கவிதைகள்

Spread the love

நாகராஜன் நல்லபெருமாள்

மௌனபயம் கலந்த
மயான அமைதி

பூக்கப் பயந்தன செடிகள்
கனிய பயந்தன காய்கள்
பறக்கப் பயந்தன புட்கள்

சிறையிட்டுக்கொண்டன யாவும்
தமக்குத்தாமே

முறையிட்டுக்கொண்டன
மூடிய வெற்றறைகளுக்குள்

எக்காளமிட்டு திரிகிறது
தெருவெங்கும் பீதி

நெஞ்சின் ஆழத்தில்
விசும்புகிறது மரணஓலம்

பேருந்து நிறுத்தங்களே
வாழிடமாய்
மண்ணில் புதைந்தன சாலைகள்

நீரின்றி சோறின்றி
திரைகடல் ஓடும் கூட்டம்

இறந்தும் உயிர்த்திருக்கிறது
சண்டிமையின் மிச்சம்.

28.09.2014

——————————-

பிரளயத்தில் பெயர்ந்து தள்ளாடி
மிதக்கும் மலையுச்சியில்
ஏங்கி தவித்திருக்குது குருவி
நனைந்த சிறகுகளுடன்
மீண்டுமொரு சூரியனின் வரவுக்காக.

அசைந்தாடும் கொடியின் இலையில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
கூட்டிலிருக்கும்
பட்டுப்புழுவிற்கு தெரியவில்லை
கூட்டை உடைத்து பறப்போமா
பட்டுநூலுக்காக
கூட்டோடு வெந்து மடிவோமா?

வெயிலின் உக்கிரத்தில்
தார்ச்சாலையில்
நா வறள ஓடிக்கொண்டிருப்பவன்
தூரத்தில் மினுங்கும் தண்ணீரைத்தேடி
விரைகிறான்
தாகம் தீர.

தூரத்து பனையுச்சியில் தொங்கும்
பானையில் பதனீர் இருக்குமென
மயங்குது மனது
கள்ளின் போதையில்.

சுவைமறந்து குடிக்கிறாய்
தேனை
ஆயிரமாயிரம் தேனீக்களின்
பாவத்தை சுமந்துகொண்டு.

உள்ளீடற்ற பொருண்மையாய்
உருள்கிறது உலகம்
தண்ணீரின் மீது
எண்ணிலடங்கா இரகசியங்களை
தன்னுள் புதைத்துக்கொண்டு.

பிள்ளைகளின் சேட்டைகளை
பொறுக்கமுடியாதபோது
நினைத்துக்கொள்ளவேண்டும்
அப்பாக்களையும்
அப்பாவிகளையும்.

அலைகடலுக்கும்
ஆழ்கடலுக்குமாய்
அலைக்கழிபவனுக்கு
மீனென்ன
முத்தென்ன
மூச்சிருந்தால் போதும்.

Series Navigationமிதிலாவிலாஸ்-5ஹைதராபாத் பயணக்குறிப்புகள்: சுப்ரபாரதிமணியன்