Posted in

கனவு நீங்கிய தருணங்கள்

This entry is part 8 of 16 in the series 6 மார்ச் 2016

லதா அருணாசலம்
……………………………………

நிலைப்படி தாண்டாத
மனதின் இடுக்குகளில்
புரையோடிப் போயிருந்தது
களிம்பிடாமல் வைத்திருந்த
இருத்தலின் காயங்கள்..

நித்தமும் எரிந்து
சமைத்துச் சலித்திருக்கும்
அடுப்பில் பொங்கிப்
பரவியிருந்த பாலின்  கறையை
சுத்தம் செய்யாமலே
உறங்கச் செல்கின்றாள்

அவள் இரவுகளுக்கும்
விடியல்களுக்குமான
இடைப் பட்ட பொழுதுகளில்
வெகுதூரம் பயணிக்கிறாள்

ஆணிவேர்களை
அலட்சியம் செய்து விட்டு
உதிரும் இலையென
இலகுவாய் மிதந்து
காற்றில் அலைகிறாள்..

காய்ந்த சருகுகளில்
பெரும் அனல் மூட்டி
கையில் திணிக்கப்பட்ட
வழிகாட்டி வரைபடத்தை
இலக்குகளோடு சேர்த்து
எரித்துச் சாம்பலாக்குகிறாள்

நிலவற்ற அடர்காட்டில்
மின் மினிப் பூச்சிகளின்
ஒளி பற்றி அடியெடுத்து
நெடுந்தூரம் நடக்கிறாள்..

வாடையில் வெம்மையாய்
வெப்பத்தில் குளிராய்
மழையில்  வேட்கையாய்
தனக்குத் தானே இயற்கையை
தகவமைத்துக் கொள்கிறாள்

பயணத்தின் முடிவில்
ஒரு பால்வீதி வருகிறது..
நீந்த யத்தனிக்கும் முன்
விடியலின் ஒளி வீச்சில்
நிறம் மாறுகிறது பாதைகள்..

கரி துடைக்கும் துணியால்
பால்கறையை சிரத்தையாக
சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள்
கனா நீங்கிய தருணங்களின்
சாயல்கள்  சிறிதுமற்று…

Series Navigationதொடுவானம் 110. தமிழகத்தில் திராவிட ஆட்சி.பால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *