காலம் தோறும் இசைக்கும் தமிழ் மற்றும் தொன்ம வளங்களும்

Spread the love

 Tripurantaka_-_11th_Century_-_Indian_Art_-_Asian_Art_Museum_of_San_Francisco

செந்தில்
(முகவுரையாக ஒரு கருத்தையும் கவிதையையும் முன்வைத்து இக்கட்டுரையை தொடங்குகின்றேன். இந்தியாவின் மத ஆன்மிக நூல்கள் குறிக்கும் இறை தத்துவங்களும், தெய்வங்களும், மக்கள் வழிபாட்டு முறைகளும் பண்டய இந்திய துணகண்டத்தில் தோன்றிய அறிவியல், தத்துவ புரிதல்களின் குறியீட்டு (Metaphors) வெளிப்பாடே எனலாம்).

உண்மை யாது? (ஐம்பெரும் காப்பியங்களின் பெயர்களினால்)
வளையாத பதி எது?
சிலம்பு சொல்லும் அதிகாரம் எது?
குண்டு அலகேசி எது?
மேகலையும் மணி எது?
சீவகத்தில் உள்ள சிந்தாத மணி!
மேற்சொன்ன வரிகளில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களின் தலைப்புகள் வெறும் ஆபரணங்களை மட்டும் குறிக்கும் சொற்களோ தற்செயலான வரலாற்று நிகழ்வுகளோ அல்ல; இத்தலைப்புகள், தமிழ்  மற்றும் இந்திய நாகரீகம் காலம் தோறும் தேடியும், சிந்தித்தும், வணங்கியும் வந்துள்ள இயற்க்கை சக்திகளை (முறையே காலம், ஊழ் (பேரறம்-மகா விதி), புவிவிசை, வெளி-ஓளி, ஆன்மா-life-force) குறிக்கும் சொற்களாக பொருள் கொள்ள முடியும். இந்த காவியங்களின் கதைகளும், கதை மாந்தர்களும் இயற்க்கை சக்திகள் குறித்த விசாரணையில் உலழ்வதை, இந்நூல்களை கற்றவர்கள் உணர முடியும்.

தமிழின் தொன்மை காலம் முதல் இன்றுவரை, சங்க இலக்கியங்கள் தொடங்கி, நீதி/அற நூல்களிலும், பக்தி இலக்கியங்கள் மற்றும் காப்பியங்களிலும் சில சொற்கள் உருவகமாகவோ குறியீட்டு சொல்லாகவோ, இறை சக்தியை அல்லது இறை அனுபவத்தை வெளிப்படுத்த ஞானிகளாலும், பக்திமான்களாலும், கவிஞர்களாலும் தொடர்ந்து கையாளபடுவதுண்டு. உதாரணமாக, “கழல்” என்ற சொல். இச்சொல், இலக்கிய நயம், இறையனுபவம் என்பதை கடந்து, அறிவியல் தத்துவ புலங்களின் அடித்தளம் கொண்டுள்ளது என்றால் மிகையாகாது. “கழல்” என்ற பதத்தினுடன் தொடர்புடைய பல்வேறு சொற்கள் தமிழ் இலக்கியங்களில் தொடர்ந்து கையாளபடுவதையும் ஆழ்ந்து கற்றவர்கள் உணராலாம். “திருவடி”, “சிலம்பு”, “தண்டை”, போன்ற சொற்களை உதாரணமாக சொல்லலாம். சமஸ்கிருத நூல்களில் குறிப்பிடப்படும் “ஸ்ருதி” என்ற சொல்லுக்கு இணையான பதமாக “கழல்” உள்ளது எனலாம்.
நவீன துகள் விஞ்ஞானமும் (particle physics), அகிலம் மற்றும் பேரண்டம் குறித்த நவீன அறிவியல் புரிதல்களும் (cosmology), உலகை “துகள்களின் சுழல்அதிர்வு தொகுப்பு” என்ற கோட்பாட்டினை உறுதியிடன் எடுக்கும் நிலையில், “கழல்” என்ற பதத்தினை ஒட்டிய பல சொற்களும், அவை குறிக்கும் அனுபவ வெளிப்பாடுகளும், நவீன விஞ்ஞானம் குறிக்கும் துகள் சுழல்-அதிர்வுகள் பற்றிய ஞானம் எனலாம். அகிலம் குறித்து அறிவியல் முறைகள், கோட்பாடுகள் சார்ந்த ஆய்வு முடிவுகளும், பண்டைய இந்தியாவின் வானியல் மற்றும் தத்துவம் சார்ந்த ஆன்மிகம், தியானம், மற்றும் பக்தி கவி உள்ளங்கள் சொல்லும் தரிசனமும் ஒரே திசையில் பயணம் செய்வதாகவே எண்ண தோன்றுகிறது. இதில் குறிப்பாக தமிழ், தமிழர் நாகரீகத்தின் பங்களிப்பு அளப்பரியது. ஃப்ரிட்ஜ்ஆஃப் கப்ரா (Fritzof Capra – Particle Physicist) தன்னுடைய தாவோ ஆஃப் ஃபிசிக்ஸ் (Tao of Physics) என்ற நூலில் இதை பற்றி தெளிவாக எழுதியிருக்கிறார்.
கழல் என்ற பதம் குறித்த குறிப்புடன் இந்த கட்டுரையை நான் தொடங்க காரணம். கழல் என்ற பதம் போன்று, ஆன்மிக, தத்துவ, பக்தி இலக்கியங்களிலும் தொடரும் பல சொற்களும் அவை குறிக்கும் இறை சக்திகளும், உதாரணமாக, சிவன், விஷ்ணு, இந்திரன், ப்ரம்மா, கிருஷ்ணன், போன்றன இயற்க்கை மற்றும் ஆன்மிக அனுபவத்தின் குறியீடுகளே!

“காளி” என்பது “காலாதீதம் – சூண்யம்” என்பதன் குறியீட்டே எனவும், திருமால் என்பது “இருண்ட வெளி” (dark matter) என்பதன் குறியீட்டே எனலாம்.  இவற்றை பக்தி கவிதைகள் என சொன்னாலும் கூட, விஷ்ணுவும், திருமாலும் நீல நிறத்தினுடன் பேரண்டத்தில் உள்ள இருண்ட பொருள் (dark matter) அல்லது விசும்பு என்பதின் குறியீட்டாகவும் இக்கவிதைகள் உரைக்கின்றன எனலாம்.

அக்காலங்களில் அளக்கும் சாதனங்கள் (measurement instruments) இல்லாமல் இருந்திருக்கலாம்; ஆனால், கருத்தியல் சாதனங்கள் (instruments of logic) இருந்தததை அருதியடன் சொல்ல இயலும். வெற்று நம்பிக்கைகளினாலும், மதவாத போட்டிகளினாலும், அறிவியல் தத்துவம் சார்ந்த புரிதல்கள் மறைந்து பொது தளத்தில் எஞ்சி இருப்பவைகள் – விளக்கங்கள் இல்லாமல் தொடரும் மத மரபுகளும், வழிபாடுகளும், வழக்கங்களும் மட்டுமே.
இந்திய துணைக்கண்டத்தில் பிந்தைய காலங்களில் – தத்துவ அறிவியல் புரிதல்களை தவிர்த்துவிட்டு புராணங்களும், மத கொள்கைகளும் – அரசியல் பொருளாதார அமைப்புகளை சாதீய அடுக்குமுறையையாக மாற்றிவிட்டன எனலாம் என்பது என் கருத்து. பிற்காலத்தில் எழுந்த புராணங்கள், அக்காலத்தில் வாழ்ந்த வரலாற்று நாயகர்களின் மீது இக்குறியீடுளை சாற்றி அவர்களை தெய்வமாக்கி, தத்துவ அறிவியல் விசாரணைகளை புனைவு காப்பியங்கள், கதை தொன்மங்களாக மாற்றிவிட்டிருக்க கூடும். முந்திய கால உபநிடதங்கள் முதல், வேதங்கள் வரை – சாதிய அடிப்படையிலான, மக்களையும் அவர்களது தொழில்களையும் அடுக்குமுறையாக மாற்றக்கூடிய கருத்துக்களை மத நிறுவனங்களை உயர்த்தி பிடிப்பதாக தெரியவில்லை. அக்கால தத்துவ விசாரணைகள் சாதீயத்தை சாடுவதோடு அதற்க்கு எதிர் நிலை எடுப்பதையும் அறியமுடியும். இவ்விலக்கியங்களில் மனித பேதங்கள் (உயர்வு தாழ்வுகள், முற்பிறவிப்பலன்கள்), பிரிவுகள் குறித்த கருத்துகள் யாவையும் மனிதர்களின் குண இயல்புகளின் அடிப்படையில் அமைந்தவைகளே எனவும், தொழில் சார்ந்த சாதீயப்பிறப்பு காரணம் அல்ல என்றே உரைத்து கூறுகின்றன. ஆனால், காலப்போக்கில், குறிப்பாக புத்தரது காலத்தை ஒட்டி, சாணக்கியரின் அர்த்த சாஸ்த்திரம் காலம் தொட்டு – அரசியல் போட்டிகளினால், ‘பூசாரிவியல்’ அரசியல்களால் – தத்துவ அறிவியல் விசாரணைகள் முற்றிலும் மறைந்து, திரிந்து மத மரபுகளை திணிக்கும், புராணங்களாகவும், தெய்வங்களாகவும், சாதிய அடுக்குமுறைகளை ஆதரிக்கும் அரசியல் அமைப்பாகவும் தத்துவ விசாரணைகள் மழுங்கிவிட்டதாக தெரிகிறது. குறிப்பாக, சாணக்கியரின் அர்த்த சாஸ்த்திரம் சாதீய அடுக்கு முறையை உறுதிபடுத்தும் நூலாக உள்ளது. ஆனால், இன்நூலுக்கு மூலக்கருத்து எந்த ஒரு வேதாந்த, உபநிடத, தத்துவ நூல்களில் இருந்தும் பெறப்பட்டது அல்ல என தெரிகிறது.
