காலணி அளவு

Spread the love
ஒரு முறை ஒரு மனிதன், தனக்குத் தகுந்த காலணியை வாங்கச் சென்றான். அவன் தனக்கு காலணி மிகச் சரியானதாக இருக்க வேண்டும் என்று எண்ணி, ஒரு காகிதத்தில் தன்னுடைய காலைப் பதித்து, அதை வரைந்து கொண்டான். அதை எல்லாப் பக்கத்திலிருந்தும் அளந்து, பற்பலக் கணக்குகளைப் போட்டு படத்தைச் சுற்றிலும் கிறுக்கினான். அவன் எழுதியிருந்த அத்தனை எண்களையும் சரி பார்த்தான். ஒன்றுக்கு இரு முறை சரி பார்த்தான்.
இறுதியாக, அவனது படத்தின் துல்லியத்தில் திருப்தி கொண்டு, நீண்ட தொலைவில் இருந்த சந்தைக்குச் சென்றான். பல மணி நேரங்கழித்து சந்தையை வந்தடைந்தான். ஒரு நல்ல காலணி கடையைக் கண்டதும், தன்னுடைய சட்டைப் பையில் காகிதத்தை எடுக்க முயன்றான். அவனுடைய துரதிருஷ்டம். துல்லியமான அளவுகளைக் கொண்ட காகிதம் காணவில்லை.  கால் சட்டைப் பையிலும் தேடிப்பார்த்தான். அங்கும் இல்லை. தன்னையே நொந்து கொண்டு வீட்டிற்குச் சென்று அதை எடுத்து வர, திரும்பி நடந்தான்.
வீட்டை அடைந்ததும், அந்தக் காகிதம் அவனது மேஜை மேலே இருப்பதைக் கண்டு, திருப்தி கொண்டான். “அப்பாடா.. அளவு எடுத்தக் காகிதம் கிடைத்து விட்டது. இனிமேல் மறுபடியும் சந்தைக்குச் சென்று காலணியை வாங்கி விடலாம்” என்று எண்ணி அதை இம்முறை பத்திரமாக எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
அவன் இம்முறை சந்தையை அடையும் போது, சூரியன் மறையும் வேளையாகிவிட்டது.  எல்லாக் கடைகளும் மூடப்பட்டுவிட்டன. அவன் துக்கம் மேலிட புலம்ப ஆரம்பித்தான். எல்லாப் பொருட்களையும் ஏறக் கட்டிவிட்டு வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்த ஒரு கடைக்காரனிடம் தன் வருத்தத்தைத் தெரிவித்தான். கடைக்காரன், வயிறு குலுங்கச் சிரித்து விட்டு, “அட முட்டாளே.. நீ ஏன் காகிதத்தை எடுக்க வீட்டிற்குப் போனாய்? உன்னுடைய கால்கள் உன்னோடு தானே இருக்கின்றன. கடையில் உன் காலை வைத்து அளவு பார்த்து இருக்கலாமே?” என்றான்.
மனிதன் வெட்கத்தால் முகம் வெளுத்து, “நான் என்னுடையக் கணக்கில் அதிக நம்பிக்கை வைத்து விட்டேன் என்று நினைக்கிறேன்” என்று சொல்லி விட்டு, வருத்தத்துடன் வீடு திரும்பினான்.
—————-
Series Navigationபாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-8)ஹைக்கூ தடங்கள்