கவிதை

கோசின்ரா

 

என்னை துரத்திக்கொண்டிருக்கும்

ரகசியங்கள் தின்று வளர்ந்த

பூர்வீக பற்கள்

பசியோடு காத்திருக்கின்றன

ஆதிகாலத்திலிருந்து

இரை போட்டு வளர்த்தவள் நீதான்

பசித்த அதன் குரலில்

ஒளிந்திருக்கும் பாம்புகள் வெளியேறி வருகின்றன

என் நாட்களைக் விழுங்கி பசியாறுகின்றன

நெடு நாட்கள் தப்பிக்க இயலாது

உன் வாசம் வீசும் ஒரு ரகசியத்தை வீசியெறி

உடலின் முடிச்சுகளை அவிழ்த்துவிடு

உன் சுவாசம் பதுங்கும்

பின்புறக்கதவுகள் திறந்தே இருக்கிறது

நீலம் பாரிக்கும் மெல்லிய ராத்திரியில்

ஆசை பிரசவித்த பெருமூச்சு

உன் வாசலைத் தேடி

ரகசியத்தின் கடவுச் சொல்லை

என் உடலிலிருந்து எடுத்துக்கொண்டு

ஆளப்பறக்கும் அந்த மூச்சை

பெருகுகை வாயால் விழுங்கி

விருட்சங்களாய் விரிந்திருக்கும்

ராத்திரியை வீட்டுக்கு அனுப்பு

புதர்களில் பூத்திருக்கும்

ரகசியங்கள் தின்று களி நடனமாகட்டும்

எனக்குள் ஒளிந்திருக்கும் பசிமனிதன்.

Series Navigationநீர்நிலையை யொத்த…உன்னைப்போல் ஒருவன்