இந்தியாவில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக நடந்த மத போட்டிகளும், போர்களும், மத ஒழிப்புகள் தொடங்கி இந்த நூற்றாண்டு வரையிலான கோவில் யானைக்கு எந்த வித நாமம் சாற்ற வேண்டும் மதவாதிகள் சிலர் உயர் நீதிமன்றம் வரை சென்றதை எல்லோரும் அறிவோம். இந்திய ஆன்மிக அறிவியல் புலங்கள் தெரிவிக்கும் தத்துவ, ஞான மார்க்கங்களை தவிர்த்து மதம் பிடித்த சாதீய பொருளாதாரம், போட்டி வெறுப்புணர்வுகள் வளர்ந்தவிதமும் நாம் எல்லோரும் அறிந்ததே. திருமூலர், “வேதாந்தமாவது வேட்கை ஒழிந்திடம்”; வேதம் ஓதியும், வேதியர் வேட்கை ஒழிந்திடர்” என எதிர்க்குரல் புத்தரை போல எழுப்புகிறார். இந்த குற்றசாட்டு, சாதீய அடுக்குமுறையை சார்ந்து அரசியல், வணிகம் செய்து பிழைத்த அரசர்கள் முதல் ஆண்டிகள் எல்லோர் மீதும் வைக்கபட வேண்டிய ஒன்றே!. இத்தகைய பிறழ்வுகளும், மதவாத அரசியலும், மத இன ஒழிப்புகளும் இந்தியாவில் மட்டும் அல்ல, மற்ற கண்டங்களிலும், நாடுகளிலும், மதங்களிலும் தொடர்ந்து நிகழ்வதே!
புத்தன் தொடங்கி, திருவள்ளுவர் முதல், சித்தர்கள் கால திருமூலர் வரையிலான கலகக்குரல்கள்,மத சாதீய மரபுகளை சாடியதோடு மட்டுமல்லாது, பண்டைய உண்மையான தத்துவ அறிவியல் விசாரணைகளை அழியவிடாமல் தொடர்ந்து காத்து வந்திருக்கின்றன. ஆனால், கடந்த 300 வருடங்களாக, ஐரோப்பிய, மார்க்சிய, பெரியாரியம் சார்ந்த கலககுரல்களோ, இந்திய தத்துவ, ஞான மரபுகளையும், மத, சாதீய வழக்கங்களையும், அரசியல் அமைப்புகளையும் பிரித்து பார்க்காமல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகவும், எதற்க்கும் உதவாத குப்பைகளாகவும் அடையாள படுத்த முயல்வதும், அவைகளைஅழிக்க முயல்வதும் அறிவார்ந்த செயல் ஆகாது.
சமூக ஏற்ற தாழ்வுகளுக்கும், அவலங்களுக்கும், இந்திய சாதீயம், மத மரபுகள் முக்கிய காரணம் என்பதில் ஐய்யமில்லை. ஆனால், இந்திய துணைக்கண்டத்தில் எழுந்த மத மரபுகளுக்கு, தெய்வங்களுக்கு, கோவில், மட அமைப்புகளுக்கு பின்னால் மறைந்துள்ள – தத்துவ, ஆன்மிக, அறிவியல், மொழி, இலக்கிய, கலை, இசை, கட்டிட, மருத்துவ, யோக, பொருளாதார வடிவங்கள் – உலக பொக்கிஷங்களாகும். அவைகளை, எந்தவித அரசியல், பொருளாதார, மத போட்டிகளுக்கு பலிஆக்குவதும், அழித்தொழிக்க முயல்வதும் அறிவார்த்தமான செயல் அன்று.

