கவிதை

உதயசூரியன்

 

வார வாரம்

வந்து குவியும்
காதல் கடிதங்கள்
சில
அவளின் குணம்  பார்த்து
பல
அவளின் அழகைப் பார்த்து
அவளின்
வசீகர புன்னகை
இவர்களுக்கு
அவளின்
குறிப்பை உணர்த்திவிடும்
மயிரளவு
தூரம்
ஒழுக்க சீலர்களின்
கால்களும்
இவளின் கால்களும்
அவர்களின் பேச்சு
பணியை பற்றித்தான்
சில சமயம்
தேவையில்லா அறிவுரைகள்
எனினும், என்றும்
இவளின்
கால்கள் நகர்ந்தது
இல்லை
வசீகர புன்னகையும்
குன்றியதில்லை
அவர்கள் கண்டிக்கையில்
இவளின் தலை
மத்தளம் இசைக்கும்
சாதாரண மனிதர்கள்
இவளின்
இருக்கையை பிடித்து
இவளிடம் கிசுகிசுப்பர்
பல கிசுகிசுக்கள்
சினிமா பற்றி
சில கிசுகிசுக்கள்
கவர்ச்சியின்
எல்லை மீறும்
பதிலுக்கு
இவளும் கிசுகிசுப்பாள்
கேலியும் செய்வாள்
ஐந்து நிமிடத்தில்
கண்கள் வேலையை
நோக்கிவிடும்
வயதானவர்கள்
இவளிடம் பேசுவதில்லை
மதிய விருந்துக்கு
மட்டும் தனியாக
அழைப்பர்
அதுவும்
திங்கள் முதல் வெள்ளி வரை
பல சமயங்களில்
வசீகர புன்னகை
பதிலாய் அமையும்
சில சமயங்களில்
சொல்லிக்கொள்ளாமல்
ஒரு நாள் விடுப்பு
எடுக்கப்படும்
கேட்டால்
காய்ச்சல்
தலைவலி
சாக்கு போக்குகள்
அந்  நாட்களில்
இவளின் வீட்டில்
இவளின் கைப்பக்குவத்தில்
இவளின் பெற்றோருக்கு
மதிய விருந்து
படைக்கப்பட்டிருக்கும்
ஒரு நாள்
இவளின்
ஆசை நிறைவேறியது
அது
பெற்றோர் பார்த்து
நிச்சயித்த திருமணம்
இப்பொழுதெல்லாம்
இவள் வேலைப் பளுவை
குறைத்து விட்டாள்
வசீகர புன்னகை மட்டும்
மாறவில்லை
இன்னும்
இவளை
துகிலூரிக்க
நினைக்கும்
ஓநாய்களின்
செயலும் , பேச்சும்
குறையவில்லை

Series Navigationசூளாமணியில் சமயக் ​​கொள்​கையும் நிமித்தமும்வனசாட்சி அழைப்பிதழ்