குடை

Spread the love

சேலம் எஸ். சிவகுமார்.

வாழையிலை எடுத்து
வக்கணையாய்க் குடை பிடிக்க
வழிகின்ற மழை நீரு
வகிடெடுத்த தலைமீது
வாலாட்ட முடியாது
வாய்க்காலில் போய்ச் சேர
வரப்பின் வழியாக
வாகாய்த் தடம் பதிச்சு
பாழையூர் பள்ளி போயி
பாடமுந்தான் நான் படிச்சேன்.

ஏழையாயிருந்தாலும்
எட்டு மைல் நடந்து போயி
எல் கே ஜி, யூ கே ஜி
ஏ பி சி டி யெல்லாம்
எப்படியோ படிச்சாத்தான்
எதிர்காலம் என்றென்னை
ஆசையாய்ப் பெத்தெடுத்த
ஆத்தா நெனச்சதனால்
அம்புட்டுப் பாடமுந்தான்
ஆறுவமா நான் படிச்சேன்.

அக்கரை டவுனு போயி
அல்லாமும் படிச்சுபுட்டு
அங்கேயே இஸ்கூலில்
இங்கிலீசு வாத்தி வேலை.

பள்ளிவிட்டு போற வழி
பந்தாவா குடை பிடிச்சு
பெருமழையில் போகையிலே
வாழையிலை குடையோட
வாசனையை நான் நெனைச்சு
வந்த நெனைப்பெல்லாம்
வண்டாத் தொளைச்செடுக்க
வச்சிருந்த குடை மடக்கி
வெறுந்தலையில் நான் நனைஞ்சேன் .

__________________________________________

Series Navigationகலாம் ஆ.. ப. ஜெ. அப்துல் கலாம்படித்தோம் சொல்கிறோம் வன்னிக்காடுறை மனிதர்களின் நிர்க்கதி வாழ்வைப்பேசும் ஆதிரை