‘குடி’ மொழி

Spread the love

தேஸூ

சரித்திரகாலத்திலேயே குடிப்பழக்கத்தை கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பதற்கு சத்ரியர்கள் ருசித்த ‘சுரபானமும் ருக்வேதம் சொல்லும் தேவலோகத்து‘சோமபான’மும் உதாகரணங்களாகும். நாட்டுமக்களின் ஆரோக்கியத்தைப் பற்றியோ சமூகத்தைப் பிடித்திருக்கும் குடிப்பேயைப் பற்றியோ பேசி நேரத்தை வீணடிக்காமல் சில ;குடி’க்கதைகளைப் பேசப்போகிறோம்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 8000 கோடி ரூபாய்க்கு அரிசியும் 12000000 கோடி ரூபாய்க்கு மதுபானமும் விற்கப்படுகின்றதாம். இது புள்ளிவிவரம். இது பரந்து கிடக்கும் பாரதத்தில் விரிந்து கிடக்கும் விவசாயம் என்றால் மிகையாகாது. இன்று கண்ணியம் என்றால் ‘குடிப்பழக்கம்’ என்றும் குடிக்காதவன் சமூக அந்தஸ்து அற்றவன் என்றும் பேசுமளவுக்கு ‘குடி’ பொதுமொழியாகிவிட்டது. பதின்ம வயதின் கதாநாயக வெளிப்பாடாக இளவயதினரின் முதல் பழக்கமாயும் குடும்பத்திலிருக்கும் ஆண்களுக்கு சுமை இறக்கியாகவும் கவலையற்றிருப்பதற்காகவும் மற்று சில பெண்களுக்கு மனஅழுத்தத்தின் மருந்தாகவும் சுதந்திரத்தின் வெளியாகவும் இருக்கின்றது.

கைபேசியில் நிறைகின்ற ஓராயிரம் செயலிகளும் உடலும் மனதும் நிறைகின்ற குடிமயக்கமும் இளைஞர்களை ‘மது எதிர்ப்பு’ மருந்துகளின் வியாபார வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமானவர்களாக மாற்றியுள்ளது. நாட்டை நடுக்கும் சாலை விபத்திலும் பெண்களுக்கெதிரான பாலியல் சீண்டல்களிலும் குடிப்பழக்கத்தின் பங்கு நாம் வாசித்தறிந்ததே! இதனால் ஏற்படும் கடன் சுமை தாங்காமல் தற்கொலைகளுக்குள் தஞ்சம் புகுந்தவர்களும் ஏராளம்.

இப்படியாக எத்தனையோ பேர் அலசிவிட்ட எதிர்த்துப் போராடி களைத்துவிட்ட தனிமனித ஒழுக்கமற்ற இக்குடிப்பழக்கம் ஒரு சமூக அவலமாக மாறிவிட்ட நிலையில் இதைப் பற்றி கண்டுகொள்ளாமல் லாபத்திற்காக ஓடும் அரசு ஒரு காரியத்தை மட்டும் மாற்றாமல் தொடர்வதற்காக சகோதர சகோதரிகளே! ஆறுதல் கொள்வோம். அது என்னவென்றால் மதுபானப்புட்டியின் மீது ஒட்டப்பட்டிருக்கும் விவரத்துணுக்கிலிருக்கும் ‘மது அருந்துதல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்’ என்னும் குடிமொழி தான்.

Series Navigationவைரமுத்து போட்ட அவதூறு- கூட்டல் கணக்கும், தமிழறிவைக் கழித்த கணக்கும்.சூத்திரம்