கவிதைகள்

Spread the love

அன்றொரு நாள் – என்றொரு நாள்

இலைகளை மட்டும் நேசிக்கும் வக்கிரப் பெருவழுதி என்று

தன்னை அடையாளப்படுத்திக்கொண்டான் அன்றொரு நாள்

அந்த நவீன தமிழ்க்கவிஞன்.

‘செலக்டிவ் அம்னீஷியா’வில் தோய்த்தெடுக்கப்பட்ட சமகாலத் தமிழ்க்கவிதைச் சரித்திரத்திலிருந்து புறந்தள்ளப்பட்டான்.

கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் அதையும் கேள்வி கேட்காமல் வெளியிட்டார்கள் தமிழிலக்கியத் தாளாளர்கள்.

அண்டசராசரமெங்கும் விண்டில கண்டு ஆனந்தமாய்த் திரியும் கவிமனதிற்கு அதெல்லாம் ஒரு பொருட்டா என்ன!

’வாழ்ந்து மறைந்தவருக்கான உரிய மரியாதையோடு’

அந்த வரலாற்றாசிரியர் குறித்து இதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்:

அவர் எழுதிய ஒரு கவிதையும் நினைவுகூரப்படுவதில்லை.

’விலக்கப்பட்ட கனி’யான கவியிலிருந்து கிளர்ந்தெழும் வித்துகள் தமிழ்க்கவிதை வெளியெங்கும் பிறவிப்பெருங்கடலாய்!

0

தக்க இடத்தில் தூய தமிழ்; தேவைப்பட்டால் சமசு[?]கிருதம்.

அரசுப்பணம் ஆயிரங்கோடி விரயமாகலாம், 2ஜி, கல்மாடி, நிலக்கரியில்.

ஆன்ற மொழிபெயர்ப்புப்பணிகளுக்குப் பயன்படலாமோ? – அநியாயம்.

’ஆங்கிலப்புலமை யிங்கே யாருக்குமில்லை; தான் பெற்ற இன்பத்தை ஊருக்குக் கைமாற்றும் மாண்புடையோர் இல்லவே யில்லை’.

என்றவாறு புறப்படும் வன்மம்நிறை வசவுகள்.

இங்கே உழைப்புக்கேற்ற ஊதியமின்றி பிழைத்துவரும் இனம் படைப்பாளிவர்க்கம்.

இதை எள்ளிநகையாடுவோரை உன்மத்தர் என்னாமல் வேறென்ன சொல்லியழைக்க?

விடங்கக்கும் நாகங்களைக் கண்டால் விலகிவிட வேண்டுமா? நையப்புடைத்துவிட வேண்டுமா?

ஐயம் தீர்ந்தபாடில்லை.

என்றொரு நாள் எழுத ஆரம்பித்த கவிதை.

நீளும் இன்னும்.

0

Series Navigationபேராசிரியர் அர. வெங்கடாசலம் – திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் -ஓர் உளவியல் பார்வை – வள்ளுவ ஆன்மீகம்பிரபஞ்சத்தின் மகத்தான அணுவியல் மர்மங்கள் : மூலக்கூறில் அணுக்களின் நர்த்தனம் .. !