கற்பு நிலை

Spread the love

சேயோன் யாழ்வேந்தன்

கற்றறிந்த சான்றோர்கள்
யாருமில்லாத சபையொன்றில்
ஒரு கட்டத்தில் என்னைக் கட்டங்கட்டி
நாக்கில் நரம்பில்லாத சிலர்
தாக்குதலைத் தொடுத்தபோது
உன் சொல்வன்மை
என் உதவிக்கு வருமென்று
ஒருபாடு நம்பிக்கையோடு
கலங்காது நின்றிருந்தேன்
ஆனாலும் நண்பா உன் நாக்கு
இறுகிய உதடுகளுக்கு உள்ளே
பற்களின் அரணுக்குப் பின்னால்
பதுங்கியே இருந்தது
அதுகூடப் பரவாயில்லை,
அன்று அகம் பேசாத உன் நாக்கு
பின்பு புறம் பேசிய செய்தி
பிறர் கூறத் தெரிந்துகொண்டேன்
நேருக்கு நேர் நின்று
நான் கேட்கும்போது கூட
உன் நாக்கு என் கண் முன்னே
இரண்டாகப் பிளந்து
இரண்டு மொழி பேசியது.
பிளவுண்ட நாக்கின் விஷம்
பெருந்துயர் செய்யும் நண்பா.
கற்பு நிலையென்று சொல்ல வந்தால்
நட்புக்கும் நாவுக்கும்
பொதுவில் வைப்போம் இனி.
seyonyazhvaendhan@gmail.com

Series Navigationகாற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 2விலங்குகள் பற்றிய நினைவுகளோடு குழந்தை மனம் கொண்டவர்களும் பூனார்த்தி – இறையன்புவின் சிறுகதைத் தொகுப்பு