கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைகள் சில(அவருடைய வலைப்பூவிலிருந்து)

கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைகள் சில(அவருடைய வலைப்பூவிலிருந்து)

poemsvaid

  1. மொழியற்ற உலா

 

தவழும் பூமியை நெருடும்
ஈரக் கிரணங்கள்
இளங்காலை.

முத்துக்கள்  பூத்த மொட்டுக்கள்
இலைகள  சூடிக் கொண்டு
சிரித்துப் பார்க்கும்;சின்ன வாய் திறந்து
வானவில்லைத் தரித்த மரங்கள்
தோகை விரிக்கும் வழியெங்கும்.

வழக்கத்திற்கு வளைந்து கொடுக்காத
வானம் முகில்களால்
எழுதி எழுதிக் கலைக்கும்
மொழியற்ற கவிதைகள்..
பொழுதற்று.

வேளைக்கு ஒரு நிறம் பூசித்
தன்னழகை விண்ணில் தேடியவாறு
அண்ணாந்து கிடக்கும் கடல்.

காற்றில் தள்ளாடும் மலரென மழலைகள்
புல்வெளியில் கூவிக் குதிக்கும் ஆனந்தத்தால்
இயற்கையின் எழில் ஒரு கணம்
தோற்றுப் போகும்.

2.ஞானத் தேநீர்.
————————–

அந்தக் கடைக்கு நாங்கள்
அடிக்கடி போவது
அவள் தரும் போதைகாகத் தான்

கொஞ்சும் அவள் பேச்சிடையில்
விம்மும் பெருமேச்சால்
படபடக்கும் அவள் நெஞ்சு.

நாற்காலிகளின் இடைவெளிகளில்
அன்னத்தின் நளினத்துடன்
நகரும்…நெருங்கும்…குலுங்கும்…குனியும்
அவள் பணிவிடைப் பாங்கு
நாங்கள்  பார்த்துத் தீராத கவர்ச்சி

எங்கள்  சுவைத்த கிண்ணங்களில்
அவள் ஸ்பரிஸத்தின் எச்சம்
சுவைக்கு சுவையூட்டும்

பார்வை கிறங்கிய இருட்டில்
அவள்  உடலை
உருட்டிக் கொண்டேயிருக்கும்
எண்ணங்கள்.
வீடு திரும்பும் வரை!

ஆனால் இன்று அவள்
அந்த”  அவளாய் இல்லை.
உடம்பு வேறு தான் வேறாய்
உட்கார்ந்திருக்கிறாள்.
ஈ  விரட்டுவது  போல்
எங்களை வரவேற்கிறது அவள் கை.

நரைத்த கூந்தலுடன்
கறுத்த பற்களிடையில்
ஒழுகி வரும் சிரிப்பில்
உடலின் ஓய்ச்சல்  வழிகிறது….

இருந்தாலும்
அவளிள்  ஊறும்  பிரியமோ
மலர்ந்து பரவும் மனோரஞ்சிதம்!

அவளைப் பார்த்த கணம்
வெறியடங்கி
சுகத்தின் மடியில் ஆழ்கிறது  காமம்
காலத்தின்  மாயப் பூச்சழிந்து
கருணை பரவுகிறது…காதலாக.
போதையற்ற  போதம்
பரவுகிறது  உள்ளெங்கும்.

திரும்பும் வழிகளில்
உலகம் மூப்பற்று
உள்ளம்  மிதக்கிறது
நிர்வாணமாய்.

  1. சொல்ல நினைத்தேன்

 

இன்றைய  வெளிச்சத்தில்
இசைந்து  வாழ்
நாளை என்பது கற்பனை இருட்டு
நினைத்து  மருகுவது  பேதமை
இரண்டையும்  இயக்குவது
ஏதோ  ஒரு  உண்மை
இன்னதென்று  புரியாத
எண்ணங்களின்  இயலாமை

 

 

  1. விழித்த போது

 

இரவின் மிச்சம்  இன்னும்
இருக்கிறது
காற்று  இன்னும்  தோட்டத்தைத்
வருடுகிறது.
இளங்காலை  இலைகளில்
பளபளத்து  வழிகிறது;
குஞ்சுக் கதிரின்  மழலை ஈரம்.
நெஞ்சுக்குள்  பஞ்சுப்பூவைப்
போல்
ஒரு  புதுச்  சொல்.

 

5.வேற்றூரில் ஒரு காலை

அசையாமல் அசைந்து

காற்றை மெல்லக் காட்டிக் கொடுக்கின்றன..
மேகங்கள்.

பறவைகள் பூத்த மரங்களின் கன்னம் சிவந்து
கனிகள் பாடுகின்றன காலைஇசையை..

துவளும் பூமியை மெள்ளத் தடவும் கிரணவிரல்கள்
கிளுகிளுக்கின்றன  பசுமை சிலுசிலுத்து

வழக்கத்திற்கு அடிமையற்ற வானம்
உன்னத ஒவியங்களை ஓயாமல்
எழுதிக் கலைத்துக் கொண்டே  சிரிக்கின்றன

வாழ்வுக்கும் சாவுக்கும் வித்தியாசமழிந்த புள்ளியில்
மௌனத்தில்  சயனித்திருக்கிறது உள்மனம்..

தற்காலிக மரணத்தின்
அழகான சமாதி வரிசைகளாக
சாலையின் இருமருங்கிலும்
உறங்கும்  வீடுகள்
உயிர்களை தாலாட்டியவாறு….

 

Series Navigationபொன்னியின் செல்வன் படக்கதை -3கவிஞர் வைதீஸ்வரனின் படைப்புலகம்