கவிதைகள்

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

சூழல்

 

அலை நீர் காலுராய

அந்த கடற்கரையில்

பின்னிப் பிணைந்து அமர்ந்திருந்தார்கள்

அந்த யுவனும்

யுவதியும்

அவர்களைப் பொருத்தமட்டில்

அது அவர்களுக்கான உலகம்

அவர்களின் உலகை

அவர்கள் இரும்புக் கதவு கொண்டு

அடைத்திருந்தார்கள்

ஊடலும்

கூடலும்

பின்னர் சின்னதாய்

சில சில்மிஷங்களென

எல்லாம் முடிந்த தருவாய்

தன் துப்பட்டாவை உதறியபடி

அந்த யுவதி எழ

நிறைய பேர்

துரித கணத்தில்

அந்த இரும்புக் கதவின் வாயிலாக

வெளியேறலானார்கள்.

junaid

புது வீடு

 

இந்த வீட்டிற்கு வந்து

இரண்டு வாரமாகி விட்டிருந்தது.

யார்

எப்படி

என்னவென்ற

அண்டை வீட்டுக்காரர்களின் சூட்சமம்

இன்னும் விளங்கியபாடில்லை.

புதிதாக வந்திருக்கிறோமென

நா நுனி வரை வார்த்தைகள் எம்பி

இறதியிலான ஒரு மௌனப் புன்னகையில்

வெறுமனே

கடந்து கொண்டிருக்கிறோம்.

இரண்டு வாரமாக.

புதியவர்கள்

எங்களுக்கு அவர்களும்

அவர்களுக்கு நாங்களும்.

யார்தான் துவக்குவதென்ற

நெடிய மௌன ஆலாபனைகளை

உடைத்தவண்ணம் வந்தான்

என் ஆறு வயது பைய்ன்

இந்த பொம்மை பக்கத்து வீட்டு

ஆண்ட்டி தந்தார்களென.

 

 

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Series Navigationதொடுவானம் 182. தலையில் விழுந்த இடி.கம்பனின்[ல்] மயில்கள் -1