கவிதைகள்

 அருணா சுப்ரமணியன் 

1. வீணாகும் விருட்சங்கள்…


வசந்த கால

வனத்திற்குள் 

எதிர்ப்பட்ட

ஏதோவொரு 

மரத்தில் 

கட்டப்பட்ட 

சிறு கூடு 

ஏந்தியுள்ள 

முட்டைகள் 

மழைக்காற்றில்  

நழுவி விழ…

வனத்தின் வெளியே 

வேரூன்றி 

கிளை பரப்பி 

காத்திருந்து 

வீணாகின்றன 

விருட்சங்கள் …..

2.  எட்டாக்கனி 


உயிர் காக்கும் 

தொழில் ஒன்றே தானா 

இவ்வுலகில் 

பிழைத்து கிடைக்க..

கனவென்றும் 

கடமையென்றும் 

கடிவாளம் கட்டிவிட்டு 

பந்தய குதிரைகளாக்கி 

வரிசைகளில் 

காத்து கிடக்கிறோம்....

இலவசமாய் 

இனியனவாய் 

கிடைக்க வேண்டியன 

எல்லாம் 

எளியோருக்கு 

எட்டாக்கனிகளாய் ..

3. மூளைச்சாவு …

சாலை விபத்தில் 

அந்தரத்தில் 

தூக்கி எறியப்பட்டு  

ஊசலாடுது உயிர்..

காக்கும் கடவுளர் 

காத்து நிற்கின்றனர் 

எலும்பும் தோலுமான 

சோமாலிய குழந்தை 

அருகில் கழுகைப்  போல..

Series Navigationஹாங்காங் தமிழ் மலரின் நவம்பர் 2017பூகோளம் வெகு விரைவாகச் சூடேறுகிறது விஞ்ஞானிகள் அஞ்சியதுபோல் !