பெரியார் இந்திய மத தத்துவங்களை சாடும்போது சொல்வது “அவைகள் உரிக்க உரிக்க வெங்காயம் மாதிரி – வெற்றுவாதங்கள்” என சாடுவது வழக்கம். எழுத்தாளர் நகுலன் ஒரு கவிதையில் சொல்கிறார் “உரிக்க உரிக்க வெங்காயம்தான்; ஆனால், உள்ளிப் பூண்டின் மணம்?” இதை பெரியாரிஸ்ட்டுகளுக்கு பதிலாக கொடுக்கலாம்தான். நவீன துகள் விஞ்ஞானம் கூட பிரபஞ்சத்தை உரிக்க உரிக்க வெங்காயம் எனவே கருத்தாக்கம் செய்துள்ளது. “கடவுள் இல்லை, கடவுள் இல்லை” என நாத்திகம் பேசினாலும், எந்த மொழியிலும் இல்லாதவிதமாக, தமிழில் “கடவுள்” (உள்ளத்தை கடந்து) என்ற சொல் வேறு ஒரு பொருளையோ / தத்துவத்தையோ குறிப்பதையும் நாம் உணர்ந்துதான் (உணர்த்திதான்) ஆக வேண்டும்.

பெரியாரின் சிந்தனைகள் (iconoclastic and revolutionary) சமூக சீர்திருத்தம் என்ற தளத்தில் சரியானவைதான்; ஆனால், அவர் சுட்டிக்காட்டும் சமூக-அரசியல்-பொருளாதார கட்டுமானத்தில் உள்ள குறைகளுக்கு மூலம் பண்டைய காப்பியங்களும், தத்துவ நூல்களும்தான் என்பதற்க்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. ஆனால், சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் போன்ற அரசியல் நூல்களில் உள்ள குறைகளை சுட்டி காட்டுவதிலும், அவற்றின் பாதிப்பு நவீன சிந்தனையிலும், அரசியல் கொள்கைகளிலும் தவிர்க்கபட வேண்டியவை என்பதிலும் நவீன சிந்தனையாளர் பலருக்கும் உடன்பாடு உண்டு என்பதில் ஐய்யமில்லை.
ஏதோ ஒரு இதழில் படித்ததாக ஞாபகம். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற சங்க கால தமிழ் கவிதைக்கு ஒருவர் கொடுத்திருந்த விளக்கம் வியப்பூட்டியது; “கணியன் பூங்குன்றனார், நாடு கடந்து வியாபாரம் செய்த வணிகர்”; எனவே தான் எல்லாரையும் உறவினர் என்கிறார் என்ற விளக்கம்; இந்த சங்க கால கவிதையை முழுதாக உணர்ந்து அதன் தத்துவ, ஆன்மிக தளங்களை புரிந்து கொள்ளாதவர்கள் செய்யும் குருட்டு, ஆழமற்ற இலக்கிய விமர்சனம் இது. இத்தகைய குருட்டு விமர்சனங்களை – சங்க கால, வேத கால நூல்கள் தொடங்கி, பக்திகால இலக்கியங்கள் தொட்டு, நவீன கால புதுமைப்பித்தன் வரையிலான இலக்கியங்களை – பெரியாரிஸ்ட்டுகளும், தலித்வாதிகளும், பிராமனீயவாதிகளும், மார்க்சியவாதிகளும் செய்கிறார்கள். இதை போன்ற திரிப்புகள், யேசு கிருத்துவின் மீதும், பைபிலில் உள்ள கருத்துகள் மீதும், குரான் மீதும் கூட விமர்சனங்களாக நிகழ்த்தப் படுகின்றன. திரிபுகளும், திரிப்புகளும், பிதற்றல்களும் மதவாதிகளாலும், பழமைவாதிகளாலும் நேர்வதோடு, அதற்க்கு எதிர்வினை செய்யும் நவீனவாதிகளாலும் நிகழ்த்தபடுகிறது.
உலக மறைகள், இலக்கியங்கள் யாவும் “ஆன்மிகமும் அறிவியல் தரிசனங்களும் உண்மைகளும்” குறியீட்டு பொருளாக உணர்த்தபட்ட கவிதைகளும், மந்திர உச்சாடனங்களும் நிறைந்தவை; சொல்லபடும், ஓதப்படும் வாக்கியங்களின் உண்மை, அனுபவ, அறிவியல், தத்துவ, கால பிண்ணனிகளை (contexts) கணக்கில் கொள்ளாமல் குருட்டுவாதங்களை பழமைவாதிகளும் செய்வதுண்டு; நவீன புரட்சியாளர்களும் (புரட்டுவாதிகளும்) செய்வதுண்டு.
நவீன மக்களாட்சியும், தனிமனித உரிமைகளையும், இயற்கை விதிகளை சார்ந்து எழும், சட்ட அமைப்புகளும், பொது சமூக தளங்களில் சம தர்மத்தை காக்கும் அரசியல் அமைப்புகளும் மக்களை இத்தகைய பிறழ்வுகளில் இருந்து காப்பதோடு, மக்களுடைய தொண்ம வளங்கள் (இலக்கியங்கள், மொழி, கலை, மற்ற எதுவாயினும்), கலாச்சார, மொழி உரிமைகளையும், எல்லைகளை கடந்து உலக மக்கள் யாவருக்கும் நலம் கூட்டும் வளங்களை காக்கவும் வழி செய்யும் என நம்புவோமாக.

