கவிதைகள்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 8 of 13 in the series 13 மே 2018

தமிழ் உதயா, லண்டன்

துருவங்களைப் பிணைக்கும்
கடல் மேல் மடித்து வைக்கிறேன்
மிதக்கும் சிறகுகளை,
ஏற்கனவே அவை பறந்திருக்கின்றன,
கைகளை பின்னியபடி
இரவு என்னோடு உறங்கிக் கிடந்தது, 
சதுப்பு நிலத்தில் சில ஆட்காட்டி முட்டைகள் 
தவழ எத்தனிக்கும் கணங்களை 
நிர்வாணமாய் நிகழ்த்திக் கொண்டிருந்தன, 
மௌனத்தின் நாக்குகளால் 
சொற்களை பிசைகிறது 
வார்த்தைகளின் விரல்கள், 
பால் நிறத்து மணலில் 
பொய்த்துக் கரையும் வரைபடத்தில்

நண்டுக் குஞ்சுகளுக்கு
வாழ்க்கைக்கான பாதை வரையவில்லை
பகலின் முகமெங்கும் வடியும் 
இரவின் நிழலைப் புசிக்கிறான் கடற்சூரியன் 
ஆக 
புலர்தல் பூக்களுக்கு தொடக்கமா முடிவா?

 

00

 

மொழி கிள்ளி வரையும்
வனப்புமிகு வார்த்தைகளில்
ராட்டினமாய் சுழல்கிறது
குரூரத்தின் நகைப்பு மிகு குரல்

இருளோவியத்தில் கோடுகள்
படர்ந்து மிளிர்வது
சாத்தியமில்லை என்கிறாய்
பசலை படர் வெம்மையில்
நிறங்களைக் கரைத்தல் நிஜமென்கிறேன்

தூரிகையின் வேர்களில்
நறுமணத்தைப் பரவவிடுதல்
கிக்கடுவ முருகைக்கற்பாறைகளை
கண்டதும் தெளிந்திருந்தேன்

மனித ஒப்பனைகள்
கையறு நிலையொன்றில்
உணர்த்தி விடக்கூடும்
தலைகீழாய் தொங்கும் தெருக்களில்
புழுதி கரைத்த மழைத்தூறலை.

 

 00

விளிம்பில் விரிந்த நிகழ்வுகளுக்குள்
யாரோ ஒருவர் பொழுதுகளை
மீட்பித்தவராய் இருக்கிறார்

இரவு முழுவதும் தொந்தரவு செய்யும் 
கடிகாரமுட் சப்தத்தை 
நிறுத்தி வைப்பது அவ்வளவு எளிதல்ல

முதுகில் குத்தப்பட்ட துரோகக்கத்தியில்
புறக்கணிப்பின் துருவேறி இருந்தது

உயிர்ப்புறும் சுவடுகள் அழிவதில்லை
அலையின் பிடியில்
நிராகரித்தலுக்குள் அகப்பட்டு
பூப்பதை நிறுத்துவதில்லை
இருள் படர் வனம்

உதாசீனம் பணப்பிசாசுகளின்
பிச்சைப் பாத்திரம் போன்றது
தெறித்து வெளித் துள்ளும்
கனத்த சகதியாலானது

பேரிரைச்சலோடு நுரைத்த மழை
அழுக்குகளை கழுவுவதில்லை
மாறாக மிதக்கிறது
இது ஆக்கிமிடீஸின் விதி

முதற்பக்கமும் முடிவுப்பக்கமும்
படபடக்கின்றன வாசிக்க முன்னரே
வாழ்வுப் புத்தகத்தில்
இடையில் எத்தனை பக்கங்கள்
ஞாபகமூட்டக் கூடும்
பிரதிபலனில்லா அன்பின் நிமித்தங்களை

 

00

 

ஒரு பூவின் ஈரமௌனத்தை
மாலை கட்டுகிறேன்
அது வேர்களுக்கிடையில்
வாசனையேற்றுகிறது,
நீ சுடர்கிறாய்
நான் எரிகிறேன் 
இளவேனில் நீண்டு எரிக்கிறது,
காகிதத்தாள்களில் எப்படி என்னை நிறைக்க ?
இளம்பூச்சி ஒன்று 
என்மேல் ஊர்ந்து கடக்கிறது 
எங்கேனும் வலைபின்னி இருக்கிறதா சிலந்தி 
தேடித்தேடி நினைவுகளைக் கிழிக்கிறேன்,
புழுதி ஏறாத சிலிக்கன் தெருக்களில் 
புத்தகத்தைக் குடிக்கிறேன் 
உறைந்த மீதியாய் கிடக்கும் 
என் மண்ணும் மனிதர்களும்,
அன்றொருநாள்
விம்மிய விமானம் 
கசிந்த மார்பை உப்பால் கரைத்தது 
உயிர் மீதான காதலை 
உன் முத்த மொழி கற்றுத்தந்தது.
கடல் எப்போதும் கனிந்து கொண்டே இருக்கிறது 
அது எப்படி உறைய முடியும் 
ஒருமை படிந்த ஒளி 
துடித்துக் கொண்டே இருக்கிறது 
அதற்குப் பெயர் ஏதுமில்லை 
அது என் நீ.

 

00

 

முதன்முதலாக உணரும்
மழைத்துளி ஒன்றின் சிலிர்ப்பை,
அப்போது தான் பிறந்த
பிஞ்சுக்காலொன்றின்
பஞ்சுப் பொதியை ,
உன் மீதான நேசிப்பை,
நிலாக்கீற்றில் துயில வைக்கிறேன்,
நினைவுகளை அணிகிறதும் 
கழற்றி வீசுவதுமான 
சஞ்சார வானத்தில் 
இறந்து தொங்கும் 
கடிகார ஊசல்களின் முனைகளில்

மௌனமேறி அமர்ந்துவிடுகிறது.
அதே மழைத்துளி ஒன்றின் சிலிர்ப்பை,
அதே உள்ளங்காலொன்றை,
அதே நேசிப்பை,
இன்னுமொரு பொழுது
உணர்தல் என்பது 
இடைவெட்டாத பாதையொன்றில்
பயணப்படும் புள்ளி போல,
குரூரத்தின் நெடிய வார்த்தைகளுக்கும்
குருதி தோய்ந்த நினைவுகளின்
முட்கீறல்களுக்கும்
வியப்புத்தான்.
நிதானம் இழந்து தீண்டுவாரற்று 
உரையாடிக் கொண்டிருக்கும் 
இரு முட்களில் 
நிலைநிறுத்தப் பட்டிருக்கிறது 
கடந்து போன காலம்,
பலவீனங்களின் மூளை மடிப்புக்குள் 
மிதந்து கொண்டிருக்கும் 
மனிதர்களின் வாழ்வை 
எழுதியேனும் படித்துக் கொண்டிருக்கிறேன்.

 

 

Series Navigationஇரக்கம்தொடுவானம் 221. சோதனைமேல் சோதனை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *