காத்திருங்கள்

Spread the love

மு.கோபி சரபோஜி.

அச்சமின்றி
அமைதியாய்
பதட்டமின்றி
பொறுமையாய் இருங்கள்.

நீங்கள்
தேடுவது போல எதுவும்
காணாமல் போகவுமில்லை
களவாடிப் போகப் படவுமில்லை.

தேடுகின்ற…….
போதிமரம்
அகிம்சை
அன்பு
வீரம்
விவேகம் – இவையெல்லாம்
களமிறங்கி இருக்கின்றன
கணக்கெடுப்பு பணிக்காக……..

நூற்றி இருபது கோடியில்
எத்தனை கோடி
புத்தனும்
காந்தியும்
தெராசாவும்
விவேகானந்தரும் – கிடைப்பார்கள் என
தெரிந்து கொள்ளும் ஆவலில்………

இந்த தலைமுறையில்
இல்லாவிட்டாலும்
அடுத்த தலைமுறையிலாவது
கணக்கெடுப்பை முடித்துவிட்டு
அதனதன் இடத்திற்கு
அவைகள் திரும்பிவிடும்.

அதுவரையிலும்…..
காத்திருங்கள்
நூற்றி இருபது கோடியில்
சில கோடியில்லாவிட்டாலும்
ஒரு நூறுபேராவது
கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையோடு…!

மு.கோபி சரபோஜி.

Series Navigationஜே.பிரோஸ்கான் கவிதைகள்மீள் உயிர்ப்பு…!