதிக்கதைகள் , அரேபிய இரவுகள் சிறுகதைகளின் பெற்றோர்கள்.  அதைவிட நமது பாரதத்தில் இராமாயணத்தில் வந்த உபகதைகள் எல்லாமே இதை ஒட்டியவை

கதையின் முடிவில் வாலை ( முரண்நகை )வைப்பதுபோல் முடிந்த யதார்த்த  சிறுகதைகளுக்கு  அமைப்பில் மாற்றத்தைக்  கொண்டு வந்தவர் அன்ரன் செக்கோ . நவீனமான சிறுகதைகள் எனப்படும் செக்கோவின் கதைகளில் மனரீதியான சிந்தனை மட்டுமே உள்ளது   . அவரது கிஸ் என்ற கதை முக்கியமானது .இதன் பின்பு ஜேம்ஸ் ஜொய்ஸ் கதைகளில் மனரீதியாக உணர்வுகள் இறுதியில்  (Epiphany -the dead)  பெறுவதாக முடித்தார் .

நாவல் ( மார்சல் புருஸ்) சிறுகதைகளில் ( டி எச் லாரன்ஸ்) நவீனத்துவம்  உருவாகியபோது ஒழுங்கற்று மனரீதியான சிந்தனைகள் கொண்ட கதை நவீன கதை சொல்லல்  உருவாகியது .

அதன் பின்பு நாவல் சிறுகதைகளில் இரண்டாம் உலகப்போரின் பின் மீண்டும் மாற்றம் ஏற்படுகிறது. இங்கு யதார்த்தம் நவீனம் என்பதை மறுக்கப்படுகிறது. அல்பேர்ட் காமுவின்  அபத்தம் என்ற விடயம் உருவாகிய பின்பு யதார்த்தமென்பது ஒன்றில்லை. எல்லாமே  நம்மால் மனரீதியான ஒழுங்கு படுத்தப்பட்டவையே (Subjective) என நிராகரிக்கப்படுகிறது இதன் முக்கியமானவர்களாக சாமுவேல் பெக்கட்( நாடகம்)  லுயி போர்கஸ் (சிறுகதை )  சல்மான் ருஸ்டி (நாவல்)போன்றவர்கள் பின் நவீனத்துவத்தின் மூலவர்கள் . இந்த பின்நவீனத்துவத்தின் ஒரு வெளிப்பாடே மாயா யதார்த்தம் என்பது முக்கியமாகிறது .

சிட்னி தாயகம் வானொலியில் பேசியது

 

Series Navigationஅஞ்சலிக்குறிப்பு: விடைபெற்ற தோழர் தா. பாண்டியன் ( 1932 – 2021 )ஆக  வேண்டியதை….