இந்திய தொன்மங்கள், மரபுகள் யாவும் கட்டவிழ்க்கபட்டு, அவைகள் விஞ்ஞான பூர்வமாக, மறுகட்டமைப்பிற்க்கு உள்ளாகவேண்டும் (deconstruction of rituals, mystic elements, icons, myths, legends). சங்க இலக்கியம் முதல் பக்தி இலக்கியங்கள் வரை மறுவாசிப்பிற்க்கு உள்ளாகி அவைகளில் உள்ள அனுபவ குறியீடுகளுக்கும் (metaphors), நவீன அறிவியல் உண்மைகளுக்கும் ஆன தொடர்புகளையும், அந்த தத்துவ அனுபவங்களை உண்மைகளை கண்டறிய பண்டைய சமூகங்களில் மேற்கொள்ளபட்ட சாதனங்கள் (அவை மொழி, தியானம், கோவில் அமைப்பு, யோகம், தாந்த்ரீகம் ஆகியவையானும் சரி) யாவையும் வெளிகொணர்தல் அவசியம். 1) ஒன்று, புராணங்களிலும், மத சடங்குகள் என்ற தளத்திலும் மறைந்து உள்ள அறிவியல், ஆன்மிக, தத்துவ சாரங்களை வெளி கொணர்தல்; 2) இரண்டு, தொன்ம கலை, இலக்கிய, வடிவங்களை அவற்றின் காலம், வரலாறு, அரசியல் அமைப்பு சாதனங்கள் போன்ற பிண்ணனிகளை கொண்டு (with contextual understanding) மறுவாசிப்பு செய்தல்; 3) மூன்று, பூசாரிகளின் குருட்டு, புரட்டு, (விளக்கமற்ற சொற்கள், செயல்கள்) வாதங்களில் இருந்தும் தொண்மையான கலை, இலக்கிய, ஆன்மிக, மருத்துவ முறைகளையும் வடிவங்களையும் விடுதலை செய்து மக்கள் அனைவருக்கும் அறிவியல் விளக்கங்களுடன் கொண்டு சேர்த்தல்; 4) எதிர்வினையாளர்கள், புரட்டுவாதிகளின் திரிப்புகளில் இருந்தும் தொன்ம வளங்களை காத்தல்.
தமிழகத்தில் உள்ள ஆலயங்களும், மொழியும், தொன்ம இலக்கியங்களும், கலைகளும் யாருக்கு? அவற்றின் பலன்கள்தான் என்ன? இந்திய தமிழ் நாகரீகம் புத்துணர்வு கொள்ளவும், நவீன இயற்க்கை சார்ந்த,அறிவியல் ஆன்மீக தளங்களுக்கு மக்களையும், அரசியலையும், பொருளாதாரத்தையும் நகர்த்தவும், உலகிற்க்கு பல புதிய வழிகளை திறக்கவும் தமிழ்-இந்திய தொன்ம வளங்கள் பெரிதும் உதவ கூடும். இவையனைத்தும் மதவாதிகள், புரோகிதர்கள், புதிய அரசியல் அமைப்புகள், புரட்சியாளர்கள், எதிர்வினையாளர்கள் அனைத்தையும் கடந்து, எந்த வித பாகுபாடும் இன்றி அனைத்துலக தமிழர்களுக்கும் சொந்தமானவை. ஏன், உலக மக்கள் அனைவருக்கும் உரித்தானவை!

Series Navigationநீர் வழிப்பாதைஸ்ரீஆண்டாள்பிள்ளைத்தமிழ்