கனத்த பாறை

 

நீரற்ற கார்த்திகை மாதத்துக்

குளம் போலக் கண்கள்

வற்றிக் கிடக்கின்றன.

 

சுரக்கின்ற எல்லா

ஊற்றுக் கண்களும்

அடைபட்டுவிட்டன.

 

பசுக்கள் கூட ஒரு கட்டத்தில்

மரத்துப் போவது போல.

 

அடுத்தடுத்து விழுந்த

அடிகளால் அந்த மரம்

எல்லா இலைகளையும்

அடியோடு உதிர்த்து விட்டது.

 

எங்கோ காற்றடிக்கும்போது

எமக்கென்ன என்றிருந்ததெலாம்

இங்கேயே வீசிய சூறாவளியில்

இருண்டு மருண்டோடின.

 

எரிமலைக் குழம்பாகக்

கொதித்தெழுந்து இப்போது

ஏனோ கனத்த பாறையாகி விட்டது.

 

இப்படியே அதை விடுங்கள்

விரைவில் சரியாகி விடலாம்

சிற்றுளி என்னும்’

சிறு துக்கம் வந்தாலும்

சிதறுண்டு போகும்.

 

———————–

 

Series Navigationகவிதைகள்அஞ்சலிக்குறிப்பு: மாத்தளை கார்த்திகேசு விடைபெற்றார் – இலங்கை  மலையக மக்களின் ஆத்மாவின் குரல் ஓய்ந்தது !