கவர்ச்சி

அழகர்சாமி சக்திவேல்

நான்கு முறை கல்யாணம் செய்து கொண்டவன் கூட

நடிகையின் போஸ்டரை வெறிக்கப் பார்த்தால்

“அது இயற்கைக் கவர்ச்சி” …அனுமதிக்கும் ஆண் சமூகம்..

பெண் ஆணை வெறிக்கப் பார்த்தால்..

“இவள் ஒரு மாதிரியானவள்”… பரிகசிக்கும் ஆண் சமூகம்

ஓரின ஆண் வெறிக்கப் பார்த்தாலோ

உடனே காறிக் காறித் துப்பும் ஆண் சமூகம்

 

எறும்பு இனிப்பு நாடுவதும் இரும்பு காந்தம் நாடுவதும்

இயற்கை சொல்லும் கவர்ச்சி இலக்கணங்கள்…

பூமி நம்மைக் கவராவிட்டால்

வானத்திலேயே வட்டமிட்டுக் கொண்டிருப்போம்

 

நீந்தும் மீன்… மீன் குழம்பு

இதில் கவர்ச்சி எது? ஆபாசம் எது?

சைவத்திற்கு அசைவம் செய்வதெல்லாம் ஆபாசம்.

 

கவர்ச்சி இயற்கையானது

உங்கள் எண்ணங்களின் மூலம் எழும் ஆபாசம் செயற்கையானது.

கவிதைக்கு சரியான இலக்கணம் இல்லையென்றால்

கவர்ச்சிக்கும் இல்லை.

முற்றிலும் மூடிய சேலையில் வந்து

கெண்டைக்காலைக் காட்டினால் மரபுக் கவர்ச்சி.

எல்லாம் திறந்த நீச்சல் உடையில் வந்து

கைகளால் கொஞ்சம் அங்கம் மறைத்தால் புதுக் கவர்ச்சி.

 

“கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் வித்தியாசம் உண்டு”

விளக்கம் சொல்லிக்கொண்டே…

தொப்புளை இன்னும் கொஞ்சம் தூக்கிக்காட்டுகிறாள் நடிகை காந்தாரி.

அவள் காட்டும் தொப்புள்.. அது கவர்ச்சி…

பார்வையிலேயே தொப்புளுக்குள் போகும் உங்கள் விரல்…அதுதான் ஆபாசம்.

 

சிலுவையில் அறைந்த இயேசுவின் அரை நிர்வாணத்தில்

பக்தி வந்தால் அது கவர்ச்சி

பற்றிக்கொண்டு வந்தால் அது ஆபாசம்.

இந்து கோவில்களின் நிர்வாணச் சிலைகள்.. அது கவர்ச்சி

கேலி செய்யும் பிற மதங்களின் சிந்தனைகள்..அதுதான் ஆபாசம்.

 

கிரேக்கத்தின் நிர்வாண தெய்வங்களின் குஞ்சுகளில்

ஆண்மையை கண்டவன் கிரேக்கத்தான்

ஆபாசத்தைக் கண்டவன் நம் பட்டிக்காட்டான்.

சமண சமூகத்தின் அமண மகாவீரரின் குஞ்சை

குனிந்து கும்பிடும் சமூகத்தில் எங்கும் இல்லை ஆபாசம்.

 

வெற்று மார்பை ஆண் காட்டினால் கவர்ச்சி

பெண் காட்டினால் அது ஆபாசம்

ஆணாதிக்க வரையறையின் சுயநலங்கள்.

கோவணம் வரை ஆடையைக் குறைத்துக் கொள்ளும் ஆண்

தொடை காட்டும் பெண்ணின்

ஆடையில் மட்டும் ஆபாசம் காணலாமா?

 

ஓரினத்துக்கும் கவர்ச்சி காட்ட ஆசைதான்.. ஆனால் கஷ்டமோ கஷ்டம்..

நாக்கை சப்புக்கொட்டிக் காட்டினாலும் ஆபாசம்.

மார்புக் காம்புகளைத் முறுக்கிக் காட்டினாலும் ஆபாசம்.

முன்புறத்தைத் தடவினாலும் ஆபாசம்.. பின்புறத்தை தடவினாலும் ஆபாசம்.

ஓரினத்தின் கவர்ச்சி குன்றிலிட்ட விளக்கல்ல..

குடத்துக்குள் ஜொலிக்கும் விளக்கு.

 

பெண் ஆணைப் பார்த்தால் கூச்சப் படலாம்..

மேலாக்கை இழுத்து மூடி மறைக்கலாம்.

ஆண் பெண்ணைப் பார்த்தால் கூச்சப் படலாம்.

பேண்ட் ஜிப்பை சரி செய்து கொள்ளலாம்.

ஒரினத்திற்கும் கூச்சம் உண்டு..

ஆனால் காட்டுவதற்குத்தான் மார்க்கமில்லை.

 

கூச்சம் வந்தால் ஓரினம்.. தேள் கொட்டிய திருடனாகும்…

கூட்டத்திலே..இயற்கையாய் வரும்

குறுகுறுப் பார்வையை மறைப்பதற்காய்

விட்டத்தைப் பார்த்து… தரையைப் பார்த்து..

வலப்புறமும் இடப்புறமும் முகம் திருப்பி சன்னல் பார்த்து

கண்களை மூடி…கவனம் பிசகி…

உடைபட்ட சிதறுதேங்காயாய் தெறிக்கும் ஓரினக் கூச்சங்கள்.

 

கூச்சங்களாலேயே…

வேலைவாய்ப்பை இழக்கும் ஓரினம் ஏராளம்.

ஆண் பெண்ணின் அடிக்கவர்ச்சி மீது

ஓரினத்தின் பார்வையும் இயற்கையானது என்பதை

சமூகம் எப்போது உணரும்?

எல்லா இனக் கூச்சங்களையும்

இனி நாம் அனுமதிப்போம்…ரசிப்போம்.

 

ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல்

 

Series Navigationகார்த்திகா மகேந்திரனின் ‘Subramanya bharathi and other Legends of Carnatic Music’ எனும் நூலின் அறிமுகமும், இன்னிசை நிகழ்வும்குடிப்பழக்கம்: மாணவர்களின் கதறல்