கவிஞர் ’சதாரா’ மாலதி (19.6.1950 – 27.3.2007)

This entry is part 2 of 9 in the series 16 ஜூன் 2019

தரமான கவிஞர் சிறுகதையாசிரியர், திறனாய்வாளர். ஆர்வம் குறையாத வாசிப்பாளர். அவர் அமரராகி ஏழெட்டு வருடங்கள் ஆகிவிட்டன.

அவர் இறந்த பின் அவருடைய 20 கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவையும் மூலக்கவிதைகளுமாக ஒரு சிறிய தொகுப்பு வெளியிட்டேன். அநாமிகா ஆல்ஃபபெட்டின் சிறிய துவக்கம் அந்த நூலில் தான் ஆரம்பமாயிற்று.

தணல்கொடிப் பூக்கள், மரமல்லிகைகள் என மூன்று நான்கு கவிதைத் தொகுப்புகள், அநாமதேயக் கரைகள் என்ற சிறுகதைத் தொகுதி, ஆண்டாள் திருப்பாவை குறித்த திறனாய்வுக் கட்டுரைகள் அடங்கிய உயர்பாவை என்ற நூல்(சந்தியா பதிப்பக வெளியீடு) என குறிப்பிடத்தக்க படைப்புகளைத் தந்திருக்கிறார். திண்ணை இதழ்களில் அவருடைய கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் தொடர்ந்து வெளியாகின.

அவருடைய தாயாரும் எழுத்திலும் வாசிப்பிலும் ஆர்வம் கொண்டவர். கோமதி என்ற பெயரில் எழுதிவந்த அவருடைய மூன்று சிறுகதைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

அன்று நான் வெளியிட்ட ‘சதாரா’ மாலதியின் 20 கவிதைகள் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு இடம்பெறும் நூலை இன்று கிண்டில் பதிப்பாகவும் ( மின் நூல் – இதில் தமிழிலான மூலக்கவிதை மற்ரும் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு இரண்டுமே இருக்கும்)) அமேசான் Paperback பதிப்பாகவும்(இதில் அவருடைய கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு மட்டுமே இருக்கும்) வெளியிட்டுள்ளேன்.

அயல்நாட்டில் இருக்கும் அவருடைய மகளுக்கு(மருத்துவர்) விவரம் தெரிவித்து, இது ஒரு புது முயற்சி என்றும் ஏதேனும் வருவாய் கிடைத்தால் அவருக்கும் அதில் ஒரு பங்கு உண்டு என்றும்( வரும் என்று பெரிய நம்பிக்கையில்லாவிட்டாலும்கூட!) தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பி அனுமதி கேட்டபோது, ஆர்வமாக அனுமதியளித்ததோடு அப்படி ஏதேனும் வருவாய் கிடைத்தால் தன் பங்கை ஏதேனும் ‘நல’ காரியத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளும்படியும் தெரிவித்து உடனடியாக பதில் அனுப்பினார். அவருக்கு என் நன்றி.

இந்தச் சிறிய நூலை அமேசான் வழி பதிப்பிக்கும்போதுதான் சதாரா மாலதியின் பிறந்தநாள் ஜூனில் வருகிறது என்பதும் நூலிலிருந்து அறியக் கிடைத்தது!

நூலில் இடம்பெறும்’சதாரா’ மாலதி’யின் கவிதை யொன்றும் அதற்கான என் ஆங்கில மொழிபெயர்ப்பும் இங்கே தரப்பட்டுள்ளது.

1.காதலர்

காதலர் தினத்தில்
சந்திப்பர்
காதலரல்லாதவர்
திருமண தினங்கள்
போல்.

காதலர் சந்திப்பதில்லை
இருப்பர்.
சொட்டச் சொட்டத்
தீக்குளியில் அறுகும்போது
காதலர் இருப்பர்.

பரஸ்பர பரிசுக்கென்று
அவர்களுக்கு உலகங்கள்
வாய்ப்பதில்லை.
பரிசுகள் வாய்க்கும் நேரம்
உலகங்களில் அவர்களில்லை.

ஆம்
தெய்வங்களும் காதலர்தாம்
ஆவிகள் போல்.

(*மரமல்லிகைகள்’ தொகுப்பிலிருந்து)

1) Lovers

They meet on Valentine’s Day 
Those no lovers _
as in wedding days.

Lovers don’t meet. They Be.
When all drenched in fire 
and break apart
They Be.

For mutual gifts 
they have no Worlds.

When gifts happen 
Worlds don’t have them.

Yes. Gods too are 
lovers-like 
Spirits.

Series Navigationநியாயங்கள்புகுஷிமாவில் சிதைந்த நான்கு அணு மின்சக்தி உலைகளில் யூனிட் -3 வின் தீவிரக் கதிரியக்க யுரேனிய எரிக்கோல்கள் முதன்முதல் நீக்கப்பட்டன
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *